Monday, April 30, 2012

புரட்சி நாயகன் லெனின் - வரலாற்று நாயகர்!

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் வரலாறு இதுவரை சந்தித்திருக்கும் மிகப் பெரிய புரட்சிகளுள் ஒன்று அதன் உச்சகட்டத்தை தொட்ட தினம் அன்று. நாட்டில் தலை விரித்தாடிய பசிக்கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியம் ஒரு வரலாற்று நாயகரின் நெஞ்சத்திலும், வயிற்றிலும் தீயாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் அந்த தீ விஸ்வரூபம் எடுத்து நாட்டின் இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து ஒரு புதிய ஆட்சியை அமைக்க உதவியது. 'நவம்பர் புரட்சி' என்று வரலாறு அழைக்கும் அந்த புரட்சியை சந்தித்த நாடு ரஷ்யா.
"இந்த நாட்டிற்க்கு இப்போதைய தேவை யுத்தம் இல்லை, அமைதியும், உணவும், வேலையும்தான். உலகப் போரிலிருந்து ரஷ்யா உடனடியாக விலக வேண்டும். பசித்த வயிற்றுடன் நம் இராணுவத்தினர் இனிமேல் வீம்புக்காக போர் முனைகளில் சாகக்கூடாது. மக்களுக்கு அமைதி, உண்ண உணவு, விவசாயம் செய்ய நிலம், இந்த மூன்றுதான் இந்த நாட்டின் இப்போதைய தேவை".

என்ற ஆவேசமான பிரச்சாரத்துடன் தன் நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி அந்த நவம்பர் புரட்சிக்கு வித்திட்டு ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர வழி வகுத்த அந்த வரலாற்று நாயகர் லெனின். கம்யூனிச சித்தாந்தம் கார்ல் மார்க்ஸின் சிந்தனையில் உதித்த ஒன்று என்றாலும் அந்த சித்தாந்தத்தை வரலாற்றில் முதன் முதலில் செயல்படுத்தி காட்டிய புரட்சி வீரர் லெனின்தான். 

1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் ரஷ்யாவின் வால்கா (Volga River) நதிக்கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் (Simbirsk) எனும் நகரத்தில் பிறந்தார் விளாடிமிர் இலீச் உல்யானவ் (Vladimir Ilyich Ulyanov) என்ற லெனின். அந்த நகரம் இப்போது லெனினின் நினைவாக உல்யானவ்ஸ் (Ulyanov's) என்று அழைக்கப்படுகிறது. லெனினுக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர். அவரது தந்தை நம்பிக்கைக்குரிய அரசாங்க அதிகாரியாக இருந்தாலும், லெனினின் மூத்த சகோதரர் அலெக்ஸாண்டர் முற்போக்கு கொள்கையும், தீவிரவாத கொள்கையும் உடையவராக இருந்தார். அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஷா மன்னன் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாதவனாக இருந்தான். 

மன்னனைக் கொல்வதே ரஷ்ய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க ஒரே வழி என்று நம்பிய அலெக்ஸாண்டர் அதற்காகத் திட்டமிடத் தொடங்கினார். அந்தத் திட்டத்தை அறிந்த மன்னனின் அதிகாரிகள் அலெக்ஸாண்டரையும், அவரது நண்பர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி 1887-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் அவர்களை தூக்கிலிட்டுக் கொன்றனர். அப்போது லெனினுக்கு வயது பதினேழுதான். சிறு வயதிலிருந்தே தன் அண்ணனோடு நெருங்கிப் பழகியவர் லெனின். பெற்றோர் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். ஆனால் அலெக்ஸாண்டருக்கும், லெனினுக்கும் மதப்பற்று இருந்ததில்லை. குடும்பம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயம் செல்லும்போது அவர்கள் இருவர் மட்டும் ஆலயம் செல்ல மறுத்தனர். பிள்ளைகளின் சுதந்திரத்தில் பெற்றோர் தலையிட விரும்பாததால் குழந்தைப் பருவத்திலிருந்தே புதுமைக் கருத்துகளோடும், சுயமாக சிந்தித்து செயல்பட்டு முடிவெடுக்கும் வாய்ப்போடும் வளர்ந்தார் லெனின்.


விளையாட்டிலும், படிப்பிலும் பள்ளியில் முதல் மாணவனாக திகழ்ந்த அவர் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். அண்ணனின் மரணம் அவரை பெரிதாக பாதித்தாலும் தன் நாட்டுக்கு புதிய ஆட்சி தேவை என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றி வளரத் தொடங்கியது. கஸான் நகரில் உள்ள (Kazan University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பயின்றார் லெனின். ஒரு தீவிரவாதியின் தம்பி என்று கூறி முதலில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தது பல்கலைக்கழகம். ஆனால் அவரது கல்வி தேர்ச்சியைக் கண்டு பின்பு மனம் மாறி ஏற்றுக்கொண்டது. பல்கலைக்கழகத்தில் தன்னுடம் படித்த முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் லெனினை பல்கலைக்கழகம் வெளியேற்றியது. ஆனால் வைராக்கியத்துடன் சுயமாகவே படித்து 1891- ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்றார் லெனின்.

அந்தக் காலகட்டத்தில் தான் கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற 'மூலதனம்' என்ற நூலை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் கருத்துகளை அவர் பரப்பத் தொடங்கினார். அதனை அறிந்த ஷா மன்னன் லெனினை கைது செய்து மூன்று ஆண்டு சிறை தண்டனையுடன் ஷைபீரியாவுக்கு நாடு கடத்தினான். தண்டனை முடிந்ததும் 1900-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்ற லெனின் அங்கிருந்து ஒரு பத்திரிக்கை நடத்தத் தொடங்கினார். அடுத்த பதினேழு ஆண்டுகள் அவர் ஐரோப்பாவிலேயே தங்கியிருந்து ஷா மன்னனின் கொடுங்கோன்மை பற்றியும், ரஷ்ய தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நிறைய எழுதினார். லெனினின் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.  


ஷா மன்னனின் ஆட்சியில் நிலக்கரி தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஒரு ரொட்டித் துண்டுக்காக மக்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொல்லும் அளவுக்கு உணவு பஞ்சம் கோர தாண்டவம் ஆடியது. மன்னன் தன் மனைவி அலெக்ஸாண்ட்ராவின் கைப்பாவையாக விளங்கினான். மனைவியோ ரஷ்புட்டின் என்ற காமுக சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்தாள். மன்னனும், ராணியும் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் இருந்ததால்தான் மன்னனைக் கொல்ல திட்டம் தீட்டினார் லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர். தங்கள் பிரச்சினைகளை சொல்ல அரண்மனை நோக்கி ஊர்வலமாக சென்ற அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். பொறுத்தது போதும் என்று ஒரு தேசமே பொங்கி எழுந்தது. 

1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீதிகளில் திரண்ட ரஷ்ய மக்கள் மன்னனுக்கு எதிராக எழுப்பிய கோஷங்களால் ரஷ்யாவே அதிர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிதவாத சோசியலிஸ்ட் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றியது. பெரும் கோபத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஷா மன்னனையும், அவனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர். ஆனால் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களாலும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லை. ஷா மன்னன் மறைந்தாலும் நாட்டின் அவலங்கள் மறையவில்லை. அதுதான் சரியான தருணம் என்று நம்பிய லெனின் தன் தாய்நாடு நோக்கி புறப்பட்டார். அவருடைய சகாக்கள் உருவாக்கியிருந்த செஞ்சேனியைக் கொண்டு அதே ஆண்டு அதாவது 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை (Petrograd) சுற்றி வளைத்தது லெனினின் படைகள். 


இடைக்கால ஆட்சியின் வீரர்கள் துப்பாக்கிகளை கீழே போட்டு விலகி நிற்க, ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல், வன்முறை நிகழாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் லெனின். ரஷ்யாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்தது. பிரச்சாரத்தில் கூறியிருந்ததைப் போலவே ஆட்சிக்கு வந்த மறுநாளே நில பிரபுக்களின் விளை நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார் லெனின். தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. லெனின் ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்த பிறகுதான் பெரும்பாலான நாடுகளில் கம்யூனிசம் பரவத் தொடங்கியது. கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவர் பின்பற்றினாலும் அடக்கு முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார். 

நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. தனது புரட்சிகரமான கருத்துகளை அவர் புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. 1922-ஆம் ஆண்டு மே மாதம் லெனினை முடக்குவாதம் தாக்கியது. உடல் செயலிழந்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் தனது 54-ஆவது வயதில் அவர் காலமானார். அவரது பதப்படுத்தபட்ட உடல் இன்றும் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அடக்கு முறையையும், முறையற்ற ஆட்சியும் நடந்தபோது நம்மால் என்ன செய்ய முடியும்? என்று மற்றவர்களைப்போல் லெனினும் ஒதுங்கியிருந்திருந்தால் அவரால் வரலாற்றில் அவ்வுளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. 


கம்யூனிசம் கொள்கைகளின் நிறை, குறைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், எல்லொருக்கும் வேலை கிடைக்க வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றும் சிந்தித்ததாலேயே வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றிருக்கிறார் லெனின். அவரைப் பற்றியும், ரஷ்ய புரட்சியைப் பற்றியும் வருணிக்க முனைந்த மகாகவி பாரதியார்....

மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தாள், அங்கே,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,
வாகான தோள்புடைத்தார் வானமரர்,
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
வையகத்தீர், புதுமை காணீர்!

என்று கவிதை வடித்திருக்கிறார். நம்மால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற அசைக்க முடியா நம்பிக்கையும், தன் இலக்கை நோக்கி இரவு, பகல் பாராமல் உழைக்கும் மனஉறுதியும், எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும்தான் லெனின் என்ற அந்த வரலாற்று நாயகனுக்கு வானத்தை வசப்படுத்த உதவிய பண்புகள். அதே பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் லெனினைப் போல் ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியாவிட்டாலும், குறைந்தது நம் தலையெழுத்தையாவது மாற்றிக் கொள்ளலாம். நாம் விரும்பும் எந்த வானத்தையும் வசப்படுத்திக் கொள்ளலாம்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

7 comments:

  1. [co="green"]நீ நடத்து ராசா....[/co]

    ReplyDelete
  2. ஆச்சிரியமான தகவல்கள் 'புரட்சி தலைவர்' லெனினை பற்றி, பகிர்வுக்கு நன்றி திரு.மாணவன்..!

    ReplyDelete
  3. அறிய வேண்டிய விசயத்தை அறியக் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. 'புரட்சி தலைவர்' லெனினை பற்றி, பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. //தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் //

    பொம்பள புள்ளைக்கு போய் லைக் போட, சாட் பன்ன, பொன்னான பணி தொடரட்டும்னு எல்லாம் சொல்ல டைம் இருக்கும். ஆனா பதிவு எழுதினா லிங்க் கொடுடா சொன்ன அதை கொடுக்க டைம் இருக்காது. கேட்டா இவரு பிஸி.... நாங்களா இவரு சாட் ஸ்டேட்டஸ் மெஸேஜ் பார்த்து போய் படிக்கனும்...

    (அடுத்த முறை லிங்க் வரவில்லைனா இதைவிட கேவலமா மொத்த கும்மி டீமும் திட்டும்)

    ReplyDelete
  6. // நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள், //

    உன்னுடைய வரலாற்று பதிவுகள் எல்லாமே நிறைதான். உன் ஆழ்ந்த உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் பாராட்டுகள்... :)

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.