Wednesday, January 26, 2011

அமைதி கொண்டாட்டம்


வணக்கம் நண்பர்களே, இன்று (26.1.2011) 62 ஆவது குடியரசு தினம், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்.அமைதி கொண்டாட்டம்

அமைதியாய் எழுத விழைந்த இந்த எழுத்துக்களை அமைதியின் உருவமான திருவருளும், குருவருளும் ஆட்கொள்ளட்டுமாக. வாழ்க வளமுடன். அமைதியாய் உருவானோம் தாயின் கருவறையில். வயிற்றிலிருந்து வெளி வந்த கணமே ஆரம்பித்தோம் நம் சப்தத்தை. ஆஹா ! எத்தனை விதமான சப்தங்கள், ஆரவாரங்கள். தொடர்ந்து கொண்டேயிருக்கும் இதற்கு இடையில் சப்தங்களின் மூலமான ஒன்றை சிந்திக்க நேரம் காண்பதில்லை. அப்படியே விழைந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை விடுவதில்லை. காரணம் என்ன ? அமைதியை மற்றுமொரு கோணத்திலே பார்க்க முனைந்தால், மூலத்திலேயே என்றும் நிலைத்து நிற்க மனம் எத்திக்கும்.

கொண்டாட்டம் என்றால் நிறைய பேசவது, ஆடுவது, பாடுவது இப்படி பழகி போன மனத்திற்கு அதன் உண்மயான நிலையென்ன என்பதை மறைக்கிறது. உண்மையான கொண்டாட்டத்தினை அமைதியில் பார்க்கமுடியும். பேரானந்த களிப்பிலே எப்போதுமே திளைத்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள் அமைதியில்தான் இந்த நிலையை அடைந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் எண்ணிலடங்கா !

             சாதரண வழக்கிலே, கொண்டாட்டம் என்றால் நிறைய ஆட்கள் தேவை. கொண்டாட இடம் தேவை (வாடகை வேறு தரவேண்டும்), நிறைய பொருட்கள் வேண்டும். அமைதி என்ற கொண்டாடத்திற்கு பிரபஞ்சமே இடமாக கிடைக்கும், வாடகை என்பதில்லை, தனியொருவரே போதும், இறைவன் மட்டும் இணைந்து கொள்வார். மனம் என்ற ஒன்று மட்டுமே போதும்.

           அமைதி கொண்டாட்டதிற்கு நிகராக எதையுமே நாம் ஒப்பிட முடியாது. உண்மையான ஆனந்தம், பேரானந்தம் இங்குதான் கிட்டும். மெளனம் என்ற ஒன்றைப் பற்றிய மகான்களின் சிந்தனையை பார்ப்போம்.

யோகஸ்தய பிரதமம் வாக் நிரோத என்பதில் ஆதிசங்கர பெருமாகன் யோகத்தின் நுழைவாயில் மெளனம் என்பதை கூறிப்பிடுகிறார்.

நாக்கு அசையாமல் இருந்தால் வாக்கு மெளனம்.

உடம்பு அசையாமல் (சைகைகள் காட்டாமல்) இருந்தால் காஷ்ட மெளனம்.

மனம் அசையாமல் (சிந்தையற்று நின்றால்) இருந்தால் மஹா மெளனம்.

மெளனம் லேகநாஸ்தி – வீட்டில், வெளி தொடர்பில், உறவு முறையில் பிரச்சனை இல்லாமல் செய்வது மெளனம்.

 மெளனம் சர்வார்த்த சாதகம் – தர்ம, அர்த்த, காம, மோட்சம் – அறம், பொருள், இன்பம், வீடு என்ற செல்வங்களை அடைய சாதகமாக உள்ளது.

              வாய்ப் பேச்சை குறைத்தாலே வையகத்தில் பாதி சித்தி
           பேசுவதிலே ஒரு இன்பம் இருக்கின்றது. ஆனால் அதில் அளவும் முறையும் மீறும் போது வாக்கில் தெளிவையும், புத்தியில் கூர்மையையும் இழக்கச் செய்து வாழ்க்கைச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மெளனத்தினால் வாக்கில் தெளிவு ஏற்படுகிறது, புத்தி கூர்மை பெறுகிறது.

            அமைதி, மெளனம் என்பது மாபெரும் சேவையாகும்.

           இன்று பேசப்படும் (Pollutions: Air, Water, Sound, Environmental, Light, Marine, Thermal, Nuclear) மாசுபாடுகள் அனைத்தையும் விட மிக அழிவைத் தரக்கூடிய ஒன்று எண்ணம் மாசுபடுதல் (Thought Pollution / Mind Pollution). இவற்றைப் பற்றி எந்த ஒரு விஞ்ஞானியும் கவலைப் பட்டதில்லை, ஏதோ ஒரு சில அறிஞர்கள் பேசுகின்றனர். மெஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதைப் பற்றிய ஆராய்ச்சி செய்து நமக்கு நல்வழி படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் கடைபிடித்தால் நன்மை நமக்கே.........

                              மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு

                                               முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?

                            மோனமே அறிவினது அடித்தளம் ஆம்;

                                              மிகவிரிவு! எல்லையில்லை! காலம் இல்லை!

                             மோனத்தின் அறிவு தோய்ந்து பிறந்தால்,

                                             முன்வினையும் பின்வினையும் நீக்கக் கற்கும்;

                             மோனநிலை மறவாது கடமை ஆற்ற,

                                    மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்.

                                                      - வேதாத்திரி மகரிஷி, ஞானக் களஞ்சியம், (பாடல்:1640)

          மகான்களின் முழுமையான கொண்டாட்டங்கள் அமைதியில்தான் மலர்ந்தது, நாமும் அவர்கள் வாழ்ந்த அந்த அனுபவங்களைக் கொண்டு, அமைதி கொண்டாட்டத்தினை கடைபிடிப்போம் வாழ்க்கையில் சிறந்து, அனைவரையும் மகிழ்விப்போம்.

         உங்கள் ஆடைகள் வெளுக்க, உடல் பளபளக்க பலவிதமான Soap உள்ளது, உங்கள் மனம் வெளுக்க மெளனம் உள்ளது.

          நீங்கள் பேசாத போது இறைவன் பேசிக் கொண்டிருக்கிறான். மனதை அடக்க நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும் என்ற வேதாத்திரி மகரிஷி கூற்றை மனதில் கொண்டு அமைதியில் ஆழ்வோம், பிரபஞ்சம் முழுவதையும் உலாவருவோம் மனவளக்கலை என்ற தேரினிலே !!!!!!

            இறுதியாக, Speech is Silver but Silence is Golden என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. உங்களுக்கு வேண்டியது வெள்ளியா ? தங்கமா ? முடிவு உங்களிடம் தான்.
--(பேராசிரியர். இராஜசேகரன்)

இப்படி நாம் எவ்வாறு மனஅமைதி கொள்ள வேண்டும் என்பதுபற்றி அழகாக கட்டுரை எழுதிய பேராசிரியர் இராஜசேகரன் ஐயாவுக்குக்கும், இதுபோன்ற ஆன்மீகம் சார்ந்த விசயங்களை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் எனக்கு ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களையும் பேராசிரியர் போன்றவர்களின் எழுத்துக்களையும் அறிமுகபடுத்தி இன்றுவரையும் இனியும் எனக்கு ஊக்கமாகவும் உறுதுனையாகவும் இருந்து வருகிற நண்பர் மைனருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்வதில் பெருமையடைகிறேன். நன்றி...!!!

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்...
உங்கள். மாணவன்