Monday, April 23, 2012

வில்லியம் ஷேக்ஸ்பியர் - வரலாற்று நாயகர்!

உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனிச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு 'ழ' என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத்துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு. அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக்கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்தவர்கள் சிலர். அவர்களுள் தலையாயவர் இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல அமர இலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர். அவர் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில்தான் ஏப்ரல் 23.

1564-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி லண்டனுக்கு அருகில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் (Stratford-upon-Avon) என்ற சிற்றூரில் பிறந்தார் வில்லியம் ஷேக்ஸ்பியர். அவர் பிறந்தது ஏழ்மையில்தான். எட்டுப் பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது தந்தை ஜான் சேக்ஸ்பியர் கையுறை தைத்து விற்கும் வியாபாரி. தொழில் அவ்வுளவு இலாபகரமாக இல்லை என்பதால் பன்னிரெண்டாவது வயது வரைதான் சேக்ஸ்பியரால் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. அதன் பிறகு முறையான கல்வி கற்க முடியாமல் போனது. பன்னிரெண்டு வயது வரை இலத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியத்தை அவர் கற்றார். அவருக்கு பதினெட்டு வயதான போது தன்னை விட எட்டு வயது மூத்தவரான ஆன் ஹதாவேயை (Anne Hathaway) என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.


23 வயதான போது அவர் பிழைப்புத் தேடி லண்டன் வந்து சேர்ந்தார் அந்த ஆண்டு 1587. அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் என்ன செய்தார் என்பது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் ஒன்றை பார்ப்போம்...அந்தக் காலகட்டத்தில் நாடகங்களுக்குப் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது லண்டன். சில இடங்களில் தினசரி நாடகங்கள் மேடையேறும். பல பகுதிகளிலிருந்து சீமான்களும், செல்வந்தர்களும் குதிரை வண்டிகளில் நாடகம் பார்க்க வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு நாடக கொட்டகையில் குதிரை வண்டிகளை காவல் காக்கும் வேலை அவருக்குக் கிடைத்தது. அப்படி குதிரைகளை காவல் காத்த ஷேக்ஸ்பியர்தான் பிற்காலத்தில் ஆங்கில இலக்கியத்தின் முகவரியை மாற்றப் போகிறார் என்பது அந்த நாடக கொட்டகையின் உரிமையாளருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.  

ஷேக்ஸ்பியருக்கு ஞாபகத்திறன் அதிகம். குதிரைகளை காவல் காக்கும் அதே நேரத்தில் நாடகங்களை ரசித்துப் பார்த்த அவர் வசனங்களை மனப்பாடம் செய்துகொள்வார். இந்த வசனம் இப்படி இருந்திருக்கலாமே என்று தனக்குள் நினைத்துக்கொள்வார். இது சினிமாக் கதை போல் இருந்தாலும் ஒருநாள் அந்தச் சம்பவம் நடந்தது. அரங்கம் நிறைந்த கூட்டம், நாடகம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் வரவில்லை என்பது தெரிந்து பதறிப் போனார் நிர்வாகி.நிலமையை உணர்ந்த ஷேக்ஸ்பியர் அந்த பாத்திரத்தில் தாம் நடிப்பதாகக் கூறினார். வேறு ஒரு நேரமாக இருந்திருந்தால் அந்த நிர்வாகி நகைத்திருப்பார். அப்போது வேறு வழி தெரியாததால் நிர்வாகியும் சம்மதிக்க ஷேக்ஸ்பியருக்கு ஒப்பனை செய்யப்பட்டது. நாடகமும் தொடங்கியது. 

தனக்கு முன் நடித்தவரைக் காட்டிலும், அந்த பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து பலத்த கைதட்டலையும், பாராட்டையும் பெற்றார் சேக்ஸ்பியர். சில முக்கிய காட்சிகளில் அவர் சொந்தமாகவும் வசனம் பேசினார். அந்த வரவேற்பைப் பார்த்து மகிழ்ந்துபோன நிர்வாகி தொடர்ந்து நடிக்க ஷேக்ஸ்பியருக்கு வாய்ப்புக் கொடுத்தார். சில நாடகங்களையும் அந்த நிறுவனத்திற்காக எழுதிக் கொடுத்தார் ஷேக்ஸ்பியர். 1592-ஆம் ஆண்டு லண்டன் மாநகரை பிளேக் எனும் கொடிய நோய் அலைக்கழிக்கத் தொடங்கியது. அண்மையில் ஏற்பட்ட சார்ஸ் நோய் எப்படி சில நகரங்களை முடக்கியதோ அதேபோல் பிளேக் நோயால் முடங்கிப் போனது லண்டன் மாநகரம். அதனால் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அனைத்து நாடக கொட்டகைகளும் மூடிக்கிடந்தன. நாடகக் கலைஞர்களுக்கு பிழைப்பு இல்லாமல் போனது. 

லண்டனை அலைக்கழித்த அந்த நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்கும் வாய்ப்பையும், கால அவகாசத்தையும் ஷேக்ஸ்பியருக்குத் தந்தது. அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் நிறைய நாடகங்களையும், கவிதைகளையும் எழுதிக் குவித்தார். சோனட் எனப்படும் புதுவகை கவிதைகளையும் அவர் புனைந்தார். பிளேக் நோய் முடிந்தவுடன் அவரது நாடகங்கள் புத்தகமாக வெளி வரத் தொடங்கின. 24 ஆண்டு இலக்கியப் பணியில் அவர் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார் என்று சொல்வதை விட இயற்றினார் என்று சொல்ல வேண்டும். துன்பியல், இன்பியல் என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்தலாம். 

A Midsummer Night's Dream, As You Like It, The Taming of the Shrew, The Merchant of Venice போன்றவை இன்பியல் நாடகங்கள். Romeo and Juliet, Hamlet, Othello, King Lear, Julius Caesar, Antony and Cleopatra, போன்றவை அவரது புகழ் பெற்ற துன்பியல் நாடகங்கள். எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் இன்றும் காதலுக்கு முகவரி சொல்லும் மிக முக்கியமான உலக இலக்கியம் 'Romeo and Juliet' என்பதை எந்த மொழி அறிஞராலும் மறுக்க முடியாது. உலகம் முழுவதும் ரோமியோ, ஜூலியட் பெயரை உச்சரிக்காத காதலர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். அதே போன்று தன் உயிர் நண்பன் புரூட்டஸ் தன்னை கத்தியால் குத்தும்போது அதிர்ந்து போய் Et tu Brutus? அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று கேட்டு உயிர் விட்ட ஜூலியஸ் சீசரின் கதாபாத்திரத்தையும் இலக்கிய உலகம் மறக்க முடியாது.


இப்படி கனமான கதாபாத்திரங்களுக்கு வலுவான வசனங்களால் உயிர் ஊட்டியதால்தான் இன்றும் அவை உயிரோவியங்களாக உலா வருகின்றன. தமது படைப்புகள் மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் சேக்ஸ்பியர் 1616-ஆம் ஆண்டு ஏப்ரம் 23-ஆம் நாள் தாம் பிறந்த தினத்திலேயே இறந்து போனார். ஓர் இலக்கிய மேதை 52 வயதில் மறைந்து போனது இலக்கிய உலகிற்கு பேரிழப்புதான். தமிழ் இலக்கிய உலகின் அமரகவி கம்பன் என்றால் ஆங்கில இலக்கிய உலகின் அமரகவி சேக்ஸ்பியர்தான். இருவரின் படைப்புகளுமே அமர காவியங்களாக போற்றப்படுகின்றன. எழுதப்பட்டு நானூறு ஆண்டுகளுக்கு பிறகும் உயிரோட்டம் இருக்கிறது என்பதால்தான் உலக பல்கலைக்கழகங்கள் இன்றும் அவற்றை கற்பிக்கின்றன.  

ஏழ்மையில் பிறந்து அடிப்படைக் கல்வியைகூட முறையாக முடிக்க முடியாத ஒருவரால் உலகப் புகழ்பெற முடிந்தது என்றால், கல்விக்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கும் நம்மால் அது முடியாதா? இலக்கியம் என்ற வானம் அவருக்கு வசப்பட்டதற்கு திறமை மட்டும் காரணம் அல்ல தன்னம்பிக்கையும்தான். நமக்குத் திறமை இருந்தால் அதனை ஒரு கூடுதல் பலமாக ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையை முதலீடு செய்வோம். திறமை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியை முதலீடு செய்வோம். நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்! 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

11 comments:

  1. அருமை நண்பா .., அருமையான பதிவு ..!

    ReplyDelete
  2. அருமையான பதிவு
    அன்புடன்
    நெல்லை பெ. நடேசன்
    அமீரகம்

    ReplyDelete
  3. பகிர்வுக்கு மிக்க நன்றி சிலம்பு.......

    ReplyDelete
  4. நல்ல பதிவு நண்பா

    ReplyDelete
  5. வழக்கம் போல நல்ல பகிர்வு.......!

    ReplyDelete
  6. நண்பரே,

    உங்களது இந்த நல்ல பதிவை
    எங்களது செய்தி தாள் வடிவமைப்பில் ஆன தமிழ்.DailyLib இணைத்து உள்ளேன்

    பார்க்க
    தமிழ்.DailyLib

    Hope we can get more traffic, exposure hits for you


    To get the Cute Vote Button

    தமிழ் போஸ்ட் Vote Button

    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.