Monday, January 10, 2011

ஆசையாய் ஆசையாய்... ஆசையில் ஓர் முடிவு

சிந்தனைக்கு: தெளிவான ஒரு குறிக்கோளை நோக்கி முயற்சி செய்
ஆசை
ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன்மேலே என்பது தான் ஆசையின் உச்சக்கட்டம். அப்படிப்பட்ட ஆசையை பற்றி நம் முன்னோர்கள் கூறுவது.

நெருப்பை புகை மறைப்பது போல், கண்ணாடியைத் தூசி மறைப்பது போல், வயிற்றில் வளரும் குழந்தையைக் கருப்பை மறைப்பது போல் ஆசை அறிவை மறைக்கும் என்று அழகான உவமைகளுடன் விளக்குகிறது பகவத்கீதை.

அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான் என்கிறது மகாபாரதம்.

துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்.

நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால் அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்பபோக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக் கறியின் சுவை அவன் நாவில் நீரை வரவழைத்தது. அதை உண்டு பசியாற வேண்டுமென்று அவனுள் ஆசை எழுந்தது.

ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டுவந்த கலனில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு வளர்த்து, ஆமையைக் கொதிகலனில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெது வெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. ‘என்ன சுகம், என்ன சுகம்’ என்று அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.

உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்

திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல்

தெளிவிலாதேன…

‘எல்லை மீறினால் எதுவும் துன்பமே’ என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா, இல்லை… நமக்கும்தானே?


ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று புத்தரும் ஆசைதான் பட்டார். எனவே ஆசைகள் இல்லாத மனிதன் இல்லை, அந்த ஆசை பேராசையாக மாறும் போதுதான் பிரச்சினைகளும், துன்பங்களும் ஏற்படுகிறது. எனவே அளவோடு ஆசைபடுவோம் அன்போடு மகிழ்ச்சியாக நலமுடன் வாழ்வோம்.


டிஸ்கி 1: முந்தைய பதிவான சிரிப்பு போலிசுக்கு எதிர் பதிவு சத்தியமா (இல்ல) என்ற தலைப்பில் அழகான ஓவிய படங்களை பதிவிட்டு அதற்கான கமெண்டும், யாரு வரைந்தது என்று கண்டுபிடிக்க சொல்லியிருந்தோம். நண்பர்கள் கமென்ட் மட்டும்  வழங்கி வரைந்தது யார்?? என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லியிருந்தார்கள். படத்திற்கான கருத்துரை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி

டிஸ்கி 2 : அந்த அழகிய ஓவிய படங்களை வரைந்தவர் சிங்கையின் சிங்கம் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. வைகை அவர்கள். அந்த படங்கள் அனைத்தும் கணினியில் பெயிண்ட் அப்ளிகேஷனில் மவுசின் துணைகொண்டு வரைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர்கள் யாரும் கண்டுபிடிக்காத காரணத்தினால் அந்த இலவச சுற்றுலாவுக்கென வைத்திருந்த பணங்களில் அண்ணன் வைகை அவர்களை குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் கொண்டாட சிங்கை குரூப்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.  

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்