Thursday, April 18, 2013

வில்லியம் ஹார்வி - வரலாற்று நாயகர்!

"இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிர் இருக்கும்...
அன்பே என்னை நீ நீங்கினால் ஒருகணம் என்னுயிர் தாங்காது"....

இந்த பாடல் வரிகளில் விஞ்ஞானம் பேசியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இதயம் துடிக்கும் வரைதான் உயிர் இருக்கும் என்பதும், இதயம் ஓயும்போது இரத்த ஓட்டம் நின்று போவதால் உயிரும் நின்று போகிறது என்பதும் அறிவியல் நமக்கு சொல்லும் உண்மை. ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு முன்புவரை அந்த உண்மை அறியப்படாத ஓர் ஆச்சரியமாக இருந்தது. அந்தக்காலகட்டத்தில் உயிரியல் வல்லுனர்கள்கூட இரத்த ஓட்டம் பற்றியும், இதயத்தின் செயல்பாடுகள் பற்றியும் தவறான எண்ணங்களை கொண்டிருந்தனர். உதாரணத்திற்கு நாம் உண்ணும் உணவு இதயத்தில் இரத்தமாக மாற்றப்படுகிறது என்றும், இதயம் இரத்தத்தை சூடாக்குகிறது என்றும், இரத்தநாளங்களில் காற்று நிரம்பியிருக்கிறது என்றும், இரத்தம் சிலசமயங்களில் இதயத்தை நோக்கியும், சிலசமயங்களில் இதயத்திலிருந்து வெளியேயும் பாய்கிறது என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளை கொண்டிருந்தனர். இதயம்தான் இரத்தத்தை உடல்முழுக்க பாய்ச்சுகிறது. இரத்தம் உடலிலேயே திரும்ப திரும்ப பயணிக்கிறது என்று முதன்முதலில் கண்டு சொன்னதன் மூலம் மருத்துவத்துறையின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த ஓர் அற்புத மருத்துவரை பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். 

பதினைந்து நூற்றாண்டுகளாக நம்பபட்டு வந்தவற்றை பொய் என்று நிரூபித்து உடல்கூறியியல் உலகின் ஆக முக்கியமான நூலை எழுதிய அந்த வரலாற்று நாயகர் வில்லியம் ஹார்வி (William Harvey). 1578-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி இங்கிலாந்தில் Folkestone எனும் ஊரில் பிறந்தார் ஹார்வி. அவரது தந்தை வசதிமிக்க வியாபாரியாக இருந்ததால் புகழ்பெற்ற கிங்க்ஸ் (King's School) பள்ளிக்கூடத்திற்கும், கேம்ப்ரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி தன் மகனை படிக்க வைத்தார். பல்கலைக்கழகத்தில் அவர் அவ்வுளவாக பிரகாசிக்கவில்லை என்பதால் மருத்துவ உலகின் மிகமுக்கியமான உண்மையை அவர் கண்டுபிடிக்கப்போகிறார் என்று அப்போது அவரது பேராசிரியர்கள் எவரும் நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் பிரகாசிக்கவில்லையென்றாலும் கடுமையாக உழைக்ககூடியவர் ஹார்வி. 

1597-ஆம் ஆண்டு மருத்துவம் பயில்வதற்காக அப்போது உலகின் தலைசிறந்த மருத்துவ பல்கலைக்கழகமாக இருந்த இத்தாலியின் 'University of Padua' பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு மருத்துவ பட்டம் பெற்று இங்கிலாந்து திரும்பினார். மீண்டும் கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்று சொந்தமாக மருத்துவர் பணியாற்றத்தொடங்கினார். 1609-ஆம் ஆண்டு  St. Bartholomew's மருத்துவமணையில் அவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் சிகிச்சையளித்த நோயாளிகளிடமிருந்து பல புள்ளி விபரஙக்ளை சேகரிக்கத்தொடங்கினார். உடலில் இரத்தத்தின் வேலை குறித்தும், இரத்த ஓட்டம் குறித்தும் அதுவரை நம்பபட்டு வந்தவைகள் தவறானவை என்று அவர் நம்பினார். ஆனால் அந்த தவறுகள் அவருக்கு உடனடியாக தெரியவில்லை உண்மையை தெரிந்துகொள்ள ஆண்டுகணக்கில் ஆராய்ச்சிகள் செய்து பார்த்தார். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தவளைகள், பாம்புகள், எலிகள், முயல்கள் இப்படி பல சடலங்களை அறுத்து பொறுமையுடன் பகுப்பாய்வுகள் செய்தார். 

இரத்தம் பற்றியும், மனித உடற்கூறுகள் பற்றியும் அதுவரை எழுதபட்டிருந்தவற்றை ஒன்றுவிடாமல் கவனமாக படித்தார். இரத்த நாளங்களில் வால்வுகள் இருக்கின்றன என்பதை  Hieronymus Fabricius என்ற மருத்துவரின் மூலம் தெரிந்துகொண்டார். அந்த வால்வுகளின் பணியை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இரத்தம் ஒரே திசையில் மட்டுமே செல்வதை அந்த வால்வுகள் உறுதி செய்கின்றன என்பதை ஹார்வி உணர்ந்தார். அடுத்ததாக ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும்போதும் இரண்டு அவுன்ஸ் இரத்தத்தை அது வெளியேற்றுகிறது என்று அவர் கணித்தார். இதயம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 தடவை துடிக்கிறது. அப்படியென்றால் ஒரு நிமிடத்திற்கு 144 அவுன்ஸ் அல்லது ஒரு மணி நேரத்தில் 540 பவுண்ட் இரத்தத்தை இதயம் வெளியேற்ற வேண்டும். ஆனால் 540 பவுண்ட் என்பது சராசரி மனிதனின் எடையைக்காட்டிலும் மிக அதிகம். எனவே இரத்தம் இதயத்திலிருந்து பாய்ச்சப்பட்டு உடல் முழுவதும் ஒரே திசையில் பயணித்து மீண்டும் இதயத்திற்குள் நுழைந்து மீண்டும் பாய்ச்சப்படுகிறது என்று அனுமானித்தார்.

அதாவது இதயம் இயக்க இரத்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறது என்று ஊகித்தார். தன்னுடைய அனுமானத்தை உறுதி செய்ய அடுத்த ஒன்பது ஆண்டுகள் கடுமையாக உழைத்து இரத்த ஓட்டம் பற்றிய பல்வேறு சோதனைகளை செய்தார். தன்னுடைய கண்டுபிடிப்பை புத்தமாக வெளியிடுவதற்கு பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் அதுபற்றிய விரிவுரைகளை வழங்கத்தொடங்கினார். ஆனால் ஏளனச்சிரிப்பும், உதாசீனமும்தான் அவருக்கு அப்போது கிடைத்த பரிசுகள். 1628-ஆம் ஆண்டு தனது 50-ஆவது வயதில் "An anatomical disquisition on the motion of the heart & blood in animals" என்ற நூலை வெளியிட்டார். மருத்துவ உலகம் ஸ்தம்பித்து போனது. பதினைந்து நூற்றாண்டுகளாக நம்பபட்டு வந்தவற்றை கேலி கூத்தாக்கியதால் அது கண்டனத்திற்கும் உள்ளானது. ஹார்வியிடம் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென குறையத்தொடங்கியது. ஆனால் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதுபோல் ஹார்வியின் கூற்றை பொய்யாக்க வேண்டும் என்று நினைத்த அத்தனை பேரும் மண்ணை கவ்வத்தொடங்கினர். 

அவர் கண்டுபிடித்து சொன்னது மறுக்க முடியாத உண்மை என்பதை மருத்துவ உலகம் வெகுவிரைவில் உணர்ந்துகொண்டது. அதன்பிறகு ஹார்வியின் செல்வாக்கும், புகழும் வானம் வரை உயர்ந்தது அவருடைய மருத்துவ தொழிலும் பிரகாசிக்கத்தொடங்கியது. இதில் உண்மையிலேயே வியப்பான விசயம் என்ன தெரியுமா? அதுபோன்ற நுண்ணிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும், உறுதி செய்யவும் மைக்ரோஸ்கோப் (Microscope) எனப்படும் நுண்கருவி மிக மிக அவசியமானது ஆனால் ஹார்வியின் காலகட்டத்தில் அதுபோன்ற எந்த கருவிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. நவீன ஆராய்ச்சிகருவிகள் எதுவுமின்றி உடற்கூறியியல் வரலாற்றிலேயே ஆக பிரசித்தி வாய்ந்த உண்மைகளை அவர் கண்டுபிடித்து சொன்னது உலகம் உண்மையிலேயே போற்றிப் பாராட்ட வேண்டிய விந்தை.

ஆரம்பத்தில் அவரது கூற்றை வன்மையாக எதிர்த்த ஐரோப்பிய ராயல் மருத்துவகழகம் பின்னர் அந்த மருத்துவமேதைக்கு தலைவணங்கியது. 1654-ஆம் ஆண்டு மருத்துவத்துறையிலேயே ஆக உயரிய கெளரவத்தை அவருக்கு வழங்க விரும்பியது. கழகத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொண்டது. ஆனால் புகழையோ அங்கீகாரத்தையோ எதிர்பார்க்காத ஹார்வி வயது காரணமாக அந்த கெளரவத்தை மறுத்து விட்டார். அதற்கு பதிலாக அவர் அந்தக்கழகத்திற்கு நல்ல புத்தகங்கள் அடங்கிய நூலகம், அரும்பொருளகம் மற்றும் ஆராய்ச்சி அறை கொண்ட ஒரு புதிய கட்டடத்தைக் கட்டிக்கொடுத்தார். உடற்கூறியல் உலகின் மாபெரும் கண்டுபிடிப்பை செய்த ஹார்வியின் உடலை முடக்குவாதம் தாக்கியது. 1657-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் நாள் 79-ஆவது வயதில் அந்த மேதையின் உயிர் பிரிந்தது.

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைந்தாலும் ஹார்வி தம்பதியிருக்கு பிள்ளைப்பேறு கிட்டவில்லை. எனவே சொத்து முழுவதையும் அவர் ராயல் மருத்துவக்கழகத்திற்கு எழுதி வைத்தார். தொய்வில்லாத ஆராய்ச்சிகள் மூலம் இயற்கையின் இரகசியங்களை கண்டறியுமாறு ராயல் மருத்துவக்கழக உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு கழகத்தில் ஆண்டுதோறும் ஒரு விரிவுரை நிகழவும் நிதி ஒதுக்கினார். சுமார் 350 ஆண்டுகளாக இன்றுவரை ஆண்டுதோறும் ஹார்வி விரிவுரை நிகழ்த்தப்படுகிறது. மருத்துவ உலகம் மாமனிதருக்கு செய்யும் வருடாந்திர அஞ்சலி அது. மனித உடல் பற்றிய இரகசியங்களையும், உண்மைகளையும் கண்டறிந்து நமது அறிவை பெருக்கிக்கொள்வதன் மூலம் நோய்களையும், வலியையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதே வில்லியம் ஹார்வியின் வாழ்நாள் இலக்காக இருந்தது.

வகுத்துக்கொண்ட இலக்கை நோக்கி சிந்தனைத் தெளிவோடும், செயல்திறத்தோடும், கடும் உழைப்போடும், விடாமுயற்சியோடும் பயணித்ததால்தான் அந்த மனிதரின் வாழ்க்கை அர்த்தமுள்ளதானது, அவருக்கு மருத்துவ உலகம் என்ற மிகப்பெரிய வானமும் வசப்பட்டது. இன்னும் மனுகுலம் கண்டுபிடிக்கப்பட வேண்டிய உண்மைகளும், அடைய வேண்டிய இலக்குகளும் எத்தனையோ இருக்கலாம். அவற்றை நோக்கி தன்னம்பிக்கையொடு பயணிக்கும் எவருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் வில்லியம் ஹார்வி நமக்கு சொல்ல விரும்பும் இதயப்பூர்வமான உண்மையாக இருக்கும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

7 comments:

 1. வில்லியம் ஹார்வி பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி...

  படிக்கும் குழந்தைகளுக்கும் உதவும் என்பதால் நண்பர்களுக்கும் பகிர்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 2. வரலாற்று நாயகரைத் தெரிந்து கொள்ள வைத்த பதிவுக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 3. //வாழ்க வளமுடன்//

  Thelindha neerodayaga :)

  ReplyDelete
 4. அருமையான பதிவு. இதே போலே பெரியம்மைக்கான மருந்தை வேறு யாரும் முன்வராததினால் தன் உடம்பிலேயே செலுத்திக்கொண்டு கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றியவரான எட்வர்ட் ஜென்னெரைப் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள். நாம் மறந்து விட்ட மருத்துவ மேதைகளை அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.