Monday, October 28, 2013

பிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்!

உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் 1901-ஆம் ஆண்டு அமைதிக்கான முதல் நோபல் பரிசை வென்ற பிரெஞ்சு நாட்டவரான பிரெட்ரிக் பாஸி (Frederic Passy). அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தைத் தோற்றுவித்ததற்காக அதே ஆண்டில் ஹென்றி டுனான்டிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருவருமே அமைதிக்காக அடித்தளமிட்டவர்கள் என்றாலும் அவர்களின் அணுகுமுறையில் வேறுபாடு இருந்தது. 

உலக நாடுகளிடையே போர் ஏற்படுவது தவிர்க்க முடியாதது அத்தகைய போர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்ற அடிப்படையில்தான் செஞ்சிலுவை சங்கத்தைத் தொடங்கினார் ஹென்றி டுனாண்ட். ஆனால் பிரெட்ரிக் பாஸி ஒருபடி மேலே சென்று நாடுகளிடையே போர் ஏற்படுவதற்கான அடிப்படைகளை அடையாளம் கண்டு போர்களை அறவே ஒழித்து நாடுகளிடையே சமாதானம் நிலவ வழிவகை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால பெரும் முயற்சி மேற்கொண்டு போரை விரும்பாத நாடுகளை ஒன்றாக அணி சேர்த்து நடுநிலை சமாதான நாடுகள் எனும் அனைத்துலக அமைப்பை உருவாக்கினார். உலக அமைதிக்காக கிட்டதட்ட வாழ்நாளின் பாதியை அர்ப்பணித்த அந்த உன்னத மனிதனின் வாழ்க்கையை தெரிந்துகொள்வோம். 

1822-ஆம் ஆண்டு மே மாதம் இருபதாம் நாள் பாரிஸில் (Paris) பிறந்தார் பிரெட்ரிக் பாஸி (Frederic Passy). கல்வியில் சிறந்து விளங்கிய பாஸி சட்டத்துறையில் பட்டம் பெற்று தனது 22-ஆவது வயதில் அரசாங்க சேவையில் ஓர் எழுத்தராக சேர்ந்தார். அந்த வேலை அவ்வுளவு பிடிக்காமல் போனதால் பத்திரிகை நிருபராகவும், பொருளாதார கட்டுரைகள் எழுதும் எழுத்தாளராகவும் சில ஆண்டுகள் பணி புரிந்தார் பின்னர் கல்லூரி ஒன்றில் பொருளாதார விரிவுரையாளராக பணியாற்றினார். அந்த காலக்கட்டத்தில்தான் பிரான்சு, இங்கிலாந்து, துருக்கி ஆகிய மூன்று நாடுகள் இணைந்து ரஷ்யா மீது போர்த்தொடுத்தன. பலத்த உயிருடல் சேதத்தை ஏற்படுத்திய அந்த 'கிரைனியன் போர்' பாஸியின் மனத்தை வெகுவாக பாதித்தது. அதுமட்டுமல்லாமல் இன்னொரு உண்மையும் அவருக்கு வேதனையை உண்டாக்கியது. 

ஒருமுறை பிரான்சில் பயங்கரமான வெள்ளம் ஏற்பட்டு பலத்த உயிர் சேதமும் பொருளிழப்பும் ஏற்பட்டது. அந்த வெள்ளம் விளைவித்த சேதத்தை உணர்ந்த மக்கள் அது போன்ற இன்னொரு வெள்ள சேதம் ஏற்படுவதற்கு முன் அதிலிருந்த தப்ப பல முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகளை நிறைவேற்றினர். ஆனால் அதே பிரெஞ்சு மக்களும், பாதிக்கப்பட்ட மற்ற நாட்டு மக்களும் கிரைனியன் போரினால் ஏற்பட்ட உயிருடல் மற்றும் பொருள் சேதங்களைப்பற்றி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. போர் என்பது தவிர்க்க முடியாதது ஒன்று என மக்களும், அரசும் கருதியதே அந்த அலட்சியபோக்குக்கு காரணம் என்று நம்பினார் பாஸி. இயற்கை பேரிடர்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மனுகுலம் எடுக்கும் முயற்சிகளை செயற்கை போர்களுக்கு எதிராகவும் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் அவர். அதனால் 'அனைத்துல சமாதான இயக்கம்' ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் எழுந்தது. 

அனைத்துலக சமாதானம் குறித்து அவர் பல பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதினார். பொதுக்கூட்டங்களில் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். தனி அமைப்புகளிடமும் மட்டுமின்றி மற்ற நாட்டு அமைச்சுகளுடனும் தொடர்பு கொண்டு சமாதானத்திற்காக குரல் கொடுத்தார். 1867-ஆம் ஆண்டு 'சமாதான சங்கம்' ஒன்றை தொடங்குவது குறித்து அவர் பாரிஸ் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வெளியிட்டார். பொதுமக்களிடையே அதற்கு பலத்த ஆதரவு கிடைக்கவே கட்டுரை பிரசுரமான அறுபதே நாட்களில் 'பிரெஞ்சு சமாதான இயக்கம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார் பாஸி. அந்த அமைப்பின் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1870-ஆம் ஆண்டு பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையே போர் மூண்டது. அந்தப் போரை தடுக்க தனது சமாதான இயக்கம் மூலம் எவ்வுளவோ முயன்றார் பாஸி. 

பத்திரிகைகளில் எழுதியதோடு மட்டுமின்றி இருநாட்டு அரச தந்திரிகளை பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் அது பலனிக்காமல் போகவே போர் மூண்டது. அதில் வேதனையான உண்மை என்னவென்றால் போர் கூடாது என்று நல்லெண்ணத்துடன் போராடிய பாஸியையும், அவரது இயக்க உறுப்பினர்களையும் கண்டால் சுட்டுத்தள்ளுமாறு இரு நாட்டு வீரர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதனால் போரின்போது பாஸி தலைமறைவாக இருக்க நேரிட்டது. போர் முடிந்ததும் மீண்டும் அவர் தையரியமாக சமாதான பணிகளில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது சமாதான பணியை விரிவாக்க அது ஒரு நல்ல அடித்தளமாக அமைந்தது. அவரது தீவிர முயற்சியால் அமெரிக்காவுக்கும், பிரான்சுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல மற்ற நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நல்லதொரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் பாஸி. 

பாஸியின் பெரும் முயற்சியால் 1889-ஆம் ஆண்டு பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், ஹங்கேரி, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி Inter-Parliamentary Union என்ற அனைத்துலக பாராளுமன்றத்தை உருவாக்கினர். அதன் மூன்று தலைவர்களில் ஒருவராக பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சங்கம் நாடுகளுக்கிடையே உருவாகும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நடுநிலை சங்கமாக இன்றும் செயல்பட்டு வருகிறது. 1890-ஆம் ஆண்டு பல நாட்டு சங்கங்களின் பிரதிநிதிகளை பாரிசில் ஒன்றுகூட்டினார் பாஸி. அந்தக்கூட்டத்தில் சமாதானமே என்றும் நிம்மதியைத் தரும் எனவே ஒவ்வொருவரும் உயிர் மூச்சு உள்ளவரை சமாதானத்திற்காக போராட வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்தார். அந்த சொற்பொழிவின் விளைவாக அடுத்த ஆண்டே நிரந்தர 'சமாதான தலைமையகம்' உருவானது.     

உலக அமைதிக்காக கிட்டதட்ட வாழ்நாளின் பாதியை செலவழித்த பாஸியை 'அமைதியின் தூதுவன்' என்று உலகம் போற்றியது. அவர் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியால் உலக நாடுகளில் பெரும்பாலானவை போர்களை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. உலக அமைதிக்காக தனியொரு மனிதனாக கூக்குரல் கொடுத்த பாஸிக்கு அமைதிக்கான முதல் நோபல் பரிசை வழங்கி நன்றியை தெரிவித்துக்கொண்டது உலகம். அப்போது அவருக்கு வயது 79 அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற அந்த வயதிலும் அமைதி மீதான அவரது ஆர்வம் தளரவில்லை. அடுத்த பதினொரு ஆண்டுகளும் அமைதியின் முக்கியத்துவம் பற்றி தொடர்ந்து எழுதினார், கூட்டங்களில் பேசினார். 1912-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் நாள் தொன்னூறாவது வயதில் அந்த அமைதிப்புறாவின் உயிர் பிரிந்தது. 

பாஸியின் கொள்கையைப் பின்பற்றிதான் இன்று அணிசேரா நாடுகளின் இயக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அமைதிக்காக ஒருவர் குரல் கொடுத்தே இவ்வுளவு நன்மை விளைந்திருக்கிறதென்றால் நாம் ஒவ்வொருவரும் முயன்றால் நம் உலகம் யுத்தமில்லாத பூமியாக மாறாதா? என்ற சிந்தனைதான் பாஸியின் வாழ்க்கை நமக்கு விட்டு சென்றிருக்கும் காணிக்கை. மனுகுல சமாதானத்திற்காக பாடுபட வேண்டும் என்ற உயரிய எண்ணமும், அதற்கான அயராத உழைப்பும்தான் பிரெட்ரிக் பாஸிக்கு அமைதி என்ற வானத்தை வசப்படுத்தின. பாஸியைப் போன்ற உயரிய எண்ணமும், கடும் உழைப்பும், விடாமுயற்சியும் நமக்கு நோபல் பரிசை பெற்றுத்தராவிட்டாலும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்தும். 

(தகவலில் உதவி - நன்றி திரு. அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

3 comments:

 1. வாழ்விற்கு உரமூட்டும் பதிவுகள் என்றும் வரலாற்றுக்கும், வரலாறு படைக்கத் துடிக்கும் மாணவனிற்கும் வரமானவை தான்... மேலும் வளர்க!..

  ReplyDelete
 2. Hii, This is Great Post !
  Thanks for sharing with us!!!!


  Digital marketing agency in chennai
  Best SEO Services in Chennai
  seo specialist companies in chennai
  Best seo analytics in chennai
  Expert logo designers of chennai
  Brand makers in chennai

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.