Monday, December 5, 2011

பேரரசர் அசோகர் (The Great Indian Emperor) - வரலாற்று நாயகர்!

உலக வரலாறு குறித்து வைக்கப்படத் தொடங்கியக் காலத்திலிருந்து எத்தனையோ மாமன்னர்களையும், வீர அரசர்களையும் சந்தித்திருக்கிறது சரித்திரம். பெரும்பாலான மன்னர்கள் பிற தேசங்களை கைப்பற்றியதால் வரலாற்றை வசமாக்கினர். வேறு சிலர் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரலாற்றில் இடம் பிடித்தனர். இன்னும் சிலர் அரச வம்சத்தில் பிறந்தோம் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அரசாண்டு முடித்தனர். இப்படி எல்லா மன்னர்களையும் அவர்கள் மனுகுலத்திற்கு ஆற்றிய சேவைகள் மற்றும் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு வரிசைப்படுத்தினால் ஒருவர் முதல் நிலையை பிடிக்கக்கூடும். உலக வரலாற்றில் ஆயிரமாயிரம் மன்னர்கள் தங்களை தாங்களே மாட்சிமைப் பொருந்திய என்றும், கம்பீரம் நிறைந்த என்றும், மாமன்னன் என்றும் அழைத்துக்கொண்டனர். அவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மின்னி மறைந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் வரலாறு நிலைக்கும் வரை மின்னுவார். என்று கூறுகிறார் ஹெச்.டி.வெல்ஸ் (H.T.WELLS), ஓர் ஆங்கில இலக்கிய மேதை போற்றிய அந்த இந்திய மன்னனின் பெயர் அசோகர்.

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய சாம்ராஜ்யங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. முதலாவது மெளரிய சாம்ராஜ்யம் சந்திரகுப்த மெளரியர் என்ற மன்னன்தான் அந்த வம்சத்தைத் தொடங்கி வைத்தார். அவரது காலம் கி.மு 324 முதல் கி.மு 300 வரை 24 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலகட்டத்திலிருந்துதான் இந்தியாவின் வரலாறு தெளிவாகிறது. கி.மு 327-ல் மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்து வடமேற்கு பகுதியை கைப்பற்றினார். மஹதநாடு என்ற அந்தப்பகுதியைதான் பின்னர் சந்திரகுப்த மெளரியர் ஆண்டார். சந்திரகுப்த மெளரியருக்கு பிறகு அவரது மகன் பிந்துசாரர் அரியனை ஏறி 27 ஆண்டுகள் ஆட்சிப்புரிந்தார். அந்த பிந்துசாரருக்கு மகனாக பிறந்து மெளரிய வம்சத்துக்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெரும் புகழைக் கொண்டு சேர்த்தவர்தான் அசோகர்.

தந்தை பிந்துசாரர் ஆட்சியில் இருந்தபோது தட்சசீலம், உஜ்ஜயினி என்ற பகுதிகளுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் அசோகர். மகாதேவி என்பவரை மணந்து கொண்டு மகேந்திரர், சங்கமித்திரை என்ற பிள்ளைகளுக்கு தந்தையானார். பிந்துசாரரின் மரணத்துக்கு பிறகு கி.மு 273 ஆம் ஆண்டில் அரியனை ஏறினார் அசோகர். அவர் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கழித்துதான் முடிசூட்டு விழா நடந்தது. பிந்துசாரருக்கு அசோகர் உட்பட மொத்தம் நூறு குழந்தைகள் பிறந்தன என்றும், மற்ற 99 சகோதர, சகோதரிகளைக் கொன்று விட்டுதான் அசோகர் ஆட்சிக்கு வந்தார் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. ஆனால் அதற்கு சான்றுகள் எதுவும் இல்லை. மண்ணாசை இல்லாத மன்னர்கள் வரலாற்றில் வெகுசிலரே, அசோகர்கூட பதவியேற்றதும் பெரும்பாலான மன்னர்களைப்போலவே தனது சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். பதவியேற்று 9 ஆண்டுகள் கழித்து அண்டை நாடான கலிங்கத்தின் மீது படையெடுத்து பெரும் வெற்றி பெற்றார்.

அந்த அவரது முதல் போர்தான் அவரது தலையெழுத்தையும், இந்தியாவின் தலைவிதியையும் மாற்றி அமைத்தது. கலிக்கத்துப்போரில் நூற்றி ஐம்பதாயிரம் வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். நூறாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த உண்மை அசோகரின் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. போரில் வெற்றிக்கனியை பறித்த எந்த மன்னனும் புளகாங்கிதம் அடைவதும், அந்த வெற்றியைக் கொண்டாடுவதும், உடனே அடுத்த படையெடுப்பைப்பற்றி சிந்திப்பதும்தான் இயல்பு. ஆனால் அசோகர் வேறுபட்டு நின்றார். அந்த மாமன்னனின் ஈரநெஞ்சு போரின் சேதத்தைக் கண்டும், பலியான உயிர்களை எண்ணியும், சிந்தப்பட்ட இரத்தத்தை நினைத்தும் அமைதியாக அழுதது, இனி போரே வேண்டாம் என்று துணிந்தது. அதுவரை விலங்குகளை வேட்டையாடுவதையும், மாமிசம் உண்டு மகிழ்வதையும் பொழுதுபோக்காகக் கொண்டிருந்த அசோகர் மனம் மாறினார். உபகுப்தர் என்பவரின் தூண்டுதலின் பேரில் பெளத்த சமயத்தைத் தழுவினார்.

சில ஆண்டுகளில் புத்த பிக்குவாக மாறிய அவர் தொடர்ந்து அரசனாகவும் நீடித்தார். அசோகரின் கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகளிலிருந்து அவரது சாம்ராஜ்யம் மேற்கே குஷ் மலைப்பிரதேசத்திலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா நதி வரை, வடக்கே இமயமலை அடிவாரத்திலிருந்து தெற்கே சென்னை வரை பரவியிருந்தது தெரிய வருகிறது. அக்பரும், ஒளெரங்கசீப்பும்கூட அந்த அளவு நிலப்பரப்பை ஆண்டதில்லை. போரைத் துறந்த அந்த மாமன்னன் நாட்டை வளப்படுத்துவதில் தனது முழு கவனத்தை செலுத்தத் தொடங்கினார். எல்லா அதிகாரமும் தன் கையில் இருந்தாலும் அதனை தவறாகப் பயன்படுத்தாமல் பார் போற்றும் நல்லாட்சியை வழங்கினார் அசோகர். தனது பரந்து விரிந்த நிலப்பரப்பை ஐந்து மாநிலங்களாகப் பிரித்து அவற்றுக்கு தட்சசீலம், உஜ்ஜயினி, ஸ்வர்ணகிரி, தோஷாலி, பாடலிபுத்திரம் என்ற நகரங்களை தலைநகரங்களாக்கினார்.

மக்கள் நலனுக்காக அதிகம் செய்தார். நீதித்துறை கடுமையாக இருந்தது. ஆனாலும் அவரது இளகிய மனம் தண்டனைகளின் கடுமையைக் குறைத்தது. எல்லா இடங்களிலும் தர்ம மகா மாத்திரர்கள் என்ற அதிகாரிகளை நியமித்தார் அசோகர். நாடு முழுவதும் அறக்கோட்பாடுகளை பரப்புவது அவர்களின் பணி. அசோகரின் கட்டளையின் பேரில் நாடு முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டன. சாலையோரங்களில் பழ மரங்கள் நடப்பட்டன. பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்காக அன்னசத்திரங்களும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. விலங்குகளுக்கும், கால்நடைகளுக்கும்கூட மருத்துவ சாலை அமைத்தார் அசோகர். கலைகளின் புரவலர்களாகவும் விளங்கிய அசோகர் கட்டடக்கலையில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.தலைநகர் பாடலிபுத்திரத்தை எழில் கொஞ்சும் நகராக மாற்றினார். அவரது காலத்தில் 84 ஆயிரம் ஸ்தூபங்கள் கட்டப்பட்டன. மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோவில்கள், ஒற்றைக்கால் தூண்கள் எல்லாம் அவர் காலத்தில்தான் கட்டப்பட்டவைதான்.

புத்த மதத்திற்காகவும் நிறைய செய்தார் அசோகர். அவரது ஆட்சியில் பெளத்தக் கொள்கைகள் பின்பற்றப்பட்டன.ஆனால் பிறமதங்கள் புறக்கணிக்கப்படவில்லை. புலால் தடைசெய்யப்பட்டது. எல்லோருக்கும் சமநீதி உறுதி செய்யப்பட்டது. மண்ணாசை அறவே ஒழிந்ததால் நாட்டில் அமைதி செழித்தது. பெளத்த மதம் நாடு முழுவதும் பரவியது. அதனை இலங்கை, சீனா, மியான்மார், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவ வைத்த பெருமை அசோகரையேச் சேரும். தனது கடைசி மூச்சு வரை மக்களுக்கு நல்லதையே செய்த அசோகர் தனது 72 ஆவது வயதில் காலமானார் என்று வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

சரனாத் என்ற பகுதியில் அசோகர் கட்டிய ஒரு கல்தூண் இருக்கிறது. அதன் உச்சியில் நான்கு சிங்க உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தச்சின்னம்தான் இன்றும் நமது இந்தியாவின் அரசாங்க முத்திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்தியக்கொடியின் மத்தியில் அசோகசக்கரம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தேசத்தின் புகழை காலம் உள்ள வரைக்கும் பேச வைத்த அந்த மாமன்னனுக்கு இந்தியா வழங்கியிருக்கும் மிகப்பொருத்தமான கெளரவம் அது. ஆங்கிலத்தில் utopia என்ற ஒரு சொல் உண்டு எல்லாவற்றிலும் மிகச்சிறந்த உச்சத்தைத் தொட்டு குறைகூற முடியாமல் இருப்பதைக் குறிக்கிறது அந்தச்சொல். உலக வரலாற்றில் utopia என்ற சொல்லுக்கு அசோகரின் ஆட்சி மட்டுமே சரியான உதாரணம் என்று சொல்லலாம்.

ஒரு மன்னன் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ததோடு மட்டுமின்றி, அதற்கு மேலும் பல உன்னத காரியங்களைச் செய்ததால்தான் ஹெச்.டி. வெல்ஸ் (H.T.WELLS) கூறியதுபோல் வரலாறு உள்ளவரை தன் பெயரை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறார் அசோகர். இன்னொரு அசோகர் பிறந்து வந்தால்தான் அப்படிபட்ட ஒரு ஆட்சியை வழங்க முடியும் என்றுகூட சொல்லலாம். பாரபட்சமின்றி அனைத்து உயிர்களிடத்தும் காட்டிய அன்பு, முழு அதிகாரம் கையில் இருந்தும் அதனை செம்மையாகப் பயன்படுத்திய பண்பு,நீதிநெறிகளை சமமாக நடைமுறைப்படுத்தியதில் காட்டிய தெம்பு,இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் சமய நல்லிணக்கத்தை அப்போதே கடைப்பிடித்துக்காட்டிய மாண்பு இவைதான் அசோகர் என்ற மாமன்னனுக்கு வானம் வசப்பட்டதற்கான காரணங்கள்.அவர் கடைப்பிடித்த அந்தப்பண்புகளை மனசாட்சியோடு பின்பற்றும் எவருக்கும் எந்த வானமும் வசப்படும்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

12 comments:

  1. அசோகர் பற்றிய வரலாற்றை பகிர்ந்தமைக்கு நன்றி.... நிறைய தெரிந்து கொண்டேன்...


    வாசிக்க:
    நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

    ReplyDelete
  2. அசோகரின் குண நலன்கள், பண்புகள் பற்றி ஆச்சர்யபடாமல் இருக்க முடியாது. ஒப்பற்ற சிறந்த மனிதர்.
    தெளிவாக அருமையாக கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
    எனக்கு மிக பிடித்த அரசரை பற்றிய அருமையான பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  3. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அழகான பதிவு. நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete
  4. அசோகரைப் பற்றிய ஒரு நினைவூட்டல்... அருமையான பகிர்வு!

    ReplyDelete
  5. அசோகரைப் பற்றிய தகவலும், தொகுப்பும் அருமை... நண்பா...

    ReplyDelete
  6. அசோகரைப் பற்றிய பதிவில் அருந்தகவல்களை தெரிந்துகொண்டோம். சிறப்பாக தொகுத்தமைக்கு பாராட்டுகள் மாணவன்.

    ReplyDelete
  7. அசோகர் ஏன் ரோட்டோரமா மரத்தை வெச்ச்சாரு?

    ReplyDelete
  8. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  9. அந்த அவரது முதல் போர்தான் அவரது தலையெழுத்தையும், இந்தியாவின் தலைவிதியையும் மாற்றி அமைத்தது.///

    அசோகரது கடைசி யுத்தம் தான் கலிங்க போர் என்று படித்தத்தாக ஞாபகம் .

    << //அக்பரும், ஒளெரங்கசீப்பும்கூட அந்த அளவு நிலப்பரப்பை ஆண்டதில்லை.>>

    அந்த காலத்தில் போர் புரியாமலும் பயமுறுத்தாமலும் அண்டை நாட்டை வசபடுத்துவது முடியாத காரியம் .அசோகர் அவரது தந்தை ஆண்ட நிலப்பரப்பை விட அதிகமான நிலப்பரப்பை ஆண்டுள்ளார். போர் புரியாமல் எப்படி .......

    ReplyDelete
  10. நல்ல கருத்துகள்..
    உதவாக்கரை அவர்கள் கூறியுள்ள கருத்துகள் சரியானவை..

    அசோகரைப் பற்றிய கூடுதல் தகவல்:
    அவர் தான் உலகிலேயே அடிமைத்தனத்தை ஒழித்த முதல் அரசர்...

    ஒரே வருத்தம்:
    அசோகர் போரினால் ஏற்பட்ட விளைவுகளைக் கண்டு மனம் திருந்தி புத்த மதத்தைத் தழுவினார்.
    ஆனால், இன்று புத்த மதத்தைத் தழுவிய நாடுகள் தான் மனிதத்தன்மையற்ற கொடும்போர் புரிந்தன.. இதனை புத்த மதத்தின் வீழ்ச்சி என்பதைத் தவிர வேறெப்படி சொல்வது?

    ReplyDelete
  11. udanz ஓட்டுப்பட்டி வேலை செய்யவில்லை.. கவனிக்க!

    ReplyDelete
  12. அசோகர் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்...

    http://iravinpunnagai.blogspot.com/2012/08/blog-post.html

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.