Monday, March 26, 2012

பிராங்கிளின் ரூஸ்வெல்ட் - வரலாற்று நாயகர்!

1933-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் நாள் ஒரு தேசமே விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்த காலகட்டம், எந்த திசை நோக்கினாலும் அங்கு அச்சம் ஆட்கொண்டிருந்தது. உலக வரலாறு 'Great Depression' எனப்படும் மாபெரும் பொருளியல் மந்தத்தின் அடிமட்டத்தை தொட்டிருந்த நேரம் அது. அமெரிக்காவில் பதின்மூன்று மில்லியன் பேர் வேலையில்லாமல் இருந்தனர். தொழிற்துறை உற்பத்தி பாதியாக குறைந்திருந்தது. பண்ணைகளும், வியாபாரங்களும் நொடித்துப் போயிருந்தன. மில்லியன் கணக்காணோர் வறுமைகோட்டைத் தாண்டி பசிகொடுமைக்கு ஆளாகியிருந்தனர். இரண்டு மில்லியன் பேர் தங்க வீடின்றி தெருக்களில் அலைந்தனர். வங்கி முறை கிட்டதட்ட செயலிழந்து போனது. நாட்டின் எதிர்காலத்திற்கு அஞ்சி பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை மீட்டுக்கொள்ள வங்கிகளுக்குப் படையெடுத்தனர். களேபரத்துக்கு அஞ்சி அமெரிக்காவின் அப்போதைய 48 மாநிலங்களில் 38 மாநிலங்கள் தங்கள் வங்கிகளை மூட உத்தரவிட்டன.

அதே தினம் வாஷிங்டெனில் அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கான பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பிறகு தங்களுடைய புதிய அதிபர் என்ன சொல்லப் போகிறார் என்று அந்த தேசமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. நம்பிக்கையிழந்திருந்த தேசத்தை நோக்கி அவர் கூறிய வார்த்தைகள்..... "The only thing we have to fear is fear itself" 'அச்சம் என்ற உணர்வுக்குதான் நாம் அச்சப்பட வேண்டும்' என்ற மந்திர வார்த்தைகளை கூறி அடுத்த ஆறே ஆண்டுகளில் அமெரிக்காவை வழக்கு நிலைக்குக் கொண்டு வந்த அந்த மாபெரும் வரலாற்று நாயகரின் பெயர் பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt). அமெரிக்கா வரலாற்றிலேயே ஆகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அதிபரானவர் அவர். தனது 51-ஆவது வயதில் கிட்டதட்ட ஐந்து மில்லியன் வாக்குப் பெரும்பான்மையில் அமெரிக்காவின் 32-ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரூஸ்வெல்ட்க்கு வானம் வசப்பட்ட கதையை தெரிந்துகொள்வோம்.


1882-ஆம் ஆண்டு சனவரி 30-ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள ஹைட் பார்க் எனும் இடத்தில் பிறந்தார் ரூஸ்வெல்ட் அவரது பெற்றோர் செல்வந்தர்களாக இருந்தனர். அதனால் அமெரிக்காவின் மிகச்சிறந்த பள்ளிகளில் ஒன்றான க்ராட்டன் (Groton School) பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். பின்னர் ஹார்வர்ட் (Harvard College) பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கொலம்பியா சட்டப் பள்ளியில் சட்டத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். 1907-ஆம் ஆண்டு 25 வயதானபோது அவர் நியூயார்க்கில் வழக்கறிஞராக பணியாற்றத்தொடங்கினார் அதுவரை அவருக்கு அரசியலில் நாட்டம் ஏற்பட்டதில்லை. 1905-ஆம் ஆண்டு தன் உறவுக்கார பெண்ணான Eleanor-ஐ மணந்துகொண்டு ஆறு பிள்ளைகளுக்கு தந்தையானார். 1910-ஆம் ஆண்டு நியூயார்க் மாநிலத்தின் டெமோக்ராடிக் (Democratic) கட்சி சார்பில் செனட் சபைக்கு போட்டியிடுமாறு அழைக்கப்பட்டார் ரூல்வெல்ட். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1912-ஆம் ஆண்டு வுட்ரோ வில்சன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரை ஆதரித்த ரூஸ்வெல்ட் அரசியலில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். வில்சன் அரசாங்கத்தில் கடற்படையில் உதவி செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் கடற்படையை நவீனமயமாக்கினார் ரூஸ்வெல்ட். ஆண்டுதோறும் பல கடற்படை வீரர்கள் கடலில் மூழ்கி மாண்டதை உணர்ந்த அவர் கடற்படையில் சேர விரும்புவோருக்கு நீச்சலை கட்டாயமாக்கினார். 1917-ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரில் அமெரிக்கா நுழைந்தபோது அதன் கடற்படை மிகச்சிறந்த நிலையில் இருந்ததற்கு ரூஸ்வெல்ட்டே காரணம். அதுவரை ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கையில் எல்லாமே சுமூகமாக நடைபெற்று வந்தது. ஆனால் 1921-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டது.


தன் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் 'கேம்பபெல்லோ' (Campobello Island) என்ற தீவில் விடுமுறைக்கு சென்றிருந்தார் ரூஸ்வெல்ட். அங்கே கடும் குளிராக இருந்த ஃபண்டி கடற்கரையில் நீந்திவிட்டு வந்தவரை 'ஃபோலியோ மைலிட்டிஸ்' எனப்படும் ஒருவகையான முடக்குவாதம் தாக்கியது. ஒரு மாத காலம் வலியாலும் காய்ச்சலாலும் அவதிப்பட்ட அவருக்கு இடுப்புக்குக் கீழ் உடல் செயலிழந்தது. அப்போது அவருக்கு வயது முப்பத்தொன்பதுதான். உடலில் பாதி செயலிழந்து போனாலும் அதனை ஒரு தோல்வியாக எண்ணவில்லை ரூஸ்வெல்ட். மனைவி Eleanor-ன் துணையுடன் போராடத் துணிந்தார். ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த Warm Springs என்ற இடத்திலிருந்த சூடான நீருற்று வாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு குணமளிப்பதாக ஒரு நண்பர் கூறவே அங்கு சென்றார் ரூஸ்வெல்ட். அந்த நீருற்றில் நீந்திய பிறகு கால்களில் வலிமை ஏற்படுவதாக உணர்ந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக தன் கால்களின் செயல்பாட்டைத் திரும்பப் பெற தொடங்கினார். ஏழே ஆண்டுகளில் அவர் திரும்பவும் வழக்கமான பணிகளை செய்யத் தொடங்கினார். அவரால் சொந்தமாக கார் ஓட்டவும் முடிந்தது. இரும்பு போன்ற அவரது மனவலிமைதான் அத்தனையையும் சாத்தியமாக்கியது. 1928 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் நியூயார்க்கின் ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார் ரூஸ்வெல்ட். அவரது திறமையை உணர்ந்த டெமோக்ராட்டிக் (Democratic) கட்சி 1932-ஆம் ஆண்டு தங்களின் அதிபரின் வேட்பாளாராக அவரை முன்மொழிந்தது. அந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில்தான் ஐந்து மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 32-ஆவது அதிபரானார் ரூஸ்வெல்ட். 1933-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்காம் தேதி பதவியேற்ற போதுதான் அவர் "The only thing we have to fear is fear itself" என்று கூறி அமெரிக்கர்களுக்கு தைரியமூட்டினார்.


பதவியேற்றதும் உடனடியாக செயலிலும் இறங்கினார். வங்கி பிரச்சினையைத் தீர்க்கவும், மக்களின் பதற்றத்தை தனிக்கவும் மார்ச் 6-ஆம் தேதியை வங்கி விடுமுறை (Bank Holiday) என்று அறிவித்தார். பதவியில் இருந்த முதல் நூறு நாட்களிலேயே வங்கி சீர்திருத்தங்களை அறிவித்து பொதுமக்களிடையே வங்கிகளின் மீது நம்பிக்கையை விதைத்தார். சாலைகள் அமைப்பது, மரங்கள் நடுவது போன்ற பல அரசாங்க பொதுப் பணிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். பொதுப்பணி நிர்வாகம் தேசிய மீட்பு நிர்வாகம் என பல அரசாங்க பணிக் குழுக்களை உருவாக்கி அமெரிக்க பொருளியலை முன் எப்போதும் இல்லாத உந்து சக்தியுடன் முன்னோக்கிச் செலுத்தினார். அவரது மிகச்சிறந்த சில பண்புகளை அந்தக்கால கட்டத்தில் உலகம் பார்த்து வியந்தது.

எந்த திட்டத்தை செயல்படுத்திய போதும் தவறுகள் செய்துவிடுவோமோ என்று அவர் அஞ்சியதே கிடையாது. அப்படியே தவறுகள் நிகழ்ந்த போதும் தனது முடிவுகளை உடனடியாக மாற்றிக் கொள்ளவும் அவர் தயங்கியதில்லை. அவரது கம்பீரமான ஆட்சியால் 1936-ஆம் ஆண்டு மீண்டும் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இரண்டாவது தவனைக்கு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும், 1944-ஆம் ஆண்டு நான்காவது முறையாகவும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரூஸ்வெல்ட். அமெரிக்க அதிபர் வரலாற்றில் இரண்டு தவனைக்கு மேல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். கிட்டதட்ட பதின்மூன்று ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்து அந்த தேசத்தை வழி நடத்திய ரூஸ்வெல்ட் 1945-ஆம் ஆண்டு ஏப்ரம் 12-ஆம் நாள் தனது 63-ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.


அமெரிக்கா இதுவரை சந்தித்திருக்கும் அதிபர்களில் மூவர் தலைசிறந்தவர்கள் என்று கூறுகின்றனர் வரலாற்று நிபுனர்கள். அந்த மூவர் ஆபிரகாம் லிங்கன், ஜார்ஜ் வாஷிங்டென், ஃப்ராங்கிளின் ரூஸ்வெல்ட். மிகச்சிறந்த ஒரு தலைவனுக்காக ஒரு தேசம் ஏங்கிய அந்த இருட்டு நிமிடங்களில் அஞ்சாமல் தலைமைப் பொறுப்பை ஏற்று அந்த தேசத்திற்கு சுய மரியாதையையும், வளப்பத்தையும் ஏற்படுத்தித் தந்த அதிபர் என்று ரூஸ்வெல்ட்டை உலக வரலாறு நினைவில் வைத்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மாமனிதர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை அவருக்கு தந்து கெளரவித்துள்ளது டைம் சஞ்சிகை.

முடக்குவாதம் வந்தபோது முடங்கி போயிருக்க வேண்டிய ஒருவர் உலகின் ஆகப்பெரிய வல்லரசு நாடே முடங்கிப் போயிருந்த காலகட்டத்தில் அதனை கம்பீரமாக வழிநடத்தியதால் வரலாற்றில் இடம்பிடித்தார். ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உண்மை எளிதானதுதான். தடைகளை கண்டு தயங்காதோருக்கும், முடக்கு பிணிகளுக்கு முடங்காதோருக்கும், அச்சங்களை துச்சமாக எண்ணித் துணிவோருக்கும், நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு முன்னோக்கி செல்வோருக்கும் எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் அந்த உண்மை.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன் 
உங்கள். மாணவன்

10 comments:

 1. கற்போருக்கு முதல் வருகை...தெரிந்துகொண்டேன் தகவலுக்கு நன்றி நண்பா ...

  ReplyDelete
 2. இந்த மனிதரை பற்றி நான் அறிந்தது இல்லை .. இப்போ அறிந்து கொண்டேன் ..
  சில விடயங்களை இவரிடம் இருந்து அறிந்து கொண்டேன் ,...

  பகிர்வுக்கு நன்றிங்க அண்ணே ..

  மேலே இருக்கும் உழவர் நம்ம ஏரியா தான் அண்ணே ..
  நேரம் இருப்பின் உழவரிடம் உரையாடுங்கள்..

  ReplyDelete
 3. நன்றி...மாணவ...

  ReplyDelete
 4. //முடக்குவாதம் வந்தபோது முடங்கி போயிருக்க வேண்டிய ஒருவர் உலகின் ஆகப்பெரிய வல்லரசு நாடே முடங்கிப் போயிருந்த காலகட்டத்தில் அதனை கம்பீரமாக வழிநடத்தியதால் வரலாற்றில் இடம்பிடித்தார்.//

  புல்லரிக்க வைக்கும் எழுத்து நடை.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. தங்களது எழுத்து நடை தனித்துவமாக இருக்கிறது. சொல்வதை சுவையாக சொல்லும் பாங்கு வியக்க வைக்கிறது.

  ReplyDelete
 6. இவர் பற்றி கேள்விப்பட்டதில்லை.. எப்படி என்று தெரியவில்லை. ஊடகங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இவருக்கு கொடுக்க மறுத்ததேன் என்று தெரியவில்லை.

  கடந்த வாரம் ஒலி FM ல் என்ன எங்கே எப்போ நிகழ்ச்சி என்று நினைக்கிறேன் அதில் நோபால் பரிசு எப்படி வந்தது என்பது பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். இதைக்கேட்டவுடன் உங்கள் பதிவு தான் நினைவுக்கு வந்தது :-)

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.