Saturday, May 5, 2012

மூலதனத்தின் பிறந்த நாள் (கார்ல் மார்க்ஸ்) - வரலாற்று நாயகர்!

"சமுதாயத்தின் இறந்தகால வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு, முதலாளிகளின் பொருளாதார பலம் பெருகப் பெருக தொழிலாளிகள் நசுக்கப் படுகிறார்கள். பொருத்தது போதும் என்று பொங்கியெழுந்து தொழிலாளிகள் ஒன்றுபட்டு முதலாளித்துவ போக்கை மாற்ற வேண்டும். தொழிலாளிகள் தங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள தொழிற்சங்க அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்" என்ற உண்மையை இந்த உலகிற்கு எடுத்துக் கூறிய ஒரு மாமனிதனின் பிறந்த நாளான இன்று (05/05/2011) ஒரு சிறு முயற்சியாக அவரது வாழ்க்கை வரலாற்றுப் பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!

"உலகத்தின் உடமைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவற்றை காலப்போக்கில் சில வசதி படைத்த மனிதர்கள் தங்கள் தனியுடமையாக்கிக் கொண்டனர். தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் வளர்கின்றனர். அதனால்தான் இருப்பவர்கள் சிலரும், இல்லாதவர்கள் பலருமாக சமுதாயம் மாறி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு முதலாளிகள் இணங்க மாட்டார்கள். ஆகவே தொழிலாளிகள் ஒன்று திரண்டு போராடி புரட்சி செய்து தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும்".

இதுதான் பொதுவுடமைக் கொள்கை. இந்த சித்தாந்தத்திற்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு மாபெரும் புரட்சிக்காரரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் 'ஜெர்மானிய தாடிக்காரன்' என்று அறிஞர்களால் மரியாதையுடனும், நேசத்துடனும் அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸ். 1818-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் ஜெர்மனியின் புருசியா என்ற பகுதியில் உள்ள ட்ரையர் எனும் நகரில் பிறந்தார் Karl Heinrich Marx. அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். குடும்பம் வறுமையில் வாடினாலும், மார்க்ஸை சட்டம் படிக்க வைக்க வேண்டும் அதன் மூலம் வறுமையைப் போக்க வேண்டும் என்று தந்தை விரும்பினார். மார்க்ஸின் பெற்றோர் சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும், மார்க்ஸுக்கு இனம், மதம் ஆகியவற்றில் பற்று இல்லை.


மதத்தலைவர்களின் போக்கினை வெறுத்த அவர் மதத்தால் மக்களுக்கு நன்மை ஏதும் கிடைக்காது என்று நம்பினார். இளம் வயதிலேயே அவரது சிந்தனைகள் புரட்சிகரமாக இருந்தன. தன் தந்தையின் எண்ணப்படியே தனது பதினேழாவது வயதில் பான் (University of Bonn) பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் சேர்ந்தார் மார்க்ஸ். ஆனால் வரலாற்றிலும், தத்துவத்திலும் அவரது கவனம் திரும்பியது. நிறைய தத்துவ நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அவர் மனதில் பொதுவுடமைத் தத்துவம் வேர் விடத்தொடங்கியது. தனது பொதுவுடமைக் கருத்துகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு பல்கலைக்கழக மாணவர்களிடம் பரப்பினார். பல்கலைக்கழக நிர்வாகம் அவரை கண்டித்தும் அவர் தொடர்ந்ததால் வேறு வழியின்றி அவரை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியது.

சட்டத் துறையை ஏற்கனவே விரும்பாத மார்க்ஸ் பின்னர் பெர்லின் ( University of Berlin) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் பயின்றார். 1841-ஆம் ஆண்டில் மார்க்ஸுக்கு தத்துவத்தில் முனைவர் பட்டம் கிடைத்தது. அதன் பிறகு அவரது சிந்தனைகள் மேலும் விரிவடைந்தன. பல்கலைக்கழக நாட்களில் ஜென்னி என்ற பெண்ணை விரும்பினார் மார்க்ஸ். செல்வந்தர் வீட்டுப் பெண்ணான ஜென்னியும் அவரை விரும்பினார். ஆனால் இருவருக்கும் இடையில் இருந்த பொருளாதார வேற்றுமைகளை காரணம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஜென்னியின் தந்தை. காதலின் பலம் அவர்களை ஒன்று சேர்த்து வைத்தது. காதலுக்காக செல்வ சுகத்தை தூக்கி எறிந்த ஜென்னி கடைசிவரை கார்ல் மார்க்ஸுக்கு ஆனிவேராக இருந்தார்.

முனைவர் பட்டம் பெற்ற பிறகு ஜெர்மன் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக பொறுப்பேற்றார் மார்க்ஸ். ஆனால் அவரது புரட்சிகரமான எழுத்துக்கு அரசாங்கம் தடை விதித்தது. எனவே பாரிஸுக்கு சென்றார் அங்கு அரசியல் கட்டுரைகளை பல பத்திரிகைகளில் எழுதினார் அவை ரஷ்ய அரசாங்கத்தை தாக்குவதாக இருந்ததால் ரஷ்யா கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரை நாடு கடத்தியது பாரிஸ். இந்த சமயத்தில் மார்க்ஸுக்கு Friedrich Engels என்பவரின் நட்பு கிடைத்தது. ஒரு முதலாளியின் மகனாக இருந்தும், தொழிலாளர்கள் நலனைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் ஏங்கல்ஸ். எனவே இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தொழிலாளர் நலனை மேம்படுத்த மார்க்ஸும், ஏங்கல்ஸும் திட்டம் தீட்டினர்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை எப்படி போராடி பெறுவது என்பதை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுவுடமை அறிக்கை என்ற பெயரில் இருவரும் வெளியிட்டனர். அதில் முதலாளித்துவ சமுதாய அமைப்பினை வன்முறை புரட்சிகளால் உடைத்தெறியுமாறு தொழிலாளிகளுக்கு அறிவுறுத்தினார் மார்க்ஸ். 1847-ஆம் ஆண்டு லண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (The Communist Manifesto) என்ற கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தி 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Workers of All Land Unite) என்ற முழக்கத்தை மார்க்ஸும், ஏங்கல்ஸும் முன்வைத்தனர். மார்க்ஸ் பல நாடுகளில் சுற்றித் திரிந்து தன் கொள்கைகளைப் பரப்பினார். கடைசியில் 1849-ஆம் ஆண்டு ஏங்கல்ஸின் உதவியுடன் அவர் லண்டனில் நிரந்தமராக குடியேறினார்.


பெரும்பாலான நேரங்களை அவர் பிரிட்டிஸ் அரும்பொருளகத்தில் நூல்களை படிப்பதில் செலவிட்டார். அப்போது அவர் அதிகம் சிந்தித்து எழுதிய அவரது முதல் நூல் கேப்பிடல் (Das Capital) அதாவது மூலதனம்.

"சமுதாயத்தின் இறந்தகால வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு, முதலாளிகளின் பொருளாதார பலம் பெருக பெருக தொழிலாளிகள் நசுக்கப்படுகிறார்கள். பொருத்தது போதும் என்று பொங்கியெழுந்து தொழிலாளிகள் ஒன்றுபட்டு முதலாளித்துவ போக்கை மாற்ற வேண்டும். தொழிலாளிகள் தங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள தொழிற்சங்க அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்".

இதுதான் மூலதனம் என்ற அந்த நூலில் கார்ல் மார்க்ஸ் வாதிட்ட அடிப்படைக் கருத்து. இன்று உலகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் இருப்பதற்கு காரணம் கார்ல் மார்க்ஸ்தான். மார்க்ஸின் பொதுவுடமை கருத்துகள் உலகம் முழுவதும் பரவி வலுப்பெறத் தொடங்கின. மார்க்ஸ் முன்னுரைத்தது போலவே புரட்சிகள் வெடிக்கத் தொடங்கின. 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நவம்பர் புரட்சி நடந்து லெனின் தலமையில் பொதுவுடமை ஆட்சி (கம்யூனிஸ்ட் ஆட்சி) மலர்ந்தது. அதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக ச்செக்கோஸ்லோவாகியா, யூகோஸ்லாவியா, கிழக்க்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, பல்கேரியா, ருமேனியா, அல்பீரியா, சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளுக்கு கம்யூனிசம் பரவியது.

உலகம் உய்வு பெற வேண்டும் என்று உழைத்த மார்க்ஸின் குடும்பம் வறுமையில் உழன்றது. பணக்கார குடும்பத்திலிருந்து வந்தும் தனது கணவரின் கொள்கைக்காக அனைத்தையும் துறந்த ஜென்னி, தாங்கள் அனுபவித்த வேதனைகளையும், தனது மகளின் மரணத்தையும் டைரியில் குறித்திருக்கிறார் இவ்வாறு...

"எங்கள் குட்டி தேவதை பிரெஞ்சஸ்கா மார்புச் சளியால் மூன்று நாட்கள் மூச்சு திணறி இறந்தாள். எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அவள் பிறந்தபோது தொட்டில் வாங்ககூட எங்களிடம் காசு இல்லை, இறந்தபோது சவப்பெட்டி வாங்ககூட காசு இல்லை".

மார்க்ஸ் என்ற மாமனிதனுக்கு தூணாக நின்ற ஜென்னிக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கு மருந்து வாங்ககூட முடியாமல் தவித்தார் உலகம் உய்வு பெற வேண்டும் என்று கனவு கண்ட மார்க்ஸ். ஜென்னியையும் மரணம் கொண்டு போக நிலைகுலைந்து போன மார்க்ஸ் இரண்டே ஆண்டுகளில் 1883-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் தனது 64-ஆவது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

மார்க்ஸின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு பேசிய, அவரது உயிர் நண்பர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மார்ச் 14-ஆம் தேதி மாலை மூன்று மணியாவதற்கு 15 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்தி விட்டார். இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப் பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது சாய்வு நாற்காலியில் மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டதைக் கண்டோம்." என்றார். 


பாட்டாளிகளை அவர் அன்புடன் 'காம்ரேட்ஸ்' அதாவது 'தோழர்களே' என்றுதான் அழைத்தார். இன்றும்கூட தொழிற்சங்கங்களில் அந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவுடமைக் கொள்கையில் அடிப்படையில் எந்த பிரச்சினையும் கிடையாது. கம்யூனிசத்தின் இன்றைய அழிவிற்கு அது நடைமுறைப் படுத்தப்பட்ட விதம்தான் காரணமே தவிர, அதன் அடிப்படை நோக்கங்கள் அல்ல. அந்த நோக்கங்கள் உயரியவை. மார்க்ஸ் நினைத்தது போலவே அது செயல்படுத்தப் பட்டிருந்தால் அதைவிட ஒரு நியாயமான பொருளியல் சித்தாந்தம் இருக்குமா என்பது சந்தேகமே.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் 'சமதர்மகொள்கை' என்ற தன் இலக்கிலிருந்து மாறவே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன். அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான். ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸுக்குதான் நன்றி சொல்கிறது வரலாறு. மார்க்ஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்...துன்பமும், துயரமும் போட்டிப் போட்டுக்கொண்டு நம்மை தாக்கினாலும், நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும், நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

"உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்!
நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை-
அடிமைத்தனத்தை தவிர! ஆனால் 
வெல்வதற்கு  இந்த உலகமே இருக்கிறது!" 

"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!"
-கார்ல் மார்க்ஸ்

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

5 comments:

 1. ///////நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது////

  அருமையான சிந்தனை ..!

  நிறைய தகவல் தெரிந்துகொண்டேன் மாணவரே.., தொடருங்கள் ...!

  ReplyDelete
 2. அந்த மாகானைப்பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.....
  பரவாயில்லை எழுதியவரைக்கும் மிக்க நன்றி

  ஜென்னி மார்க்ஸ் எழுதிய "எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை "
  முடிந்தால் படியுங்கள். சில அறிய தகவல்களும், கண்ணீரும் பரிசாக கிடைக்கும்

  ReplyDelete
 3. அருமையான தகவல் தொகுப்பு ,,, நன்றி நண்பா

  ReplyDelete
 4. மூலதன நாயகன் கார்ல் மார்க்ஸ் பற்றி தெரிந்து கொண்டேன்...
  அருமையான தொகுபபு நண்பா.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. enakku marxsai ariyamaleya antha thathuvam erpattuvitathu. kadavul endra kolhaiyil siru marubadu irunthalum ellorukkum ellam vendum enbathil uruthiyudan ullen. tholil changam kanda mahanukku en nanri. tholil changathai thavaraga payanpaduthuvor marx endra mahanukku seiyum throgam. poimaiyum emartruthalum illa irai nambikkaiyum ayvil undu. tholar marx, engel iruvarukkum en red salute.

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.