Thursday, August 11, 2011

வில்லியம் மார்ட்டன் (மருத்துவ உலகின் ஒரு மாமனிதரின் கதை) - வரலாற்று நாயகர்!

மருத்துவத்துறையின் மிக முக்கியமான ஒரு கூறு அறுவை சிகிச்சையாகும். மருந்துகளாலும், மாத்திரைகளாலும் மட்டும் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமாகிறது. நோய்களுக்கு மட்டுமல்ல விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகள் சிதைந்துபோனோருக்கும், அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கெல்லாம் மயக்க மருந்து கொடுக்காமல் உடலை அறுத்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்க்ககூட சிரமமாக இருக்கிறதல்லவா? சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அது கற்பனையாக அல்ல நிஜமான ஒன்றாகவே இருந்தது. அறுவை சிகிச்சை என்றால் அலறல் மட்டுமே நிச்சயம் என்று இருந்த காலகட்டம் அது. வலியை மறைக்க அல்லது உடல் வலியை உணராமல் இருக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்று மருத்துவச்சமூகம் ஏங்கிய அந்தக்கணங்களில் அந்த ஏக்கத்தைப் போக்கினார் ஒருவர்.

அவர் கண்டுபிடித்துத் தந்த மயக்க மருந்தினால் அலறல் ஓய்ந்து மருத்துவர்கள் அமைதியாக தங்கள் அறுவை சிகிச்சை பணியை மேற்கொள்ள முடிந்தது. உடல் வலியை உணராமல் இருக்கச்செய்யும் அந்த அற்புத அருமருந்தை உலகுக்குத் தந்த மாமனிதர் வில்லியம் மார்ட்டன். Sir Stamford Raffles ஆல் சிங்கப்பூர் கண்டுபிடிக்கப்பட்ட அதே ஆண்டு அதாவது 1819 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 9ந்தேதி Massachusettsல் பிறந்தார் William Thomas Green Morton. கல்வியில் சிறப்பாகச் செய்த அவர்  Baltimore பல் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். தனது 23 ஆவது வயதில் அவர் பல் மருத்துவரானார். தனக்குப் பாடம் கற்பித்த Dr. Horace Wells என்பவருடன் சேர்ந்து மார்டன் இரண்டு ஆண்டுகள் ஒரே மருந்தகத்தில் பல் சிகிச்சை வழங்கி வந்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே மார்ட்டன் தனியாக தொழில் செய்யத் தொடங்கினார்.

பற்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகள் அனுபவித்த வேதனையை கண்கூடாகப் பார்த்து அந்த வேதனையை தானும் உணர்ந்தார் மார்ட்டன். வலியைப் போக்க மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் அவருக்குள் எழுந்தது. எனவே தன் தொழிலைக் கவனித்த அதே வேளையில் பல்வேறு பரிசோதனைகளையும் செய்துப் பார்க்கத் தொடங்கினார். அதே நேரத்தில் Dr. Horace Wells அவர்களும் வலி போக்கி மருந்துகளைப் பற்றி சிந்தித்து வந்தார். அவர் சிரிப்பு வாயு என்றழைக்கப்பட்ட  நைட்ரஸ் ஆக்ஸைடை மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பார்த்தார் பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. உற்சாகமடைந்த Dr.Wells அந்த வாயுவின் பலனை பொதுமக்களுக்கு நிரூபித்துக் காட்ட விரும்பினார். அதற்கு மார்டனின் துணையை நாடினார் மார்ட்டனும் உதவவே 1845 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  Massachusetts பொது மருத்துவமனையில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

நைட்ரஸ் ஆக்ஸைடு கொடுத்து ஒருவரின் பல்லைப் பிடுங்கியபோது அவர் வலியால் அலறவே அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அவமானம் அடைந்த  Dr.Wells தலை குனிந்தவாறே மருத்துவமனையை விட்டு வெளியேறினார். பல் மருத்துவத்தில் செயற்கைப் பற்களைப் பொருத்துவதில் நிபுனத்துவம் பெற்றிருந்தார் மார்ட்டன். அவ்வாறு செய்வதற்கு பழைய பற்களை வேரோடுப் பிடுங்கி எடுக்க வேண்டியிருக்கும். மயக்க மருந்து இல்லாமல் அதனைச் செய்தால் மரண வேதனைதான் மிஞ்சும். அந்த வலியை மறக்கடிக்க நைட்ரஸ் ஆக்ஸைடு போதாது என்று உணர்ந்த மார்ட்டன் அதிக வலிமைப் பொருந்திய ஒரு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். Dr. Charles T. Jackson என்ற மூத்த மருத்துவர் ஈத்தரைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்ற ஆலோசனையை மார்ட்டனிடம் தெரிவித்தார். ஈத்தருக்கு மயக்க சக்தி உண்டு என்பதை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே பேரசூஸஸ் என்ற சுவிஸ் இரசாயணவியலார் கண்டுபிடித்திருந்தார்.

ஆனால் எந்த மருத்துவரும் அதனை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தியதில்லை. ஈத்தரின் தன்மைகளைப் பற்றி மேலும் ஆராய்ட்சிகளைச் செய்தார் மார்டன். தன் நாய்க் குட்டியின் மீதும் பின்னர் தன் மீதும் ஈத்தரைப் பயன்படுத்திப் பார்த்தார். அதனை ஒரு நோயாளியின் மீது பயன்படுத்திப் பார்க்கும் அற்புத வாய்ப்பு மார்ட்டனுக்கு 1846 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி கிடைத்தது. அன்றைய தினம் தாங்க முடியா பல் வலியுடன் ஈவன் ப்ரோத் என்பவர் மார்ட்டனின் மருந்தகத்திற்கு வந்தார். என்ன செய்தாவது தனது வலியைப் போக்குமாறு மார்ட்டனிடம் கெஞ்சினார். இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்று நம்பிய மார்ட்டன் முதலில் அந்த நோயாளியை ஈத்தரை நுகரச் செய்தார். நோயாளி மயக்கமடையவே பல்லைப் பிடுங்கி எடுத்தார். மயக்கம் தெளிந்த நோயாளி தான் எந்த வலியையும் உணரவில்லை என்றார். உலகிற்கு மயக்க மருந்தை தந்துவிட்ட களிப்பில் மகிழ்ந்தார் மார்ட்டன்.

தன் முதல் முயற்சி வெற்றி தந்து அடுத்தநாள் பத்திரிக்கைகளில் அந்தச் செய்தி வெளி வந்திருந்தாலும் மருத்துவ உலகம் பெரிதாக மகிழ்ந்து விடவில்லை. இன்னும் பெரிய அளவில் ஈத்தரின் தன்மையை விளக்கிக் காட்ட வேண்டும் என்பதை உணர்ந்த மார்ட்டன் பல மருத்துவர்களுக்கு முன்னிலையில் அதைச் செய்துகாட்ட  Massachusetts பொது மருத்துவமனையின் மூத்த அறுவை மருத்துவர் Dr. John Collins Warren ஒரு வாய்ப்புக் கேட்டார்.Dr. John Collins Warren இணங்கவே இரண்டே வாரங்களில் அதாவது 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 11ந்தேதி நிறைய மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் கூடினர். அவர்களுக்கு முன்னிலையில் கில்பர் ஆல்பர்ட் என்ற நோயாளிக்கு ஈத்தரைக் கொடுத்தார் மார்ட்டன். அதன் பிறகு அந்த நோயாளின் கழுத்திலிருந்த ஒரு கட்டியை வெட்டி எடுத்தார் Dr. Warren. நோயாளிக்கு எந்தவித வலியும் தெரியவில்லை. மயக்க மருந்து முழுமையாக வேலை செய்ததை மருத்துவ உலகம் கண்டு வியந்தது. மார்ட்டனின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. 

மருத்துவ உலகிற்கு மிகத் தேவையான ஒரு கண்டுபிடிப்பு (ஈத்தர்) என்பதால் அதற்கான காப்புரிமம் பெறவதற்காக விண்ணப்பித்தார் மார்ட்டன். அவருக்கு காப்புரிமம் கிடைத்தாலும் மயக்க மருந்து கண்டுபிடித்ததில் வேறு சிலரும் உரிமை கொண்டாடினர். நைட்ரஸ் ஆக்ஸைடைப் பயன்படுத்தித் தோற்றுப்போன Dr. Horace Wells, ஈத்தரைப் பயன்படுத்திப் பார்க்குமாறு ஆலோசனைக் கூறிய  Dr. Charles T. Jackson இருவரும் அதில் உரிமை கொண்டாடினர். அவர்களைத் தவிர்த்து Dr.  Crawford Williamson Long என்பவர் மார்ட்டன் செய்துகாட்டியதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1842 ஆம் ஆண்டிலயே ஈத்தரைப் பயன்ப்டுத்தி தான் அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அதுபற்றிய அவரது கட்டுரை மார்ட்டனின் வெற்றிக்குப்பின் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் வெளிவந்தது. எனவே முதன்முதலாக ஈத்தரை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர் என்று மார்ட்டனின் பெயரையே வரலாறு நினைவில் வைத்துள்ளது.

எனினும் அந்த பெருமையைப் பெற அந்த நான்கு மருத்துவர்களுமே சட்டத்தின் உதவியை நாடினர். அந்த இழுபறி நீடித்த வேளையில் மற்ற மருத்துவர்கள் ஈத்தரைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் மருத்துவமனைகள்  ராயல்டி எனப்படும் உரிமைத்தொகையைச் செலுத்த மறுத்தனர். அதனாலும் கண்டுபிடிப்பு உரிமையை நிலைநாட்ட ஆன நீதிமன்றச் செலவுகளாலும் வெறுப்படைந்தார் மார்ட்டன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்த அவர் தனது சொத்துகள் அனைத்தையும் இழந்தார். நோயாளிகளின் வலிதீர பாடுபட்ட அவருக்கு இறுதி நாட்களில் மன வேதனையும், ஏழ்மையும்தான் மிஞ்சியது. இறுதியில் 1868 ஆம் ஆண்டு ஜூலை 15ந்தேதி தனது 48ஆவது வயதில் நியூயார்க்கில் காலமானார். அவரது மனைவிக்கும், ஐந்து பிள்ளைகளுக்கும்கூட எந்த சொத்தையோ, பொருளையோ விட்டுச்செல்லவில்லை.

தங்கள் கண்டுபிடிப்புகள் மனுகுல மேன்மைக்காகவே அன்றி சொத்து சேர்த்து செல்வந்தர்கள் ஆவதற்கு அல்ல என்று வாழ்ந்த பல வரலாற்று மாந்தர்களுக்கு மத்தியில் மார்ட்டன் தனது கண்டுபிடிப்பின் மூலம் பணமும், புகழும் சேர்க்க விரும்பியது என்னவோ உண்மைதான். ஆனால் அது அவரது கண்டுபிடிப்பின் மகத்துவத்தை எந்த வகையிலும் குறைத்துவிடாது. மார்ட்டன் தைரியமாக உலகுக்குச் செய்து காட்டியதால்தான் கடந்த 165 ஆண்டுகளாக நோயாளிகள் வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிகிறது. இது ஒன்றே மார்ட்டனுக்கு வானம் வசப்பட்டதற்குச் சமம். 

“சுவாசிக்கும் மயக்க மருந்தை உலகுக்குத் தந்து அறுவை சிகிச்சையிலிருந்து வலியை அறுத்தெடுத்தவர், இவருக்கு முன் வலியும் வேதனையும்தான் மிச்சம் இவருக்குப் பிறகுதான் வலியைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டது விஞ்ஞானம்” 

என்ற இந்த வாசகங்கள் மார்ட்டனின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளன. உண்மைதானே! அடுத்தமுறை நீங்கள் யாரேனும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நேர்ந்தால் வில்லியம் மார்ட்டனுக்கு நன்றி சொல்லுங்கள். அன்று மார்ட்டன் சிந்திய வியர்வையும், விடாமுயற்சியும்தான் இன்று உலக மக்கள் பலர் வலி இல்லாமல் நிம்மதியாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிகிறது. மனத்தை ஒருநிலைப் படுத்தி தன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் விடா முயற்சியோடு பயணம் செய்யும் எவருக்கும் அவர்கள் விரும்பும் வானம் வசப்படும் என்பதுதான் மார்ட்டனின் வாழ்க்கை நமக்கு வலி இல்லாமல் சொல்லும் உண்மை.

(நன்றி - திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

நண்பர்கள் கவனத்திற்கு:
பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக டெரர்கும்மி நண்பர்களின் ஒரு புதிய முயற்சியாக பிரம்மாண்டமான புதிர் விளையாட்டு போட்டி -  “HUNT FOR HINT” உங்கள் டெரர்கும்மி.காம் - இல் வரும் புதன்கிழமையன்று (17/08/2011) வெளியாகிறது. நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக ’முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ போட்டியில் கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)


போட்டிப்பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள 


பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்
    

25 comments:

 1. நல்ல பகிர்வு...
  நாட்டுல எப்பவும் அடுத்தவன் பொருளுக்கு உரிமை கொண்டாடுற ஆளுக இருக்கத்தான் செய்யிறாங்க...
  தொடரட்டும் உங்கள் வரலாற்றுப் பணி.

  ReplyDelete
 2. அறிவியல் உலகின் மாமனிதன் மார்ட்டன். இன்று மயக்க மருந்து இல்லையென்றால்?, நினைத்து பார்க்கவே முடியல.

  நன்றி சிம்பு.

  ReplyDelete
 3. தங்கள் கோல்டான வொர்க் தொடரட்டும் :))

  ReplyDelete
 4. உங்கள் சேவை தொடரட்டும் :)

  ReplyDelete
 5. வழக்கம்போலவே ரொம்ப ரொம்ப அருமையான பதிவு அண்ணா :)

  பாவம் அவரது இறுதி நாட்கள் இப்படி ஆகிவிட்டது. இருந்தாலும் அவர் பெயர் எப்பொழுதும் அழியாது!

  ReplyDelete
 6. வரலாற்று நாயகர்களை அறிமுகப்படுத்தும் மாணவனிடம் மாணவனாக இருப்பதில் பெருமிதம்..

  சேவை தொடர வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 7. மாப்ள அட்டகாசமா சொல்லி இருக்கய்யா...நன்றி!

  ReplyDelete
 8. தனது இலக்கை எட்ட என்னாலும் முடியும் என்ற நம்பிக்கையை படிப்போர் மனதில் பதியவிடும் பெரும் பங்கை ஆற்றி வரும் உங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வழக்கம் போல அருமை அண்ணா.

  ReplyDelete
 10. 15 வரிகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதுக

  ReplyDelete
 11. வழமைபோல் நல்ல தகவல் நன்பா.. உங்கள் சேவை தொடரட்டும்..
  பகிர்ந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 12. வித்தியாசமான தகவல்கள் மிக்க நன்றி சிம்பு

  ReplyDelete
 13. “சுவாசிக்கும் மயக்க மருந்தை உலகுக்குத் தந்து அறுவை சிகிச்சையிலிருந்து வலியை அறுத்தெடுத்தவர், இவருக்கு முன் வலியும் வேதனையும்தான் மிச்சம் இவருக்குப் பிறகுதான் வலியைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டது விஞ்ஞானம்”  .... super!

  ReplyDelete
 14. விஞ்ஞானிகளை - மருத்துவ மேதைகளை - குறித்து பல பயனுள்ள தகவல்களை தொகுத்து , அதை எங்களுடன் பகிர்ந்து தனி முத்திரை பதித்து வருகிறீங்க. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 15. இதுபோன்ற வரலாற்று நாயகர்
  களின் வாழ்க்கை வரலாறுகள்
  அடிக்கடி வெளியிட வேண்டுகிறேன்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 16. super post. Thanks for sharing.

  ReplyDelete
 17. மார்ட்டனின் அசாத்திய முயற்சியால் இன்னைக்கு நம்மால நிம்மதியா ஆபரேஷன் செய்துக்கொள்ள முடிகிறது...

  உலகத்துக்கே நன்மையை கொண்டு வந்து காண்பித்த மார்ட்டனின் நிலை அவரின் 48 வயசுலயே ஏழ்மையில் முடிந்தது சோகமான விஷயம்...

  அருமையான கட்டுரை வழங்கியமைக்கு அன்பு நன்றிகள்...

  ReplyDelete
 18. தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 19. தொடரட்டும் உங்கள் தங்கமான பணி...!

  ReplyDelete
 20. வரலாறு மிக பெரிய ஆசிரியர் உள்ளது. நம் விடுதலைக்காக போராடிய அந்த மதிக்கிறேன் எப்படி இது எங்களுக்கு கற்று கொடுத்தார். ரஜினி பரிணாம சக்தியை பற்றி பேசுகிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
  http://bit.ly/n9GwsR

  ReplyDelete
 21. ஸலாம் சகோ.மாணவன்,
  தொடர்ந்து அருமையான அரியத்தகவல்கள் அடங்கிய பதிவுகளை எங்களுக்கு அறியத்தந்து கொண்டு இருப்பதற்கு மிக்க நன்றி சகோ.மாணவன்.

  ReplyDelete
 22. அறிவியல் உலகின் மாமனிதன் மார்ட்டின். அறிந்து கொள்ள முடிந்தது.
  நன்றி.

  ReplyDelete
 23. இப்போதான் அறிந்து கொள்ள முடிந்தது அண்ணே ..
  நல்ல தகவலுக்கு நன்றி .. தொடர்ந்து வழங்க வேண்டி கொள்கிறேன் நன்றி

  ReplyDelete
 24. மயக்கம் தெளிந்த நோயாளி தான் எந்த வலியையும் உணரவில்லை என்றார். உலகிற்கு மயக்க மருந்தை தந்துவிட்ட களிப்பில் மகிழ்ந்தார் மார்ட்டன்./

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.