Wednesday, November 30, 2011

'சர்' ஜகதீஷ் சந்திர போஸ் (அறிவியல் மேதை) - வரலாற்று நாயகர்!

வணக்கம் நண்பர்களே, நமது இந்திய தேசத்தின் விஞ்ஞானியுமான, அறிவியல் ஆராய்ச்சியாளருமான 'சர்'ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இன்று (30/11/2011) 153ஆவது பிறந்தநாள். தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவைகளுக்கும் மகிழ்ச்சி, துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மையை கண்டறிந்து சொன்ன அந்த அதிசய விஞ்ஞானியின் பிறந்த நாளான இன்று அவரது வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உணவில் இரண்டு வகை உண்டு சைவம், அசைவம். சைவ உணவை விரும்பி உண்பவர்கள் அசைவத்தை வெறுப்பதற்கு கூறும் முக்கிய காரணம் உயிருள்ள விலங்குகளைக் கொன்று அவற்றை புசிப்பது பாவம் என்பதுதான். அந்தக்கூற்றுக்குப் பின்னனியில் இலைமறைக் காயாக இருக்கும் ஒரு நம்பிக்கை தாவரங்களுக்கு உயிர் இல்லை என்பதாகும் அப்படித்தான் உலகம் நம்பியிருந்தது பல்லாண்டுகளாக, 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி அந்த நம்பிக்கையை பொய்யாக்கி அனைத்துவகை தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டி உலகின் புருவங்களை உயர்த்தினார். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்றால் அவற்றை உண்பதும் பாவமா? என்ற சர்ச்சைக்கெல்லாம் நாம் போக வேண்டாம். அப்படிப்பட்ட நுணுக்கமான உண்மையை ஆராய்ந்து சொன்ன அந்த விஞ்ஞானிக்கு வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம். அவர்தான் இந்தியாவின் உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான 'சர்' ஜகதீஷ் சந்திரபோஸ்.

1858 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய கிழக்கு வங்காளத்தின் (தற்போது பங்களாதேஷ் நாட்டின் பகுதி)ஃபரீத்பூர் மாவட்டத்தில் மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார் போஸ். அவரது தந்தை ஒரு மருத்துவர். தம் ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு கல்கத்தாவின் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார் போஸ். 19 வயதில் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டினார். இங்கிலாந்தில் இருந்தபோது லார் ரிலே (Lore Rele) என்ற விஞ்ஞானியின் நட்பு போஸ்க்கு கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதல் மற்றும் தூண்டுதலின் பேரில் தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் போஸ். கேம்பிரிட்ஜில் கல்வியை முடித்து இந்தியா திரும்பிய பிறகு கல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் விரிவுரையாளராக சேர்ந்தார்.

அப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பில் இருந்ததால் ஒரு விநோதமான பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்திய மண்ணில் ஒரு வேலையைச் செய்வதற்காக ஒரு ஆங்கிலேயருக்கு கொடுக்கும் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்குதான் அதே வேலையைச் செய்யும் இந்தியருக்கு கொடுக்கப்பட்டது. அந்தப்பழக்கம் அந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள் என்பதால் முழு ஊதியம் பெற தகுதியற்றவர்கள் என்பதுதான் அதற்குக்கூறப்பட்ட காரணம். ஜகதீஸ் சந்திரபோஸ் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை தனது அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி நன்கு கற்பித்ததோடு மட்டுமன்றி பல ஆராய்ச்சிகளையும் செய்தார். அவரது பணியில் முழு திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸ்க்கு முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்கு தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க உத்தரவிட்டது. "பொறுத்தார் பூமி ஆள்வார்" என்பதற்கு அந்த சம்பவம் ஒரு நல்ல சான்று.

அவ்வாறு கிடைத்த தொகையைக் கொண்டு ஒரு அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார் போஸ். அந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அடிப்படையில் அவர் ஒரு இயற்பியல் வல்லுநராக இருந்தாலும் ரேடியோ வேவ்ஸ் (Radio waves) எனப்படும் வானொலி அலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார். உண்மையில் வானொலியின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி மார்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிப்பரப்பு அமைப்பு முறையை போஸ் உருவாக்கிவிட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் அந்தக்கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் அப்போது கண்டுகொள்ளவில்லை என்றும் அந்தக்குறிப்பு குறித்து வைத்திருக்கிறது.

சரி மீண்டும் நாம் தாவரங்களுக்கு வருவோம் தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று நம்பிய போஸ் அசைவுகளையும், சலசலப்புகளையும் அளக்கும் பல்வேறு நுண்ணிய உணர் கருவிகளை சொந்தமாக உருவாக்கி அவற்றைக்கொண்டு தாவரங்களின்மீது பல்வேறு சோதனைகளைச் செய்தார். அந்த சோதனைகளின் மூலம் வெப்பம்,குளிர், ஒளி, ஒலி போன்ற stimuli அதாவது புறத்தூண்டுதல்கள் எப்படி மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார். போஸ் ஒரு புகழ்பெற்ற பரிசோதனையையும் செய்து காட்டினார் புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை ஊசி மூலம் ஒரு எலிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் அதே தனிமத்தை ஓர் தாவரத்திலும் செலுத்தினார். எலி, தாவரம் இரண்டுமே மரணத்தின் விளிம்பில் போராடியதைக் கண்டு வியந்த அறிவியல் உலகம் போஸின் ஆய்வுகளை கைதட்டி பாராட்டியது.

தனது பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு இரண்டு புகழ்பெற்ற நூல்களை வெளியிட்டார் போஸ். (Response in the Living and Non-Living), (The Nervous Mechanism of Plants) என்ற அந்த இரண்டு நூல்களும் சொன்ன கருத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு அவை மனிதர்களைப் போலவே உணவு உண்டு செரிப்பதுடன், இரவில் உறங்கி காலையில் விழிக்கின்றன. தாவரங்களுக்கும்கூட பிறப்பும், இறப்பும் உண்டு, நம்மைப்போலவே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகளும் உண்டு. இவைதான் அந்த நூல்கள் சொன்ன கருத்துகளாகும். தாவரங்களை நேசிப்பவர்கள் ஒன்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம் அவற்றுடன் தினசரி அன்பாக பேசினால் அவை நன்றாக வளருமாம். ஜகதீஸ் சந்திரபோஸின் ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது அந்தக்கூற்றும் உண்மை என்றே தோன்றுகிறது.

அறிவியல் ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் ஜகதீஷ் சந்திர போஸ்க்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது அப்போது இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம். 1920 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் கழகத்தின் உறுப்பினராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலாரைத் தந்த நமது இந்திய தேசம்தான் அந்தப்பயிர்களுக்கு உயிர் உண்டு என்ற உண்மையைக் கண்டு சொன்னவரையும் தந்திருக்கிறது. அந்த அற்புத விஞ்ஞானி 1937 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் தமது 82 ஆவது வயதில் காலமானார்.

தோல்வியிலிருந்துதான் உண்மையான வெற்றி கிடைக்கிறது என்று ஒருமுறை கூறினார் 'சர்' ஜகதீஷ் சந்திர போஸ். “எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதனை வாழ்ந்தும் காட்டிய அவருக்கு வானம் வசப்பட துணை புரிந்த பண்புகள் ஈடுபாடு, துணிச்சல், மன உறுதி, தன்னம்பிக்கை, சோர்வின்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய பண்புகளாகும். அவர் கடைப்பிடித்தப் பண்புகளில் சிலவற்றைப் பின்பற்றினால்கூட போதும் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

8 comments:

 1. இனிய நண்பா.
  வானம் வசப்பட துணை புரிந்த பண்புகள் ஈடுபாடு, துணிச்சல், மன உறுதி, தன்னம்பிக்கை, சோர்வின்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய பண்புகளாகும்.
  மிகவும் அருமையான கட்டுரை ...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்கள் எழுத்துக்களில் ஒரு வசீகரம் உள்ளது
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 3. romba nalla pathivu..

  Thavarangalukku uyir irukkarathi kandu pidichathu oru indiannu therinappo romba perumaiya irunthathu..

  Nalla flow irunthathu articlea.. valthukkal..

  ReplyDelete
 4. பொருமை, அன்பு, விடாமுயற்ச்சி போன்ற பண்புகளோடு வாழ்ந்து மறைந்தாலும் தன் நினைவை இவ்வுலகம் என்றும் மறக்காத வண்ணம் அறிவியலில் பெரும் மாற்றம் ஏற்படுத்தி தாவரங்களுக்கும் உயிர், உணர்வுகள் உண்டு என்பதை நிருபித்து காட்டிய விஞ்ஞானியின் வரலாறு... மிக அருமையாக தங்களின் சிறப்பான நடையில்(வார்த்தைகளை தொகுத்த விதம்) தொகுத்துள்ளீர்கள்... நண்பா...

  பகிர்வுக்கு வாழ்த்துகள்.....

  ReplyDelete
 5. இவர் வானொலி சம்பந்தமாக ஒரு ஐரோப்பிய பத்திரிகைக்கு எழுதியதாகவும், அதைப் பார்த்தே மார்கொனி வானொலியை உருவாக்கியதாகவும் படித்திருக்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. //"பொறுத்தார் பூமி ஆள்வார்" என்பதற்கு அந்த சம்பவம் ஒரு நல்ல சான்று.//
  //அவருக்கு வானம் வசப்பட துணை புரிந்த பண்புகள் ஈடுபாடு, துணிச்சல், மன உறுதி, தன்னம்பிக்கை, சோர்வின்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய பண்புகளாகும். அவர் கடைப்பிடித்தப் பண்புகளில் சிலவற்றைப் பின்பற்றினால்கூட போதும் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.//

  அருமையான எழுத்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 7. படித்து மகிழ்நதேன்..

  தொடரட்டும்..

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.