Thursday, May 17, 2012

எட்வர்ட் ஜென்னர் - வரலாற்று நாயகர்!

மருத்துவ சிகிச்சையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று நோய்கள் வராமல் தடுக்க சிகிச்சை வழங்குவது, மற்றொன்று வந்த நோய்களை குணப்படுத்த சிகிச்சையளிப்பது. இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் சில நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு சிகரெட் புகைக்காதிருந்தால் நுரையீரல் புற்று நோயைத் தவிர்க்கலாம். ஆனால் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும் வந்தே தீரும் என சில நோய்கள் இருந்தன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை. காரணம் தெரியாமல் வந்த அந்த நோய்கள் மனுகுலத்தை ஆட்டிப் படைத்தன. அப்படிப்பட்ட கொடிய நோய்களுள் ஒன்று 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய். பயங்கர தொற்று நோயாக இருந்து பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருந்த அந்த நோயை தடுக்கும் முறையைக் கண்டுபிடித்த ஒரு மருத்துவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் உலகத்தின் முகத்திலிருந்து பெரியம்மை நோயை ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்த உன்னத மருத்துவர் எட்வர்ட் ஜென்னர்.  


1749-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் இங்கிலாந்தின் பெர்க்லி (Berkeley) என்ற நகரில் பிறந்தார் எட்வர்ட் ஜென்னர். அப்போது தொழிற்புரட்சி ஏற்படாத காலம். பசுமை மாறாத வயல்களையும், பண்ணைகளையும் அந்த பிஞ்சு வயதிலேயே காதலிக்கத் தொடங்கினார் ஜென்னர். இயற்கையை அதிகம் நேசித்த அவர் நோய்களை இயற்கையின் எதிரியாகப் பார்த்தார். எனவே ஒரு மருத்துவராகி இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் பிஞ்சு வயதிலேயே அவர் மனதில் வளரத் தொடங்கியது. வயல்வெளிகளில் சுற்றும்போது பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்தே அது எந்த பறவை என்பதையும், வயல் ஓரங்களில் இருந்த அத்தனை செடிகளின் பெயர்களையும் சொல்லும் திறமை அவரிடம் இருந்தது. எதையுமே கூர்ந்து கவனிக்கும் அவரது சிறந்த பண்புதான் பின்னாளில் 'Vaccination' எனப்படும் அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியது.

பனிரெண்டு வயதானபோது அவர் டாக்டர். டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்கு சேர்ந்தார். அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கையை உற்றுக் கவனித்தார்.  'cowpox' எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை. எனவே பெரியம்மை நோய் வராமல் தடுக்க cowpox நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ள ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா? என்று ஆராயத்தொடங்கினார். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் இருபது ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தார். 

1792-ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவ பட்டம் பெற்றார். Gloucestershire என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை அவர் தேடிய விடையை அவருக்குப் பெற்றுத் தந்தது. இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்த்தால்தானே உலகம் நம்பும் அதற்கும் தயாரானார் 1796-ஆம் ஆண்டு. அந்த ஆண்டு மே 14-ஆம் நாள் ஜேம்ஸ் பிப்ஸ் (James Phipps) என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர்.  Sarah Nelmes என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த cowpox கொப்புளத்திலிருந்த எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு  cowpox நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குணமடைந்தான். 

சில வாரங்கள் கழித்து Smallpox கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் எண்ணித் துணிந்ததால் சற்றும் மனம் தளராமல் அந்த வரலாற்று சிறப்புமிக்க தடுப்பூசியை குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது. அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798-ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். 

பிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மைக் குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை உலகெங்கும் விரைவாக பரவியது. எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். 


மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர். அம்மை நோயை துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன. 

எட்வர்ட் ஜென்னர் எந்த அளவுக்கு உலக மரியாதையைப் பெற்றிருந்தார் என்பதற்கு ஒரு குறிப்பு...அவர் அறிமுகப்படுத்திய அம்மைக் குத்தும் முறை பிரான்ஸிலும் பரவி நல்ல பலனை தந்ததைத் தொடர்ந்து ஜென்னர் மீது அதிக மரியாதை கொண்டார் மாவீரன் நெப்போலியன். அதனை அறிந்த ஜென்னர் பிரான்ஸில் இருந்த சில ஆங்கில கைதிகளை விடுவிக்குமாறு நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஜோசப்பின் அரசியாரின் கைகளுக்கு சென்றது. அவர் நெப்போலியனிடம் அந்த கோரிக்கையை விடுத்தார். முதலில் அதனை நிராகரித்த நெப்போலியன் கோரிக்கையை விடுத்திருப்பது எட்வர்ட் ஜென்னர் என்று அரசி சொன்னவுடன் சற்றும் தாமதிக்காமல் அந்த பெயரை தாங்கி வரும் எந்த விண்ணப்பத்தையும் என்னால் நிராகரிக்க முடியாது என்று கூறி அந்த கைதிகளை விடுவித்தாராம். 


Catherine Kingscote என்பவரை மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார் ஜென்னர். 1810-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார். அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவ தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். 1823-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் தமது 73-ஆவது அகவையில் அவர் காலமானார். 

மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்கு பலியாகியிருப்பர். அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாக துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். எதையும் கூர்ந்து கவனிக்கும் பண்புதான் அம்மைக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க எட்வர்ட் ஜென்னருக்கு உதவிய முதல் பண்பு. தாம் கண்டுபிடிக்க வேண்டிய உண்மைக்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இரண்டாவது பண்பு, சமகால மருத்துவர்கள்கூட எச்சரித்த போதும் துவண்டு போகாத அளவுக்கு அவரிடம் இருந்த தன்னம்பிக்கை மூன்றாவது பண்பு, உயிர்காக்கும் தனது கண்டுபிடிப்பை உலகத்தோடு பகிர்ந்துகொண்ட உயரிய எண்ணம் நான்காவது பண்பு. இவையனைத்தும் சேர்ந்ததால் உலகுக்கு கிடைத்ததுதான் அம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்து. சிந்தித்துப் பாருங்கள் இந்த பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் நம்மாலும் எந்த வானத்திலும் சிறகடித்துப் பறக்க முடியும். நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

5 comments:

  1. நிறைய தகவல் .., நன்றி பகிர்வுக்கு ..!

    ReplyDelete
  2. புதிய விசயங்களை அறிந்து கொள்ள உங்கள் வரலாற்றுப் பதிவுகள் உதவுகின்றன.

    ReplyDelete
  3. நல்ல பதிவு. ஆனால், மனித நோய்களை இயற்கையின் எதிரிகளாகப் பார்ப்பது, இன்று இயற்கை அழிந்துவருவதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  4. மகிழ்ச்சியாக உள்ளது ஜென்னர் என்ற மாமனிதனைப் படித்ததினால்.

    ReplyDelete
  5. மகிழ்ச்சியாக உள்ளது ஜென்னர் என்ற மாமனிதனைப் படித்ததினால்.

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.