Monday, August 27, 2012

ரிச்சர்ட் ட்ரெவிதிக் (இரயில் வண்டி உருவான கதை) - வரலாற்று நாயகர்!

சிங்கப்பூரின் பொது போக்குவரவு முறை உலகத்தரம் வாய்ந்தது. அதற்கு முக்கிய காரணம் நம்மில் பெரும்பாலோர் சொகுசாக பயணம் செய்து பழகிவிட்ட MRT (Mass Rapid Transit) எனப்படும் பெருவிரைவு இரயில்கள். நாம் பயணிக்கும் அந்த இரயில்கள் மின் சக்தியினால் இயங்குகின்றன. பல பரிணாம வளர்ச்சிக்குப் பிறகுதான் இரயில்கள் இந்த நிலையை எட்டியிருக்கின்றன. முதன் முதலில் உலகுக்குக் கிடைத்த இரயில் வண்டி எப்படி இருந்தது தெரியுமா? மிகப்பெரிய சத்தத்துடன் கோபமாக பெருமூச்சு விடும் ராட்சஷனைப்போல் இருந்தது காரணம் அந்த இரயில் வண்டி நீராவியால் இயங்கியது. 1700-களின் இறுதியில் 'ஜேம்ஸ் வாட்' என்ற வரலாற்று நாயகர் ஸ்டீம் என்ஜின் ('Steam Engine') எனப்படும் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் என்று முன்னொரு வரலாற்று நாயகர் தொடரில் தெரிந்து கொண்டோம். 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த அதே நீராவி இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு ஓடும் இரயில் வண்டியை 1804-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார் இன்னொரு வரலாற்று நாயகர். அந்த கண்டுபிடிப்புதான் உலகம் முழுவதும் நெடுந்தூரத் தரைப்பயணத்திற்கு அடிப்படையை வகுத்து தந்திருக்கிறது. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்கும் அந்த வரலாற்று நாயகர் (Richerd Trevithick) ரிச்சர்ட் ட்ரெவிதிக்.

இங்கிலாந்தின் 'Cornwall' என்ற பகுதியில் 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார் ரிச்சர்ட் ட்ரெவிதிக். அவருடைய தந்தை வெள்ளிய சுரங்கம் ஒன்றின் நிர்வாகியாக இருந்தார் அதனால் ட்ரெவிதிக்கும் சுரங்கத்தொழிலுக்கும் இயற்கையாகவே ஒரு பிணைப்பு ஏற்பட்டது. சிறுவயது முதலே ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை செய்து புகழ் பெற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. அதனால் எப்போதும் ஏதாவது  இயந்திரங்களை வடிவமைப்பதிலும் அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். அதன் காரணமாக அவர் பள்ளிப்படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எப்படியோ படிப்பை முடித்து ஒரு சுரங்க பொறியாளராக தேர்ச்சி பெற்றார். அந்தக்காலத்தில் சுரங்கங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்கி விடும். அதனால் சுரங்கப்பணிகள் முடங்கிப்போகும் அப்படி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நீராவி இயந்திரங்கள்தான் பயன்பட்டன. 


நீராவி இயந்திரங்களின் செயல்பாட்டை  ட்ரெவிதிக் நன்கு அறிந்திருந்ததால் எந்த சுரங்கத்தில் நீராவி இயந்திரங்கள் பழுதானாலும் அவற்றை சரி செய்ய அவர்தான் அழைக்கப்படுவார். அவற்றை பழுதுப்பார்ப்பதோடு நின்று விடவில்லை  ட்ரெவிதிக்கின் ஆர்வம், குறைந்த அழுத்தமுடைய அந்த நீராவி இயந்திரங்களிள் சில முன்னேற்றங்களை செய்து சுரங்கங்களில் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதே அவரது அன்றாட எண்ணமாக இருந்தது. முதலில் உச்ச அழுத்தமுடையதாக நீராவி இயந்திரத்தை மாற்றி அமைத்தார். பின்னர் அதனை எங்கு வேண்டுமானாலும் தூக்கி செல்லும் அளவுக்கு வடிவமைத்தார். அப்போதுதான் தானாகவே நகர்ந்து செல்லும் ஒரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அப்படிபட்ட ஒரு கருவியை உருவாக்கிவிட வேண்டும் என்று கனவு காணத்தொடங்கினார். அந்தக்கனவை பதினெட்டாம் நூற்றாண்டு மக்களிடம் அவர் சொல்லியிருந்தால் மற்ற சாதனையாளர்களுக்கு கிடைத்தது போன்ற பரிகாசம்தான் அவருக்கும் கிடைத்திருக்கும்.   

தனது கனவை நனவாக்க அயராது உழைத்து 1801-ஆம் ஆண்டு நகரும் நீராவி இயந்திரத்தை அவர் உருவாக்கினார். Cornwall வீதிகளில் அதனை ஓட்டியும் பார்த்தார். ஆனால் எதிர்பாராவிதமாக ஏதோ கோளாற்றினால் அந்த இயந்திரம் தீப்பிடித்து எரிந்து போனது. அதனால் வீதியில் ஓடிய அந்த முதல் நீராவி இயந்திரம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு எந்த சான்றும் இல்லாமல் போனது. சோதனைகள் வரும்போது சோர்ந்து போவோருக்கு வாழ்க்கையும், வானமும் வசப்பட்டதில்லையே! வரலாற்றில் நிலைத்து நிற்க விரும்பியதால்  ட்ரெவிதிக்கும் அந்த முதல் தோல்வியால் சோர்ந்து போய் விடவில்லை. இரண்டே ஆண்டுகளில் இன்னொரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினார். அது இயங்கும் முறையை தன நண்பர்களுக்கு காண்பித்தபோது அது விளையாட்டு பொம்மை என்று கூறினார்கள். ஆனால் அது பொம்மை அல்ல உண்மையான ரயில் வண்டி என்பதை நிரூபிக்க அதனை வீதியில் ஓட்டிக்காட்டினார் ட்ரெவிதிக். 

'குக்' 'குக்'... என்று பேரிரைச்சலுடன் பெருமூச்சு விட்டபடி ஓடிய அந்த வண்டியைப் பார்த்து பயந்துபோன மக்கள் 'Puffing Devil' அதாவது பெருமூச்சு விடும் பேய் என்று அலறியபடி ஓடி ஒளிந்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.  ட்ரெவிதிக் உருவாக்கிய அந்த நீராவி இயந்திர இரயில் மணிக்கு எட்டு முதல் ஒன்பது மணி வேகத்தில் ஓடியது. இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்  ட்ரெவிதிக்கின் அந்த புதிய கண்டுபிடிப்பைக்கண்டு தங்கள் பிழைப்பில் மண் விழப்போகிறது என்று கோபம் அடைந்தனர் குதிரை வண்டிக்காரர்கள். ஏனெனில் அப்போதெல்லாம் தரைப்பயணத்திற்கு குதிரை வண்டியைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது.  ட்ரெவிதிக்கின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்கூட குதிரை வண்டிக்காரர்கள் திட்டம் தீட்டினர். ஆனால் தனது முயற்சியை தொய்வின்றி தொடர்ந்த  ட்ரெவிதிக் 1804-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் நாள் South Wales-ல் நீராவி இயந்திரத்தால் பொருட்களையும், பயணிகளையும் இழுத்து செல்ல முடியும் என்பதை நிரூபித்துக்காட்டினார்.  


70 பயணிகளையும் 10 டன் எடையுள்ள இரும்பையும் ஒன்பது மைல் தூரத்திற்கு இழுத்து சென்றது அந்த இரயில் வண்டி. ஆனால் இன்று போல் அப்போது தண்டவாளங்கள் கிடையாது என்பதால் இரும்புத்தகடு நிரப்பிய பாதையில்தான் அந்த இரயில் வண்டி ஓடியது. இரயில் வண்டியின் கணம் தாங்காமல் அந்த தகட்டுப்பாதை பழுதானது. எனவே அது அதிக செலவு பிடிக்கும் ஒரு சமாச்சாரம் என்று எண்ணி எந்த தொழிலபதிரும் இரயில் கட்டமைப்பில் முதலீடு செய்ய முன்வரவில்லை. அதனால் வெறுப்படைந்த  ட்ரெவிதிக் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரது கண்டுபிடிப்புகளைப்பற்றி நன்கு அறிந்திருந்த தென் அமெரிக்கா அவரை இருகரம் கூப்பி வரவேற்றது. 1816-ஆம் ஆண்டு Peru-விற்கு சென்ற  ட்ரெவிதிக் அங்குள்ள சுரங்கங்களுக்கு நீராவி இயந்திரங்கள் அமைத்துக் கொடுத்தார். சுரங்கங்கள் நல்ல லாபம் ஈட்டத்தொடங்கின. 

1826-ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் வெடித்ததால் அவர் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் அமேரிக்கா முழுவதும் பயணம் செய்தார். இருந்தாலும் தனது கனவை நனவாக்க முடியாமல் மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்  ட்ரெவிதிக் அப்போது தான் கண்டுபிடித்த நீராவி இரயில் சில முன்னேற்றங்களுடன் புழக்கத்திற்கு வந்திருப்பதை கண்டு மகிழ்ந்தார். எனினும் தன்னுடைய முயற்சியின் விளைவாகத்தான் இரயில் வண்டி உருவானது என்பதால் தனக்கு உதவிப்பணம் தருமாறு அவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வேலை இல்லாமல் சிரமபட்ட  ட்ரெவிதிக்குக்கு தனது நிறுவனத்திலேயே வேலை கொடுக்க முன் வந்தார் ஒருவர். அவர் ட்ரெவிதிக் கண்டுபிடித்த நீராவி இயந்திரத்தின் அடிப்படையில் புதிய இயந்திரத்தை வடிவமைத்து பிரபலமான இரயில் வண்டியை உருவாக்கியவர். எனவே நன்றி உணர்வுடன் அவர்  ட்ரெவிதிக்குக்கு அந்த வேலையை தர முன் வந்தார்.  

முதலில் சம்மதித்தாலும் பின்னர் அங்கு வேலை செய்ய மறுத்து விட்டார்  ட்ரெவிதிக். வறுமையிலும், வேதனையிலும் வாடிய அவர் 1833-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் தனது 62-ஆவது வயதில் காலமானார். அவர் வாழ்ந்தபோது கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் அவருக்குரிய மரியாதையை வழங்காமல் போயிருக்கலாம். மனிதன் தவறு செய்தாலும் வரலாறு தவறு செய்வதில்லை. எனவேதான் ட்ரெவிதிக்கை 'இரயில் வண்டியின் முன்னோடி' என்று இன்றும் அது நினைவில் வைத்து போற்றுகிறது. இப்போது நாம் சொகுசாக பயணம் செய்யும் பெருவிரைவு இரயில்கள் ட்ரெவிதிக் கண்டுபிடித்த நீராவி இரயிலின் வழித்தோன்றல்தான் என்று நன்றியோடு நினைத்துப் பார்த்தாலே அந்த வரலாற்று நாயகருக்கு நாம் மரியாதை செய்தவர்களாவோம்.   

இன்று உலகம் முழுவதும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இரயில்கள் எல்லாமே ட்ரெவிதிக் விட்டு சென்றுள்ள நினைவு சின்னங்களே. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்க ட்ரெவிதிக் என்ற வரலாற்று நாயகருக்கு உதவிய பண்புகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடும் உழைப்பு, மனுகுலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம். அந்த பண்புகளை பின்பற்றும் எவருக்கும் வானத்தை வசப்படுத்துவது வரலாற்றின் கடமையாகும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

9 comments:

 1. புதிய வரலாறை அறிந்து கொண்டேன் ..

  தொடருட்டும்

  ReplyDelete
 2. இரயிலின் நாயகன் வரலாறு அருமை! எந்த நாடுமே புதிய படைப்புகளை முதலில் அங்கீகாரம் செய்வதில்லை என்பது சோகமான வரலாறு!

  இன்று என் தளத்தில்
  நினைவுகள்! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
  நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

  ReplyDelete
 3. இந்தப்பக்கம் வந்து ரொம்ப நாளாய்டுச்சு.

  மாணவனின் பதிவு வழக்கம்போல நல்லாயிருக்குது.
  //'குக்' 'குக்'... என்று பேரிரைச்சலுடன் பெருமூச்சு விட்டபடி ஓடிய அந்த வண்டியைப் பார்த்து பயந்துபோன மக்கள் 'Puffing Devil' அதாவது பெருமூச்சு விடும் பேய் என்று அலறியபடி ஓடி ஒளிந்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. //

  இந்த உலகம் எந்த உண்மையைத்தான் உடனே நம்பியிருக்குது? உலகம் உருண்டைனு சொன்னவனையே கொன்ன உலகமாச்சே..

  வரலாற்றுப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
  :-)

  ReplyDelete
 4. அருமை... சேமித்துக் கொண்டேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. தகவல் களஞ்சியம் உங்கள் வலைத்தளம் ... நன்றி

  ReplyDelete
 6. ஒரு சிறப்பான பகிர்வு. எப்போழுது போல கலக்கீட்டீங்க
  // தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்க ட்ரெவிதிக் என்ற வரலாற்று நாயகருக்கு உதவிய பண்புகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடும் உழைப்பு, மனுகுலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம். அந்த பண்புகளை பின்பற்றும் எவருக்கும் வானத்தை வசப்படுத்துவது வரலாற்றின் கடமையாகும். //
  அருமையான வரிகள். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
  என்னுடைய தளத்தில்

  ஏணிப்படி

  தன்னம்பிக்கை

  நம்பிக்கை
  ReplyDelete
 7. கருத்துரை வழங்கி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி!

  ReplyDelete
 8. ஐயா மாணவருக்கு நன்றி!

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.