Monday, November 14, 2011

மேரி கியூரி அம்மையார் (அறிவியல் மேதை) - வரலாற்று நாயகி!

1901 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்றுவரை மொத்தம் 826 அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரியும் அறிஞர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர். உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. அதன் நூறாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றார் ஒருவர். அதுவும் வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண் என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத ஒரு கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

சமவாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்த அவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. 1867 ஆம் ஆண்டு நவம்பர் 7- ஆம் நாள் போலந்தின் வார்ஷாவ் நகரில் ஏழ்மையில் பிறந்தார்  Maria Salomea Skłodowska என்ற மேரி கியூரி. மரியாவின் தந்தை ஓர் அறிவியல் ஆசிரியர். அதனாலயே அவருக்கு அறிவியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய மரியா சிறு வயதிலிருந்தே ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்று விரும்பினார். அந்தக்காலத்து பெண்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒன்று அது. ஆனால் தன் கனவை நனவாக்க முடியும் என்று நம்பினார் மரியா. ஏழ்மையைப் போக்கவும், கல்வி கட்டனத்திற்காகவும் அவர் பகுதிநேர துணைப்பாட ஆசிரியராக பணியாற்ற வேண்டியிருந்தது.

தனது 24 ஆவது வயதில் மேல் கல்விக்காக பாரிஸுக்கு வந்த அவர் ஸாபான் என்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இயற்பியலில் மிகச்சிறப்பாக தேர்ச்சிப்பெற்று பட்டமும் பெற்றார். அந்தக்கால கட்டத்தில் அவர் Pierre Curie என்ற இளையரைச் சந்தித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து அவரை திருமணம் செய்து கொண்ட மரியா மேரி கியூரி ஆனார். கணவன், மனைவி இருவருமே இயற்பியலிலும், வேதியியலிலும் ஆராய்ச்சி செய்ய விரும்பினர். 1897-ல் முனைவர் பட்டத்துக்காக யுரேனியம் என்ற தனிமத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினார் மேரி கியூரி. கணவர் பியரி கியூரியும் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பல்வேறு தனிமங்களை அவர்கள் ஆராய்ந்தனர். தோரியம் போன்ற சில தனிமங்களுக்கு கதிரியக்க சக்தி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவர்களது தொடர்ச்சியான ஆய்வின் பலனாக இரண்டு புதிய தனிமங்கள் உலகுக்குக் கிடைத்தன.

முதலாவது தனிமத்திற்கு, தான் பிறந்த போலந்தின் நினைவாக “பொலேனியம்” என்று பெயரிட்டார் மேரி கியூரி. இரண்டாவது தனிமம்தான் புற்றுநோய்க்கு சிகிச்சைக்குப் பயன்படும் “ரேடியம்”. ஆராய்ச்சியில் அளவிட முடியாத ஆர்வம் காட்டிய அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக கல்லூரிகளில் கற்பிக்க வேண்டியிருந்தது. ஓர் ஒழுங்கான ஆய்வுக்கூடத்தை உருவாக்கிக் கொள்ளக்கூட வசதியில்லை. ஒழுகும் கூரையும், போதிய மின்வசதியும் இல்லாத ஓர் அறைதான் அவர்களுக்கு ஆய்வுக்கூடமாக இருந்தது. அந்த ஆய்வுக்கூடத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ஓர் சக விஞ்ஞானி அது ஒரு மாட்டுத்தொழுவம் போல் இருந்தது என்று கூறினார். குளிர்காலத்தில் 6 டிகிரி வரை தட்ப நிலை குறையும். அந்தச் சூழ்நிலையிலும் அயராது ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் அந்த அறிவியல் தம்பதியர். அவர்களுக்கு பண உதவியோ, பொருள் உதவியோ செய்ய எவரும் முன்வரவில்லை.

ரேடியத்திற்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று நண்பர்கள் வற்புறுத்தியும் அதனைச் செய்ய மறுத்து விட்டனர் அந்தத் தம்பதியினர். அதற்கு என்ன காரணம் தெரியுமா? கதிரியக்கம் பற்றி உலகின் எல்லா விஞ்ஞானிகளும் இன்னும் அதிகமாக ஆராய்ந்து புதிய பலன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் அதனால் மனுகுலம் நன்மை பெற வேண்டும் என்ற ஒரே காரணம்தான். எதற்குமே உரிமை கொண்டாட விரும்பும் இந்த சுயநல உலகில் இந்த பிரபஞ்சமே நன்மை பெற வேண்டும் என்று சிந்தித்த அந்த அதிசய தம்பதியரை வரலாறு மட்டுமல்ல நாமும் கைகூப்பி வணங்க வேண்டும். ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய பியரி கியூரி தன் உடலின் மேல் அதனைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் எரிச்சல் உண்டானது. பின்னர் புண் ஏற்பட்டது. அதன் பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அதனை “கியூரி தெரபி” என்று அழைத்தனர்.

ரேடியத்தையும், இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்ததற்காக கியூரி தம்பதிகளுக்கு 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. 1906 ஆம் ஆண்டு கதிரியக்கத்தின் தாக்கத்தாலும், கடும் உழைப்பாலும் நலிவுற்றிருந்த பியரி கியூரியை எதிர்பார விதமாக ஒரு குதிரை வண்டி மோதித் தள்ளியதில் அவர் காலமானார். தனது ஆராய்ச்சியை தனியாக தொடரும் நிலையும், இரண்டு பிள்ளைகளை தனியாக வளர்த்தெடுக்கும் பொறுப்பும் மேரி கியூரிக்கு ஏற்பட்டது. கணவர் இறந்ததும் அவர் வகித்து வந்த பாரிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை வகித்த முதல் பெண்மணி அவர்.

முதல் நோபல் பரிசை வென்ற எட்டே ஆண்டுகளில் அதாவது 1911 ஆம் ஆண்டில் மேரி கியூரிக்கு இரண்டாவது நோபல் பரிசை வழங்கி கெளரவித்தது நோபல் குழு. இம்முறை ரேடியத்தின் அணு எடையை அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறையில் விருது வழங்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டு பாரிஸில் அவர் ரேடியக்கழகத்தை நிறுவினார். அதே ஆண்டு முதலாம் உலகப்போர் மூண்டது. X-கதிர்கள் மூலம் உடலின் எந்தப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது என்று கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று நம்பினார் கியூரி. அதே நேரத்தில் காயம் அடைந்தவர்களை நகர்த்தக்கூடாது என்பதற்காக எக்ஸ்-ரே வாகனத்தை உருவாக்கி சுமார் 150 தாதியர்களுக்கு பயிற்சியும் அளித்தார். ரேடியத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை இன்னும் கண்டறிய வேண்டும் என்று விரும்பிய மேரி கியூரி தனது மகள் ஐரினையும்(Irene) ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமூட்டினார்.

மேரி கியூரியின் கண்டுபிடிப்புகளால்தான் புற்று நோய்க்கு சிகிச்சை பிறந்தது. ஆனால் எந்த கண்டுபிடிப்பு பல புற்று நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டுத்தர உதவியதோ அதே கண்டுபிடிப்பு அவரது வாழ்க்கைக்கே உலை வைத்ததுதான் மிகப் பெரிய அறிவியல் சோகங்களுள் ஒன்று. பல ஆண்டுகள் ரேடியத்தோடு ஆராய்ச்சி செய்ததால் அவருக்கு கடும் கதிரியக்க தாக்கம் ஏற்பட்டது. மனுகுல மேன்மைக்காக பாடுபட்ட அந்த உன்னத விஞ்ஞானியின் உடலை "லுக்கிமீயா" என்ற புற்றுநோய் அரித்தது. கிட்டதட்ட தனது விரல்களையும், கண் பார்வையையும் கதிரியக்கத்திற்கு காவு கொடுத்த நிலையில் 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது 67 ஆவது அகவையில் மரணத்தைத் தழுவினார் மேரி கியூரி அம்மையார்.

தனது தாயின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்த ஐரின் பின்னாளில் செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார். தாயும், தந்தையும், மகளும் நோபல் பரிசு பெற்றது வரலாற்றில் கியூரி குடும்பத்திற்கு மட்டுமே கிடைத்த தனிப்பெருமையாகும். கியூரி தம்பதிகளின் அஸ்தி பாரிஸின் புகழ் பெற்ற 'பாந்தியன்' (Pantheon) அரங்கில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமானவர்களுக்கு பிரெஞ்சு தேசம் வழங்கும் உயரிய மரியாதை அது. ரேடியம் என்ற அரிய தனிமத்தை வேறொரு விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தால் அதனை வைத்து பெரும் பணம் சம்பாதிக்க எண்ணியிருக்கக்கூடும். ஆனால் வறுமையில் உழன்ற போதும் தனது கண்டுபிடிப்பை பணமாக்க எண்ணாத ஓர் உத்தம விஞ்ஞானிதான் மேரி கியூரி அம்மையார். பல புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க தன் உயிரையே பரிசாகத் தந்த அந்த அதிசய அம்மையாரின் வாழ்க்கை நமக்கு சொல்லும் செய்திகள் எளிதானதுதான்.

முதலாவது பிற்போக்கான சமுதாய எண்ணங்களை உதறித் தள்ளும் தன்னம்பிக்கை, இரண்டாவது வறுமையிலும் பிறர் நலம் நாடும் உயரிய சிந்தனை, மூன்றாவது இன்னல்களை தவிடு பொடியாக்கும் கடின உழைப்பு, நான்காவது சுயநலத்தைத் துறந்து பொதுநலத்திற்காக பாடுபடும் பண்பாடு. இந்த நற்பண்புகளை கடைபிடித்து விடாமுயற்சியோடு போரடியதால்தான் அவர் கனவு கண்டது போலவே அறிவியல் என்ற வானம் வசப்பட்டது. மேரி கியூரி அம்மையாரிடம் இருந்த இந்த நான்கு பண்புகளுமே நமக்கு ஒருசேர இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நான்கில் எதாவது ஒரு பண்பை கடைப்பிடித்து விடாமுயற்சியோடு போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

11 comments:

  1. அறிவியலில் பெண்கள் சாதனைப் படைப்பது பெருமைக்குரிய விஷயம். பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  2. இன்னும் நிறைய வரலாறுகளை எதிர்பார்க்கிறோம்..
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி... நண்பா..

    குழந்தைகள் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வணக்கம் அண்ணே ,,]
    இந்த அம்மையாரை பற்றி அறிய தந்தமைக்கு நன்றிங்க அண்ணே ,
    வியக்க வேண்டிய அதே நேரத்தில் போற்றி புகழ வேண்டிய உன்னத பெண் ...
    பகிர்வுக்கு நன்றிங்க அண்ணே

    ReplyDelete
  5. மேரி க்யூரி ரேடியத்தைக் கண்டறிந்தார் என்று ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் அவர் அதனை காப்புரிமை பெறவில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன் :))

    ReplyDelete
  6. நல்ல தகவல்...
    அவரது கண்டுபிடிப்பின் காரணமாகவே அவர் உயிர் இழந்தது சோகம்!

    ReplyDelete
  7. அரிய பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோதரம்.

    ReplyDelete
  8. super pathivaa irukku ellame ....

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.