Thursday, April 5, 2012

ஜோசப் லிஸ்டர் (நவீன அறுவை சிகிச்சையின் தந்தை) - வரலாற்று நாயகர்!

வணக்கம் நண்பர்களே,
மருத்துவ உலகில் 'நவீன அறுவை சிகிச்சையின் தந்தை' என வரலாறு போற்றும் ஜோசப் லிஸ்டர் அவர்களின் பிறந்த நாளான இன்று (05/04/2012) அவரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவு ஒரு நினைவு மீட்டல்...!


'மரண பயம்' என்பது, ஒன்று சிறைச்சாலைகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் கைதிகளுக்கு ஏற்படும் அல்லது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழலில் இருப்பவர்களுக்கும் ஏற்படும். ஆனால் சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு வரை நோய்வாய்ப் பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் கூட மரண பயம் ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போதெல்லாம் 'உறுப்பு மாற்று' அறுவை சிகிச்சைகளைகூட சர்வ சாதரணமாக செய்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் சாதரண அறுவை சிகிச்சை தேவைப் பட்டவர்கள்கூட உயில் எழுதி வைத்து விட்டுதான் சிகிச்சை செய்து கொண்டனர். சிகிச்சைக்குப் பிறகு இறந்து விடுவோம் என்ற 'மரண பயம்' அனைவரையும் வதைத்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

அறுவை சிகிச்சை செய்து கொண்டவரில் 50 விழுக்காட்டினர் ஒருசில நாட்களில் இறந்து விடுவது சர்வ சாதாரணமாக நடந்த ஒன்று. அவர்களுக்கெல்லாம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதிகளில் 'செப்ட்டிக் பாய்சனிங்' என்ற விஷம் ஏற்பட்டு அது உடல் முழுவதும் பரவியதால் மரணம் சம்பவித்தது என்பது இப்போது நமக்கு தெரியும் உண்மை. ஆனால் அப்போது அதனை அறிந்துகொள்ளாத மருத்துவ உலகம் என்ன செய்வதென்று அறியாது திகைத்தது. பல மருத்துவர்கள் வேறு வழியில்லை என்று சொல்லி சிகிச்சைகளை தொடர்ந்தனர். ஆனால் ஒரு மருத்துவர் மட்டும் அந்த மரணங்களை எப்படியாவது தடுக்க வேண்டுமே என்று விரும்பினார். தடுக்க முடியும் என்று நம்பினார். அந்த தனி ஒரு மனிதனின் வைராக்கியமும், விடாமுயற்சியும், மனித உயிர்களை காப்பதுதான் மருத்துவர்களின் கடமை என்ற திடமான நம்பிக்கையும் தான் அவருக்கு 'நவீன அறுவை சிகிச்சையின் தந்தை' என்ற பெயரையும், புகழையும் பெற்றுத் தந்திருக்கின்றன. அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜோசப் லிஸ்டர்.


இங்கிலாந்தின் எசக்ஸ் (Essex) மாநிலத்தில் அப்டான் (Upton) எனும் நகரில் 1827-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் பிறந்தார் ஜோசப் லிஸ்டர். சிறு வயதிலிருந்தே பிறரின் வேதனைகளைக் கண்டு இரங்கும் குணம் அவருக்கு இருந்தது. நோயினால் அவதியுறுவோரின் வேதனைகளை கேட்டும், சில சமயங்களில் நேரடியாக பார்த்தும் தான் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக வர வேண்டும் என்ற எண்ணத்தை சிறு வயதிலிருந்தே அவர் வளர்த்துக்கொண்டார். அதுவும் சாதாரண மருத்துவராக இல்லாமல் உயிருக்கு உத்தரவாதம் தரும் மருத்துவராக வர வேண்டும் என்று கனவு கண்டார். பல வரலாற்று நாயகர்களைப் போலவே இவரது கனவையும் நனவாக்கிக் காட்டியது வரலாறு.

மருத்துவ படிப்பை முடித்ததும் தான் விரும்பிய அறுவை சிகிச்சைத் துறையிலேயே சிறப்புத் தேர்ச்சி பெற்றார் லிஸ்டர். அப்போது புகழ் பெற்றிருந்த ஜேம்ஸ் சிமி (James Syme) என்ற அறுவை சிகிச்சை நிபுனரிடம் உதவியாளராக சேர்ந்தார். பிந்நாளில் அவரது மகள் ஏக்னஸையே திருமணம் செய்து கொண்டார். மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அவரது போராட்டத்தில் மிகப்பெரிய பலமாக இருந்தவர் அவரது மனைவி ஏக்னஸ். 30 வயதானபோது கிளாஸ்கோ மருத்துவமணையில் அறுவை சிகிச்சை பேராசிரியராக அவருக்குப் பணி கிடைத்தது. அறுவை சிகிச்சை நோயாளிகளின் மரண விகிதத்தை எப்படி குறைப்பது என்பதே அவருடைய அன்றாட சிந்தனையாக இருந்தது. தான் அறுவை சிகிச்சை செய்த ஒரு நோயாளி இறந்து போனால் அது தன்னுடைய தோல்வி என்று கருதினார்.


1865-ஆம் ஆண்டு புகழ் பெற்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் லூயி பாஸ்டரின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை படிக்கும் வாய்ப்பு லிஸ்டருக்கு கிடைத்தது. பொருட்களை புளிக்கச் செய்யும் உயிருள்ள கிருமிகள் காற்றில் இருக்கின்றன என்றும், அந்தக் கிருமிகளால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது என்றும் பாஸ்டர் கூறியிருந்தார். அப்படியென்றால் பொருட்களை அழுகச் செய்யும் கிருமிகளை அழிப்பதற்கான விஷ முறிவு மருந்தை அதாவது ஆண்டி-செப்ட்டிக் (Antiseptic) மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று உணர்ந்தார் லிஸ்டர். அப்போதிலிருந்து விஷ முறிவு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கடுமையாக் ஈடுபட்டார். அழுக்குகளை சுத்தப்படுத்த உதவும் கார்பானிக் அமிலம் கலந்த கிரியோஸோட் (creosote) என்ற ஒரு திரவத்தை வாங்கினார். அந்த திரவத்தை ஒரு நோயாளி மீது பயன்படுத்திப் பார்த்தார். அந்த நோயாளி இறந்து போகவே மனமுடைந்து போனார் லிஸ்டர்.


ஆனால் அவரது மனைவி ஏக்னஸ் தொடர்ந்து முயற்சி செய்யுமாறு ஊக்கமூட்டினார். தோல்வியடைந்த ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் அதே மருந்தை பயன்படுத்திப் பார்க்க விரும்பினார். கால் எலும்பு முறிந்த ஒரு பதினொரு வயது பையன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். கணவனை இழந்த தன் தாய்க்கும், மற்ற தனது சகோதரர்களுக்கும் நாந்தான் சோறு போட வேண்டும் என்பதால் தன்னை எப்படியாவது காப்பாற்றி விடுமாறு லிஸ்டரிடம் முறையிட்டான் அந்தப் பையன். கார்பாலிக் அமிலத்தில் நனைத்த துணியைக் கொண்டு காயத்தில் கட்டுப்போட்டார் லிஸ்டர். நான்காவது நாள் கட்டைப் பிரித்துப் பார்த்தபோது அவர் வியந்து போனார். காயம் சீழ்பிடிக்க வில்லை மாறாக குணமடையத் தொடங்கியிருந்தது. மகிழ்ந்து போனார் லிஸ்டர்.

ரணங்கள் அழுகி விஷமடைவதை தடுக்க முடியும் என்று அவர் நிருபித்துக் காட்டியதை ஏனோ மருத்துவ உலகம் அப்போது ஆர்வமின்றி வரவேற்றது. ஆனால் பாராட்டையெல்லாம் எதிர்பார்க்காத அவர் நோயாளிகளின் உயிரைக் காக்க தன் ஆராய்ச்சிகளையும், மருத்துவமணையில் மாற்றங்களையும் தொடர்ந்தார். அறுவை சிகிச்சை அறையிலும், வார்டிலும் கார்பானிக் அமிலத்தைப் பயன்படுத்திக் காற்றை தூய்மைப்படுத்தினர். மருத்துவ கருவிகள் கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மருத்துவமணையில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த வார்டில் மரண விகிதம் குறையத் தொடங்கியது. அப்போதுகூட மருத்துவ உலகம் அவரை பாராட்டாமல் கேலி செய்தது. ஆனால் அவரால் உயிர் பிழைத்தவர்கள் அவரை தெய்வமாக போற்றினர்.


சில ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் (King's College London) பேராசிரியராக சேர்ந்தார் லிஸ்டர். அங்கும் மாணவர்கள் அவரை கேலி செய்தனர். அவரை பார்க்கும் போதெல்லாம் கிருமி வருகிறது என்று நகைத்தனர். மருத்துவ சஞ்சிகைகள் சிலர் அவரை 'பொய்யர்' என்றனர். ஆனால் சாதனையாளர்கள் மனம் தளர்ந்ததாக வரலாறு இல்லையே. 1877-ஆம் ஆண்டு மிக மோசமாக இருந்த ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய அப்போதைய புகழ்பெற்ற மருத்துவர் ஜான் ஹண்டர் (John Hunter) மறுத்து விட்டார். லிஸ்டரின் மருத்துவ முறைகளை கேலி செய்தவர்களில் அவரும் ஒருவர். அவர் செய்ய மறுத்த அறுவை சிகிச்சையை தான் செய்வதாக கூறி வெற்றிகரமாக அதனை செய்தும் காட்டினார் லிஸ்டர். அதிலிருந்து மனம் மாறினார் ஜான் ஹண்டர்.  

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த இரு மருத்துவர்களும் இணைந்து பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அவரது சிகிச்சை முறையை உலகம் ஏற்றுக்கொண்ட பிறகு முப்பது ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார் லிஸ்டர். மருத்துவ உலகிலயே அவருக்குதான் 'ஆர்டர் ஆஃப் த மெரிட்' (Order of Merit) என்ற பட்டம் முதன் முதலாக வழங்கப்பட்டது. உலக நோயாளிகளுக்கு மரண பயத்தைப் போக்கிய ஜோசப் லிஸ்டர் 1912-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் நாள் தனது 84- ஆவது வயதில் காலமானார். மிகுந்த மதப்பற்று கொண்டிருந்த லிஸ்டருக்கு சமூக வெற்றியோ பணம் சம்பாதிப்பதோ ஒரு பொருட்டாக இல்லை. மனுகுலம் மேன்மை பெற வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது.
  

அடுத்த முறை உங்களில் யாராவது அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டால் ஜோசப் லிஸ்டருக்கு நன்றி சொல்ல மறவாதீர்கள். மருத்துவ உலகில் அறுவை சிகிச்சையின் முக்கியத்துவத்தில் ஜோசப் லிஸ்டர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு அளவிட முடியாதது. அப்படிப்பட்ட மருத்துவ முறையை கண்டுபிடித்த போதும் அவருக்கு ஏற்பட்ட கேலி கிண்டல்கள், அவமானங்களை தாண்டியும், நமது உயிருக்கு உத்தரவாதம் தர அவருக்கு உதவிய பண்புகள்....உயரிய சிந்தனை, தோல்விகளை கண்டு துவளாத மனோதிடம், தான் வகுத்துக் கொண்ட இலக்கை அடைய விடாமுயற்சியுடன் இறுதிவரை போராடும் தைரியம். ஜோசப் லிஸ்டரைப் போல் நாம் வகுத்துக்கொண்ட இலக்கில் எத்தனை தடைகள் வந்தாலும் இறுதிவரை விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்!

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

6 comments:

  1. இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!

    Visit Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

    ReplyDelete
  2. நன்றி மாணவா....

    இவனுக புதுசு புதுசுசா வேற பேருல
    வரானுகலே....
    முடியலை....
    இவனுக போன் நம் வாங்கி தாங்க...
    நைட்-ல போன் பண்ணி விவரம் கேப்போம்...

    ReplyDelete
  3. நானும் அறுவை சிகிச்சை செய்து கொணடவன் என்ற முறையில் ஜோசப் லிஸ்டருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. நன்றி மாணவன், நன்றி லிஸ்டர்.......

    ReplyDelete
  5. தெரிந்து கொள்ள வேண்டிய விவரம்...
    நன்றி மாணவன்.

    ReplyDelete
  6. உண்மையில் இவர் போற்றப்படக் கூடியவர். தகவலுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.