Monday, May 14, 2012

மார்க்கோனி (வானொலியின் தந்தை) - வரலாற்று நாயகர்!

வானொலி உங்களில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர். வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும். இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான். அந்த வானொலியை உலகுக்குத் தந்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் ஒலிப்பரப்பை வான் அலைகளில் உலா வரச்செய்த ஒருவரைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.  

வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்த அவர்தான் 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் மார்க்கோனி. 1874-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார் குலீல்மோ மார்க்கோனி. தந்தை வசதி வாய்ந்த தொழிலபதிர். எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி வழங்கப்பட்டது. வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய நூலகத்திலிருக்கும் புத்தகங்களை படித்து மகிழ்வதுதான் மார்க்கோனியின் பிள்ளைப்பருவ பொழுதுபோக்கு. சிறு வயதிலேயே அவருக்கு மின்சக்தி ஆராய்ச்சியிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இருந்தது. அப்போது புகழ் பெற்றிருந்த விஞ்ஞானிகளான  Maxwell, Hertz, Faraday போன்றவர்களின் கண்டுபிடிப்புகளையும், கருத்துகளையும் மிக விரும்பி படித்தார். தன் வீட்டின் பரணில் ஒரு சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை சொந்தமாக நிறுவி மின்சக்தி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்தார்.


மார்க்கோனிக்கு 20 வயதானபோது கம்பியில்லாமல் ஒலி அலைகளை (Radio Waves) அனுப்புவது பற்றி  Heinrich Hertz என்ற விஞ்ஞானி செய்திருந்த ஆராய்ச்சிகள் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக ஆர்வம் ஏற்படவே அதைபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராப் ("wireless telegraphy") அனுப்பும் முறையை உருவாக்கினார். அப்போது அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி. இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்துப் பார்க்க என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா? என்றெல்லாம் சோதித்துப் பார்த்தார். பல சோதனைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அப்போது அவரது சோதனைகளைக் கண்டு நகைத்த கூட்டம்தான் அதிகம். ஆனால் ஏளனமாக நகைப்போரையும், கேலி பேசுவோர்களையும் மறந்து போகும் வரலாறு அந்த ஏளன சிரிப்பையும், கேலிப் பேச்சையும் தாண்டி வெற்றி பெற்றவர்களைத்தானே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அதனை உணர்ந்ததாலோ என்னவோ தனது சோதனைகளை தொய்வின்றித் தொடர்ந்தார் மார்க்கோனி.


1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார். 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார். அவர் உருவாக்கிய கருவிகளின் மகிமையை உணர்ந்த கடற்படை போர்க்கப்பல்களில் அந்தக் கருவிகளை பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கியது. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. 1901-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பனிரெண்டாம் நாள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக்காட்டினார் மார்க்கோனி. 

வானொலி அலைகள் நேரடியாக செல்லக்கூடியவை என்றும், உலகம் உருண்டை என்பதால் கூடப் போனால் இருநூறு மைல்கள் வரைதான் அவை பயணிக்க முடியும் என்றும் அப்போது நம்பப்பட்டது. ஆனால் உலகின் உருண்டை வடிவத்திற்கும் வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பினார் மார்க்கோனி. அன்றைய தினம் Newfoundland-ன் St. John's தீவில் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை காதுகளில் அணிந்து கொண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். 2100 மைல் தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் (Cornwall) என்ற பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.


தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கம்பியில்லா தந்தி முறையை நிறுவிக் கொடுத்தார். அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம் எல்லாம் மாஸ்கோட் எனப்படும் குறியீட்டு முறையில் இருந்தன. அதே அடிப்படையில் மனித குரலையும் அனுப்ப முடியும் என்று நம்பிய மார்க்கோனி 1915-ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது. வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.


வானொலி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் தமது 63-ஆவது அகவையில் ரோம் நகரில் காலமானார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை மகிழ்வித்து வந்திருக்கிறது வானொலி. வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் அது செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும் இன்றும் பலரது வாழ்க்கையில் வானொலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. வானொலியில் ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட பிறகு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையில் மார்க்கோனிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

மார்க்கோனியின் விடாமுயற்சியால்தான் அதுவரை நிசப்தமாக இருந்த வானம் அதன் பிறகு குரல் மூலமும், இசை மூலமும் பேசத் தொடங்கியது. வான் அலைகளுக்கு உயிரூட்டிய மார்க்கோனியின் கதை நமக்கு சொல்லும் உண்மை எளிதானதுதான் தொலைநோக்கும் விடாமுயற்சியுடன் சேர்ந்த கடின உழைப்பும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இதே பண்புகளை பின்பற்றும் எவருக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

10 comments:

  1. Paada bothagangalil.....
    Padithirunthaalum......

    Ungal kaivannathil........
    Padikkum pothu.....
    Sema.....

    Nanri maanavan.....!!!!!!!

    ReplyDelete
  2. அருமையான வரலாற்று பதிவு ஐயா மாணவரே ..ஒவ்வொரு வாரமும் நீங்க அடுத்த வரலாறு யாரை பற்றி எழுதுகீறீர்கள் என்று ஆவலோட உங்கள் தளம் வருகிறேன் ..

    ReplyDelete
  3. வரலாற்று நாயகர்களின் நாயகன் மாணவன் அவர்களை என்று நாம் இந்த பட்டியலில் பார்க்க போகிறோம்?

    ReplyDelete
  4. ரொம்ப வருடங்களுக்கு பிறகு இப்போத்தான் மார்கோனி பற்றி படிக்கிறேன் ..,

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு....
    அறியக் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. அருமையான விஞ்ஞானியைப்பற்றி தமிழில் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. நன்றி, வானொலி நாயகனின் பதிவினை எழுதியமைக்கு. ஆனால் வானொலி கண்டுபிடிப்பாளர்களில் நிகோளஸ் டெஸ்லா மற்றும் ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்களின் வரலாற்றினையும் எழுதினால் மகிழ்ச்சி

    ReplyDelete
  8. சிம்ப்ளி சூப்பர்ப், தம்பி நான் உங்கள் பதிவுகளின் தாக்கத்தை விட நீங்கள் விவரிக்கும் வார்த்தை ஜாலங்களை மிக விரும்பி ரசிக்கிறேன், அற்புதமாக இருக்கிறது உங்கள் வார்த்தை பிரயோகங்கள்..

    உதாரணத்திற்கு

    [co="Green"]ஏளனமாக நகைப்போரையும், கேலி பேசுவோர்களையும் மறந்து போகும் வரலாறு அந்த ஏளன சிரிப்பையும், கேலிப் பேச்சையும் தாண்டி வெற்றி பெற்றவர்களைத்தானே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது[/co]

    அன்புடனும் வாழ்த்துகளுடனும்
    ஞானசேகர் நாகு

    ReplyDelete
  9. சிறப்பான ஒரு கட்டுரை. பாராட்டுக்கள். இதனோடு தொடர்புடைய ஒரு தகவலையும் தர விரும்புகிறேன். வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி வடிவமைத்த வானொலி ஒன்று, இன்றும் தமிழ் உட்பட 44 மொழிகளில் ஒலிபரப்பை ஆற்றி வருகின்றது. உரோம் நகரால் சூழப்பட்ட வத்திக்கான் நாட்டிலிருந்து இயங்கும் இந்த வானொலி, 1931ம் ஆண்டு பெப்ருவரி 12ம் தேதி மார்க்கோனி முன்னிலையில் போப் 11ம் பயஸால் துவக்கி வைக்கப்பட்டது.

    ReplyDelete
  10. மிகவும் எளிதான முறையில் படிப்பவர் சுவைக்கும் வகையில் உங்களது பதிப்புகள் அனைத்தும் காணப்படுகின்றன.வாழ்க வளர்க உம் பணி.வாழ்த்துக்களுடன் DJ சுபாஷ் இலங்கை மண்ணில் இருந்து.

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.