Monday, November 21, 2011

கிரிஸ்டோபர் ரீவ்ஸ் (The Real Superman) -வரலாற்று நாயகர்!

உலகிலேயே மிகுந்த பலசாலி யாரென்று கேட்டால் நீங்கள் யாரைக்குறிப்பிடுவீர்கள்? சிறுவர்களையும், இளையர்களையும் கேட்டால் ஒரு பெயர் அடிக்கடி ஒலிக்கும் அதுதான் 'சூப்பர்மேன்'. சராசரி மனிதனால் செய்ய முடியாத, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத பல சாகசங்களை திரையில் புரிந்து பார்ப்பவர்களை கனவுலகில் சஞ்சரிக்கவிட்ட ஓர் அற்புத கதாபாத்திரம்தான் 'சூப்பர்மேன்'. அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததன் மூலம் பல்லாயிரம் சிறுவர்களுக்கும், இளையர்களுக்கும் உந்துதலையும், உத்வேகத்தையும் கொடுத்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கிரிஸ்டோபர் ரீவ்ஸ் (ChristopherReeve)என்பதுகளிலும், தொன்னூறுகளிலும் உலகின் ஆக பலசாலியாக திரையில் வலம் வந்த அவர் ஓர் விபத்தின் காரணமாக தன் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும், பலத்தையும் இழப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

திரையில் அட்டகாசமாக விண்ணில் பறந்த அவர் தன் விரல்களைக்கூட அசைக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கிப்போனார். அந்த அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு போய் பின்னர் வாழ்க்கையில் போராட முடிவெடுத்து அதன் மூலம் தனது உண்மையான பலத்தையும், உள்ளத்திடத்தையும் உலகுக்குக் காட்டிய அந்த அதிசய மனிதனின் வாழ்க்கையை சிந்தித்துப் பார்ப்போம்.

1952 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் பிறந்தார் கிரிஸ்டோபர் ரீவ்ஸ். அவருக்கு நான்கு வயதானபோது அவரது பெற்றோர்கள் விவாகரத்து செய்துகொண்டனர். தன் சகோதரர் பெஞ்சமினுடனும், தாயாருடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கினார் கிரிஸ்டோபர். சிறுவயதிலிருந்தே இரு சகோதரர்களுக்கும், நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அட்டைப்பெட்டிகளை கப்பல்கள் போல் பாவித்து அவர்கள் கடற்கொள்ளையர்களாக நடித்து மகிழ்வர். எட்டு வயதானபோதே பள்ளி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இசைமீது ஆர்வம் ஏற்பட்டதால் பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பள்ளிப்பாடகர் குழுவிலும், ஐசாக்கி குழுவிலும் சேர்ந்து பள்ளியில் மிக துடிப்பான மாணவராக விளங்கினார்.

உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பிறகு அவர் கார்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பல்கலைக்கழக இறுதியாண்டில் அவருக்கு ஓர் அரிய வாய்ப்பு கிட்டியது. நியூயார்க்கின் உலகபுகழ் பெற்ற ஜூலியட் மேடை கலைப் பள்ளியில் நடிப்புப் பயிற்சிபெற அவரும், இன்னொரு கார்னெல் பல்கலைக்கழக மாணவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த இன்னொரு மாணவரின் பெயர் ராபின் வில்லியம்ஸ். இருவருமே பின்னாளில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்களானது அனைவரும் அறிந்ததே. ஜூலியட் மேடைக் கலைப்பள்ளியில் பயின்றபோதே கிரிஸ்டோபருக்கு பல்வேறு நடிப்பு வாய்ப்புகள் வந்தன. 1976-ல் புகழ்பெற்ற நடிகை கேத்ரின் ஹெப்பர்னுடன் முதன் முதலாக A Matter of Gravity என்ற Broadway என்ற இசை நாடகத்தில் நடித்தார். அதனால் அவரால் நடிப்புப் பள்ளியில் தொடர முடியவில்லை.

1978 ஆம் ஆண்டில்தான் உலகம் அவரை உற்றுப் பார்த்து அதிசயிக்கும் அந்த வாய்ப்பு கிட்டியது. 'சூப்பர்மேன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகன் வேடத்தில் நடிக்க உகந்தவரை தேடியது ஹாலிவுட். அதற்காக விண்ணப்பித்த சுமார் 200 பேர் பல்வேறு கேமரா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு பதினெட்டு மாத படப்பிடிப்புக்குப் பிறகு உலகத் திரைகளில் 'சூப்பர்மேனாக' அவதரித்தார் கிரிஸ்டோபர் ரீவ்ஸ்.

அவருடைய கட்டான தோற்றமும், வசீகரமான முகமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. முதல் படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் மேலும் பதினாறு திரைப்படங்களிலும், பணிரெண்டு தொலைக்காட்சிப் படங்களிலும் சுமார் 150 மேடை நாடகங்களிலும் நடித்தார். மற்ற பெரிய நடிகர்களைப்போல் கதாநாயகன் பாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் எந்தப் பாத்திரத்திலும் நடித்தார் ரீவ்ஸ். மிகச் சிரமமான சாகசக் காட்சிகளில்கூட துணை நடிகர்களைப் பயன்படுத்தாமல் சொந்தமாகவே நடித்தார். தான் ஈடுபட்ட எந்தக் காரியத்திலும் அவ்வுளவு ஈடுபாடு இருந்தது அவருக்கு. நடிப்புதான் அவருக்கு உயிர் என்றாலும் வெளிப்புற நடவடிக்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார் ரீவ்ஸ்.

அவர் என்னென்ன கற்றிருந்தார் என்பதை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள், விமானி லைசென்ஸ் பெற்று இரண்டு முறை சிறிய விமானத்தில் தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்திருக்கிறார்,படகோட்டம் கற்றுக்கொண்டிருக்கிறார், முக்குளிக்கத் தெரியும், பனிச்சறுக்கு தெரியும், குதிரையேற்றம் தெரியும். 1990 களில் அவருக்கு குதிரையேற்றம் மிகப்பிடித்த விளையாட்டாக இருந்தது. இப்படி மிகத் துடிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ரீவ்ஸின் வாழ்க்கை தலை கீழாக மாறியது 1995 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி. தன் குதிரை மீது அமர்ந்து அவர் சாகசங்கள் புரிந்து கொண்டிருந்தபோது சற்று மிரண்டுபோன குதிரை எதிர்பாராத விதமாக முன்பக்கமாக அவரை தூக்கி அடித்தது. குதிரையின் கடிவாளத்தில் ரீவ்ஸின் கைகள் மாட்டிக்கொள்ள அவர் தலைகுப்புற கீழே விழுந்தார். முதுகெலும்பின் முதல் இரண்டு எலும்புகள் நொறுங்கின. அந்தக்கணமே கழுத்துக்கு கீழ் அவரது உடல் செயலிழந்தது. மூச்சு விடக்கூட முடியாமல் தவித்த அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்படாதிருந்தால் அந்தக்கணமே அவர் உயிர் பிரிந்திருக்கும்.

மிக நுண்ணிய அறுவை சிகிச்சை செய்து அவரது தலையை முதுகெலும்போடு இணைத்தனர் மருத்துவர்கள். ஆறு மாதங்கள் நியூ ஜெர்ஸி மருத்துவமனையில் இருந்தார் ரீவ்ஸ். தான் வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும் சுறுசுறுப்பாகவும், மிகத்துடிப்பாகவும் செலவழித்த ஒரு மனிதன் தன் சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாத நிலையை அடையும்போது அது எவ்வுளவு பெரிய வேதனையாக இருக்கும் என்பதை அந்த நிலையில் இருந்தாலொழிய வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எனவேதான் தற்கொலையைப் பற்றியும் சிந்தித்தார் ரீவ். ஆனால் தன் மனைவி பிள்ளைகளுக்காகவும், இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவும், உயிருள்ளவரை போராட தீர்மானித்தார். தான் புகழ்பெற்ற நடிகன் என்பதால் தன் மீது அனைத்துலக கவனம் பதிந்திருந்ததை நன்கு அறிந்த ரீவ்ஸ் முதுகெலும்பு காயங்களுக்கான ஆராய்ச்சியில் அதிகம் செலவிடுமாறு அமெரிக்க அரசாங்கத்தையும் உலக நாடுகளையும் கேட்டுக்கொண்டார்.

உடற்குறையோருக்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். அதோடு நின்று விடாமல் 1996 ஆம் ஆண்டு கிரிஸ்டோபர் ரீவ் அறக்கட்டளையை நிறுவி உடற்குறை உடையோரின் நலனுக்காக நிதி திரட்டும் முயற்சிகளை தொடங்கி வைத்தார். stem cell research எனப்படும் மூல உயிரனு ஆய்வுக்காக குரல் கொடுத்தார். 1998-ல் Still Me என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் அது இடம்பிடித்தது. 1996 ஆம் ஆண்டு அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அவர் அழைக்கப்பட்டார். அட்லாண்டாவில் நடைபெற்ற உடற்குறையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் அறிவிப்பாளராக கலந்துகொண்டார்.தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் அவரை பேச அழைத்தன. உடல் மறுத்தபோதும், உள்ளம் ஒத்துழைத்தது. தாதியரின் துணையுடன் எல்லா அழைப்பையும் ஏற்றுக்கொண்டு உலகுக்கு தன்னம்பிக்கை என்ற விலை மதிக்க முடியாத பண்பை பறைசாற்றினார் ரீவ்ஸ்.

பல நிகழ்ச்சிகளில் உயிரை உருக்கும் வலியைப் பொறுத்துக் கொண்டு அவர் உதிர்த்த புன்னகையை உலகம் கலங்கிய கண்களோடு பார்த்தது. கழுத்துக்கீழ் எந்த பாகத்தையும் அசைக்க முடியாமல் கிட்டதட்ட காய்கறிபோல் ஆகிவிட்டது அவரது உடல். ஆனால் உள்ளம் மட்டும் வலிமை குன்றாமல் இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த வாஷிங்டென் பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர். ஜான் மெக்டொனால்ட் தன் வாழ்நாளில் தான் சந்தித்தவர்களில் கிரிஸ்டோபர் ரீவ்ஸைப்போன்ற மனோத்திடத்தை வேறு எவரிடத்திலும் கண்டதில்லை என்றும், இதற்கு முன் இதுபோன்ற காயம் ஏற்பட்டவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றுதான் கருதப்பட்டது, ஆனால் ரீவ்ஸ்க்கு பிறகு தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

கிரிஸ்டோபர் ரீவ்ஸ்க்கு ஏற்பட்ட நிலை நமக்கு ஏற்பட்டிருந்தால் நாமெல்லாம் முடங்கிப் போயிருந்திருப்போம். ஆனால் ரீவ்ஸ் 1996 ஆம் ஆண்டில் 'A Step Toward Tomorrow' என்ற தொலைக்காட்சிப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அதே ஆண்டு 'In the Gloaming' என்ற HBO படத்தை சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே முதன்முதலாக இயக்கினார். அந்தப்படம் ஐந்து எமி(AMY) விருந்துகளுக்காக முன்மொழியப்பட்டது. Cable Ace விருது வழங்கும் விழாவில் அந்தப்படம் நான்கு விருதுகளை வென்றது. விபத்து நிகழ்ந்ததிலிருந்து கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் 'சூப்பர்மேன்' என்ற பெயருக்கேற்ப அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக்காட்டி பல துவண்டுபோன உள்ளங்களுக்கு உத்வேகத்தை அளித்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ் தமது 52 ஆவது வயதில் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி காலமானார். அவரது உடல் நம்மை விட்டு மறைந்திருக்கலாம் ஆனால் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தன்னம்பிக்கை என்ற ஒளி என்றும் மறையாதிருக்கும்.

ரீவ்ஸ்க்கு மரணத்துக்கு பிந்திய கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது நியூஜெர்ஸியின் ரஜ்ஜஸ் பல்கலைக்கழகம். டோனிப்ரூக் பல்கலைக்கழகமும் அவருக்கு கெளரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது. கனவுகள் பற்றியும், தன்னம்பிக்கைபற்றியும் அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை.....

"நம்முடைய பெரும்பாலான கனவுகள் ஆரம்பத்தில் நிச்சயம் நிறைவேற முடியாததுபோல் நினைக்கத் தோன்றும். சற்று முயன்றால் அவை நனவாகலாமே என்று தோன்றும். பின்னர் நம் முழு பலத்தையும், தன்னம்பிக்கையையும், வரவழைத்து முயலும்போது அதே கனவுகள் நனவாக முடியாமல் போகாது என்ற நிலை ஏற்படும்". ஆம் உண்மைதானே! கிரிஸ்டோபர் ரீவ்ஸ் வாழ்ந்து காட்டியதுபோல் கனவு காணுங்கள் அந்தக் கனவை நனவாக்க தன்னம்பிக்கையை முதலீடு செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் விரும்பும் வானமும் வசப்படாமல் போகாது.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

10 comments:

 1. அனைவருக்கும் மனோதிடத்தை அளிக்கும் வகையில் வாழ்ந்த மனிதனின்(கலைஞனின்) வாழ்கை சம்பவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி... நண்பா...

  ReplyDelete
 2. எல்லாம் சரி மச்சி... இவர் ஏன் பேண்ட்டுக்கு மேல ஜட்டி போடுறாருனு மட்டும் கேட்டு சொல்லிடேன்

  ReplyDelete
 3. உண்மைதான் சிம்பு.

  தன்னம்பிக்கையின் மறு உருவம் அவர்.

  பகிர்விற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. மிக அருமை. படிக்க படிக்க சுவாரஸ்யமாய் அசாத்யமாக இருந்தது. அற்புதமான பதிவு

  ReplyDelete
 5. அருமை நண்பா! நடிப்பைத் தவிர மற்றவைகளையும் கற்றுக் கொண்ட கிரிஸ்டோபர் ரீவ்ஸ் அவர்கள் தனது உடல்நிலை மோசமான போதும் தற்கொலைக்கு முயற்சிக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தது நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம். உண்மையில் அவர் சூப்பர்மேன் தான்...!

  ReplyDelete
 6. வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 7. // தான் வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும் மிகத் துடிப்பாக செலவழித்த ஒரு மனிதன் தன் சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாத நிலையை அடையும்போது அது எவ்வுளவு பெரிய வேதனையாக இருக்கும் என்பதை அந்த நிலையில் இருந்தாலொழிய வார்த்தைகளால் வருணித்துவிட முடியாது. //

  மிக மிகச் சரிகாகக் கூறினீர்கள்.

  இவர் உண்மையாகவே சூப்பர் மேன் தான் சந்தேகமே இல்லை. நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் தான் ஒரு சூப்பர் மேன் என்று நிரூபித்து விட்டார். அநேகமாக இவ்வளவு விசயங்கள் தெரிந்த ஒரு நடிகராக இவர் மட்டும் தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.. வேறு யாரையும் இதைப்போல கேள்விப்பட்டதில்லை.

  அவருடைய படம் போலவே உங்கள் கட்டுரையும் இருந்தது.

  ReplyDelete
 8. வணக்கம் அண்ணே ..
  படித்ததும் நான் வியந்து போனேன் ..
  முதன் முறையாக இப்போதான் படிக்கிறேன்...
  தன்னம்பிக்கை பகிர்வுக்கு நன்றிகள் .. அண்ணே

  ReplyDelete
 9. வாங்க வாங்க!
  நீங்கள்ளாம் வந்து
  கருத்து சொல்லாட்டி எப்பூடி?
  அட!நம்ம சைட் பக்கமும் வாங்க!

  ReplyDelete
 10. கிறிஸ்டோபர் ரீவ்ஸ் உண்மையில் ஒரு சூப்பர் மேன் தான்!!

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.