Monday, August 13, 2012

ஜார்ஜ் பெர்னாட் ஷா (இலக்கிய மேதை) -வரலாற்று நாயகர்!

நோபல் பரிசைப் பெற்று விட்ட எவரும் தாம் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து விட்டதாக நியாயமாக கர்வப்பட்டுக்கொள்ளலாம். அந்தளவுக்கு உலகப் பிரசித்திப் பெற்ற நோபல் பரிசு தன்னைத் தேடி வந்தபோது அதை உதாசீனம் செய்யும் திணவும், தைரியமும் ஒரு வரலாற்று நாயகருக்கு இருந்திருக்கிறதென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? 1925-ஆம் ஆண்டில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக அறிவித்தது நோபல் குழு. வந்த பரிசை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதற்கு பதில் அவர் என்ன செய்தார் தெரியுமா? இந்த வருடம் நான் ஒன்றும் எழுதவில்லையே? எனக்கு ஏன் இந்த பரிசு? என்று குழுவைக் கேட்டார். அதற்கு நோபல் குழு நீங்கள் ஏற்கனவே எழுதியதற்காக இந்த பரிசு என்றது. ஒருவன் நடுக்கடலில் தத்தளித்து சிரமப்பட்டு கரை சேர்ந்த பிறகு அவனுக்கு காற்றடித்த ரப்பர் ட்யூபைக் கொடுப்பது போல் இருக்கிறது இந்த பரிசு என்று கிண்டலாக பேசிய அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்ததோடு மட்டுமல்லாமல், பரிசுத் தொகை அவர் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காக கொடுத்து விட்டார். யார் அந்த அதிசய மனிதர் என்று வியக்கிறீர்களா?! அவர்தான் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாமல் சைவ உணவு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கடைப்பிடித்து கிட்டதட்ட 95 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து மறைந்த ஆங்கில இலக்கிய மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா. 

1856-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் நாள் அயர்லாந்தின் டப்லின் (Dublin) நகரில் பிறந்தார் பெர்னாட் ஷா. இரண்டு சகோதரிகளை அடுத்து மூன்றாவது பிள்ளை அவர். அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அவரது தந்தை George Carr Shaw குடித்து குடித்தே பணத்தை செலவழித்தார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது. வீட்டு வாடகை பணம்கூட குடுக்க முடியாமல் கடற்கரையோரம் ஓர் ஓட்டைப்படகில் அவர்கள் வசித்த நாட்களும் உண்டு. குடும்ப வறுமை நிலமைக்கு தந்தையின் குடிப்பழக்கம்தான் காரணம் என்பதை பிஞ்சு வயதிலேயே உணர்ந்தார் பெர்னாட் ஷா. எனவே மதுவைத் தொடுவதில்லை என்று உறுதி பூண்டார். 1885-ஆம் ஆண்டு தந்தை இறந்து போனபோது அவரது இறுதிச்சடங்கில்கூட கலந்து கொள்ளவில்லை குடும்ப உறுப்பினர்கள். குடும்ப வறுமை காரணமாக பத்தாவது வயதில்தான் முதன் முதலில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைத்தார் பெர்னாட் ஷா. அதுவும் சுமார் நான்கு ஆண்டுகள்தான் பள்ளியில் படிக்க முடிந்தது. ஆனாலும் சொந்தமாகவே நூல்கள் வாசிப்பதில் அவருக்கு அலாதி பிரியம்.

பத்து வயது நிறைவதற்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகம் வரை நிறைய புத்தகங்களை வாசித்து முடித்திருந்தார். விளையாட்டிலும் ஆர்வம் இல்லாமல் அதிக கூச்ச சுபாவம் கொண்டிருந்த அவர் பின்னாளில் உலகப்புகழ் பெறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. பதினைந்தாவது வயதில் வேலைப் பார்க்கத் தொடங்கி, இருபதாவது வயதில் இங்கிலாந்து வந்த அவர் நிறைய எழுதத் தொடங்கினார். தன்னுடைய எழுத்துகளை ஆர்வத்துடன் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார். ஆனால் அனுப்பபட்ட வேகத்திலேயே அது திரும்பி வந்துவிடும். எந்த சராசரி எழுத்தாளனும் சோர்ந்து போயிருப்பான். அவருடைய எழுத்துகளை பதிப்பிக்க எந்த பதிப்பாளரும் முன்வரவில்லை. ஆனால் தன் எழுத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட பெர்னாட் ஷா தொடர்ந்து எழுதினார். தொடர்ந்து பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார். முயற்சி வீண் போகவில்லை அவ்வுளவு நிராகரிப்புகளை சந்தித்தப் பிறகு அவருடைய படைப்புகளுக்கு ஒரு சொல்லுக்கு இவ்வுளவு என்று கணக்கிட்டு சன்மானத் தொகை வழங்கபட்ட நிலையும் வந்தது என்பது வரலாற்று உண்மை. அதுமட்டுமல்ல அவர் என்ன பேசினாலும், செய்தாலும் அது பத்திரிகைகளில் செய்தியானது. 

தன் தாயிடமிருந்து இசைக் கற்றுக்கொண்ட பெர்னாட் ஷா இசை விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். அவர் விமர்சனம் எழுதப்போகிறார் என்றாலே இசை கலைஞர்களுக்கு நடுக்கம் எடுக்குமாம். பின்னர் நாடக விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். பின்னர் நாமே ஏன் நாடகங்கள் எழுதக்கூடாது? என்று எண்ணி நாடகங்கள் எழுதத் தொடங்கினார். Candida, The Devil's Disciple, Arms and the Man, Saint Joan, Pygmalion, The Apple Cart, The Doctor's Dilemma, போன்ற நாடகங்கள் அவருக்கு பெரும் புகழ் சேர்த்தன. அவரது பல படைப்புகள் மேடைகளில் அரங்கேறின. நாடகங்களில் அவர் கூறிய கருத்துகளைக் கேட்டு அவரை இங்கிலாந்தின் பிளேட்டோ என்று வருணித்தது இலக்கிய சமூகம். தன் எழுத்தில் கேலி, நையாண்டி, நகைச்சுவை ஆகியவற்றை சரமாரியாக கலந்து கொடுத்தார் அவர். எழுத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் நகைச்சுவையையும், நையாண்டியையும் சரளமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக சில புகழ்பெற்ற சம்பவங்கள் உண்டு. 

ஒல்லியான தோற்றமுடைய பெர்னாட் ஷாவைப் பார்த்து ஒருமுறை அவரது நண்பரும், சக எழுத்தாளருமான ஹெச்.டி வெல்ஸ் நம் நாட்டிற்கு வருபவர்கள் உம்மைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்திருப்பதாக எண்ணுவார்கள் என்று கிண்டலடித்தாராம், அதற்கு சற்றும் சளைக்காமல் அந்தப் பஞ்சத்திற்கு யார் காரணம் என்பதும் உம்மைப் பார்த்தால் அவர்களுக்குப் புரியும் என்றாராம் பெர்னாட் ஷா. காரணம் ஹெச்.டி.வெல்ஸ் உடல் பருமனானவர். இன்னொரு புகழ்பெற்ற சம்பவம்.. விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பெர்னாட் ஷாவை சந்தித்த ஓர் அழகிய நடிகை நீங்கள் பெரிய அறிவாளி, நான் சிறந்த அழகி நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் என் அழகும், உங்கள் அறிவும் கொண்ட குழந்தை நமக்கு பிறக்குமல்லவா? என்று கேட்டாராம். அதற்கு புன்னகைத்துக் கொண்டே அந்தக் குழந்தை உங்களுடைய அறிவையும் என்னுடைய அழகையும் கொண்டு பிறந்து விட்டால் என்ன செய்வது? என்று கேட்டாராம் பெர்னாட் ஷா.

மிகப்பெரிய சபைகளில்கூட தைரியமாக கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல் இருந்தது பெர்னாட் ஷாவுக்கு. ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தபோது மக்களவையில் கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு வந்தது. பேசத் தொடங்கிய அவர் இங்கிருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள் என்றாராம். சினமடைந்த அவையினர் சொன்னதை மீட்டுக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர். திணவு இல்லாதவர்கள் தடுமாறிப் போயிருப்பார்கள் ஆனால் பெர்னாட் ஷா என்ன செய்தார் தெரியுமா? அமைதியாக அவையினரைப் பார்த்து சரி இங்கே இருப்பவர்களில் பாதி பேர் புத்திசாலிகள் என்றாராம் லாவகமாக. அவரது பேச்சுத்திறமையைப் பார்த்து அந்த அவை வியந்தது. அவர் எழுத்துத் திறனைப் பார்த்து உலகமே வியந்தது. 

உண்மையில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து ஆங்கில இலக்கிய உலகம் சந்தித்திருக்கும் மிகச் சிறந்த நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாதான். அவருடைய நாடகங்கள் சமூக, அரசியல், சமயப் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசின. சமூக அவலங்களை ஒட்டுமொத்தமாக சாடின. திட்டமிடப்பட்ட வகுப்புவாதமற்ற சமூகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அவர் புரட்சிகரமான கருத்துகளை எவருக்கும் அஞ்சாமல் எழுதினார். அதனாலயே அவ்வபோது  அவரிடம் தலைதூக்கிய தற்பெருமையையும், ஆணவத்தையும் இலக்கிய உலகம் பெரிதுபடுத்தவில்லை. பெர்னாட் ஷா நோபல் பரிசை மட்டும் வெறுக்கவில்லை. கெளரவ பட்டம், பதக்கம், பாராட்டு விழா, புகழுரை போன்றவற்றையும் அறவே வெறுத்தார். அவருக்கு 'Order of the Merit' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது அந்த விருதை எனக்கு நானே கொடுத்துக் கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன அதனால் இப்போது அது எனக்கு தேவையில்லை என்று கூறினார் பெர்னாட் ஷா. 

தனது கடைசி நிமிடம் வரை படிப்பதையும், எழுதுவதையும் கைவிடவில்லை. தினசரி குறைந்தது ஐந்து பக்கங்கள் எழுதுவாராம். தன் வாழ்நாளில் கிட்டதட்ட 50 நாடகங்களையும், 5 நாவல்களையும் எழுதினார் அவர். நல்ல நகைச்சுவை உணர்வும், சைவ உணவே விரும்பி உண்டது அவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தன. புகைப்பிடிக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ அறவே இல்லை அதனால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார். ஆங்கில இலக்கிய உலகின் பெருமதிப்பைப் பெற்றிருந்த பெர்னாட் ஷா 1950-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் தமது 94-ஆவது வயதில் காலமானார். 

"ஒன்றுமே செய்யாமல் வெட்டியாய் கழிக்கும் ஒரு வாழ்க்கையை விட பிழைகள் செய்து வாழும் வாழ்க்கை பயன்மிக்கது, பெருமைமிக்கது".

பெர்னாட் ஷா கூறிய பல பொன்மொழிகளில் இதுவும் ஒன்று. அவர் நீண்டகாலம் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அதற்கு அவருக்கு உதவிய பண்புகள்...தோல்வியைக் கண்டு துவளாத மனோபாவமும், நகைச்சுவை உணர்வும், தீயப்பழக்கங்களை வெறுத்து ஒதுக்கியதும்தான். அந்தப் பண்புகளையும், பழக்கங்களையும் நாமும் பின்பற்றினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)


பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

11 comments:

 1. அறிய தகவல்கள் நன்றி சிம்பு...

  ReplyDelete
 2. சிறப்பாக தகவலை பதிவாக்கித் தந்தமைக்கு பாராட்டுக்கள்... மிக்க நன்றி...

  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


  அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

  ReplyDelete
 3. பெர்னாட்ஷாவை பற்றிய அறிந்த அறியாத பல தகவல்கள்! அருமை! சிறப்பான தொகுப்பு! நன்றி
  இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

  ReplyDelete
 4. பெர்னாட்ஷா அற்புதமான பதிவு.ஒரு சில கேள்விப் பட்டிருந்தாலும் பல புதிய விஷயங்களை தெரிந்துகொண்டேன்.நன்றி! உங்கள் பணி சிறப்பான பணி

  ReplyDelete
 5. பார்ரா... புகழ்ச்சி பிடிக்காத ஆளா இருந்திருக்காரே?

  ReplyDelete
 6. அருமையான பதிவு. புகழையும் மற்றும் பரிசையும் விரும்பாத மனிதராய் இருந்திருக்கிறாரே? ஆச்சரியமாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே. தொடருங்கள்

  ReplyDelete
 7. சுவாரசியமான மனிதர், விடாமுயற்சிக்கு உதாரண புருஷர்,எழுத்து பணிக்கு முழுவதுமாக தன்னை அர்பணித்தவர் ! இவரது வாழ்க்கை எவ்வளவு இயல்பாக, தூய்மையாக இருந்திருக்கிறது என்பதை உங்களின் எழுத்துக்களின் மூலம் மீண்டும் நினைவு படுத்தி கொள்ள முடிகிறது...நன்றி.

  பல மாமனிதர்களின் வரலாற்றை வெகு சிரத்தையாக தொகுத்து பலருக்கும் பயன்பட கூடிய அளவில் செய்து வரும் உங்களின் இந்த சீரிய பணி தொடர என் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்.

  ReplyDelete
 8. அருமையான வரலாற்றுத் தகவல்கள்.
  நல்ல பகிர்வு.

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.