Tuesday, August 21, 2012

மார்ட்டின் லூதர் கிங் - வரலாற்று நாயகர்!

மனுகுல நாகரிகத்திற்கு முரண்பாடான சில விசயங்கள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விந்தை என்னவென்றால் எப்போது நாகரிகம் தோன்றியதோ அப்போதே அநாகரிகமும் தோன்றத் தொடங்கி விட்டன. தொன்று தொட்டே இருந்து வந்த அநாகரிகங்களில் ஒன்று கருப்பினத்தவரை கொத்தடிமைகளாக நடத்தியது. ஆபிரகாம் லிங்கன் என்ற உன்னத மனிதனின் முயற்சியால் கருப்பினத்தவரின் அடிமைத்தலை அறுத்தெரியப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அமெரிக்காவில் அடிமைத்தலை அகன்றதே தவிர அங்கு கருப்பினத்தவருக்கு சம உரிமை மறுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும் நிலவிய அந்த அவலத்தைப் போக்க அரும்பாடுபட்ட ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் அன்னல் காந்தியடிகளின் அகிம்சை வழியைப் பின்பற்றி கருப்பினத்தவர்களின் சம உரிமைக்காகப் போராடி உயிர் துறந்த மார்ட்டின் லூதர் கிங்.  

1929-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் அமெரிக்காவின் அட்லாண்டா (Atlanta) நகரில் பிறந்தார் மார்ட்டின் லூதர் கிங். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர் சமயக்கல்வி கற்றார். பின்னர் அவர் ஒரு ( Dexter Avenue Baptist Church) பாப்டிஸ்ட் பாதிரியானார். கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்ட அமெரிக்க சூழ்நிலை அவரது மனதை எப்போதுமே அரித்துக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் முன்னேற்றத்தில் உலகுக்கே முன்மாதிரியாக விளங்கிய அமெரிக்காவில் அதன் குடிமக்களுக்கு சரிசமமாக வாழும் சூழ்நிலை இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. கருப்பினத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்த்தனர் வெள்ளையர்கள். உணவகங்கள், பேருந்துகள், பொழுதுபோக்கு இடங்கள் என எந்த பொது இடத்திலும் கருப்பர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடங்களை மட்டும்தான் கருப்பர்கள் பயன்படுத்த வேண்டும். 


ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு வெள்ளையர்களின் இடங்களுக்கு அவர்கள் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? அந்த அநாகரிகமான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை நிச்சயம். எவ்வுளவு காலம்தான் பொறுத்துக்கொள்வது. 1955-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி கருப்பர்களின் பொறுமை எல்லைக் கடக்கும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த தினம் ரோஸா பார்க்ஸ் (Rosa Parks) என்ற கருப்பின பெண் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தார். ஒரு நிறுத்தத்தில் சில வெள்ளையர்கள் அதே பேருந்தில் ஏறினர். அப்போது அவர்கள் அமர இருக்கை இல்லாததால் ரோஸா பார்க்கை அந்த இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு அதட்டினார் பேருந்து ஓட்டுனர். எழுந்திருக்க மறுத்ததால் ரோஸா பார்க் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் அவமானங்களைத் தாங்கிக்கொண்டிருந்த கருப்பினத்தவர்கள் இம்முறை விடுவதாக இல்லை. ரோஸா பார்க் சம்பவத்தைக் கண்டித்து சுமார் 50000 கருப்பர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடும் நடத்தினர். இருப்பினும் கருப்பினத்தவர்களின் கொந்தளிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஒரு ஆர்ப்பாட்டமாக அது அமைந்தது.

மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மகாத்மா காந்தியின் மீதும், அவரது அகிம்சைப் போராட்டத்தின் மீதும் அளவு கடந்த மரியாதை உண்டு. அன்னல் காந்தியின் உருவப்படத்தை அவர் வீட்டில் மாட்டி வைத்து வணங்கினார். காந்தியடிகளின் வழிகளில் அதிக நம்பிக்கை வைத்த அவர் தனது போராட்டங்களில் வன்முறை தலையெடுக்காமல் பார்த்துக் கொண்டார். சம உரிமைக்கோரும் இயக்கங்களில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். தனது இயக்கத்தை மிக கன்னியமாக அவர் நடத்திய முறையைப் பார்த்து சில வெள்ளையினத்தவரும்கூட அவரைப் பாரட்டினர். ஆனால் பல எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவரது வீட்டிற்கெதிரே குண்டுகள் வீசினர். அமெரிக்காவின் ரகசிய போலீசார் அவரை தற்கொலை செய்துகொள்ளுமாறு மிரட்டியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் தனது அமைதிப் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தார் லூதர் கிங்.

அறவழியில் போராடுவது பற்றி அறிந்து கொள்ள 1959-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார் லூதர் கிங். அங்கு ஒருமாத காலம் தங்கியிருந்து காந்தியடிகளோடு பழகிய தலைவர்களிடம் அகிம்சை போராட்டத்தைப் பற்றி கேட்டறிந்தார். மிகச்சிறப்பாகவும் உருக்கமாகவும் பேசக்கூடியவர் லூதர் கிங் அவரது பேச்சுகள் எழுச்சியூட்டியதே தவிர வன்முறையைக் கிளறியது இல்லை. 1963-ஆம் ஆண்டு வாஷிங்டெனில் மிகப்பெரிய அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார் லூதர் கிங். சுமார் இருநூற்றி ஐம்பதாயிரம் பேர் அங்கு திரண்டனர். அந்த அமைதிப் பேரணியில்தான் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார் மார்ட்டின் லூதர் கிங். உலகை மெய் சிலிர்க்க வைத்த பேச்சில் அவர் இவ்வாறு கூறினார்.....

"எனக்கு ஒரு கனவு உண்டு ஒருநாள் இந்த தேசத்தில் என்னுடைய நான்கு பிள்ளைகளும் அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். என்றாவது ஒருநாள் வெள்ளையின சிறுவர்களும், கருப்பின சிறுவர்களும் கையோடு கை கோர்த்து நடக்க வேண்டும்".


அந்தப் பேரணி நடந்த அடுத்த ஆண்டே 1964-ஆம் ஆண்டு சம உரிமைக்காகப் பாடுபட்ட லூதர் கிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேறு வழியில்லாமல் 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம் அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமை சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். எல்லோரின் மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். ஆனால் மற்ற இனத்தவரும் அவரது இனத்தில் சேர்ந்தது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். அந்த ஆத்திரம்தான் லூதர் கிங்கின் உயிருக்கு உலை வைத்தது. 

டென்னசியில் (Tennessee) 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. இந்தியாவில் வென்ற அகிம்சை அமெரிக்காவிலும் வென்றது. ஆனால் காந்தியடிகளுக்கு கிடைத்தது போலவே மார்ட்டின் லூதர் கிங்கிற்கும் துப்பாக்கி குண்டுதான் வெகுமதியாக கிடைத்தது. லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த மாமனிதனின் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்படுகிறது. அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாள். 


சமூக அநீதிகளை எதிர்த்து தைரியமாக போராடியவர்களின் உயிர்களை சில நாச சக்திகள் அழித்தாலும் வரலாற்றில் அவர்களுக்கென்று உள்ள இடத்தை யாராலும் அழிக்க முடியாது. அகிம்சை வெல்லும் என்பதை இந்தியாவில் நிரூபித்தார் காந்தியடிகள். மார்ட்டின் லூதர் கிங் அதே உண்மையை அமெரிக்காவில் நிகழ்த்திக் காட்டினார். லூதர் கிங்கைப் போல் அகிம்சை என்ற அறவழியில் சமூக அநீதிகளை அழிக்க முனைவோருக்கு நிச்சயம் வரலாறும், அந்த வானமும் வசப்படும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

7 comments:

 1. பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

  சேமித்துக் கொண்டேன்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. maanavan!

  neengal oru peraasiriyar!
  arumaiyaana varalaatru pathivu!

  aanaalum americaavil theendaamai innum irukkirathu...

  ReplyDelete
 3. lot of new information thanks........

  ReplyDelete
 4. மார்ட்டின் லூதர் கிங் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தாலும் இன்று நிறைய தெரிந்துகொண்டேன் நன்றி நண்பா...

  ReplyDelete
 5. கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்! :-)

  ReplyDelete
 6. சிறப்பான ஒரு தலைவரை பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்குநன்றி! அருமையான பதிவு!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  ReplyDelete
 7. மார்ட்டின் லூதர் கிங் சிலறிந்து இருந்தாலும் இப்போது அவரைப் பற்றி பலவற்றை அறிந்து கொண்டேன். சிறப்பான பகிர்வு.பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள் நண்பரே.

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.